கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில….
- வில் வித்தையில் கெட்டிக்காரன்.
- சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன்.
- தானம் செய்வதில் சிறந்தவன்.
- தான் பிறந்த குலம், பெற்றவர்களின் பெயர் தெரியாதலால் பல இடங்களில் அவமானத்துக்கு உள்ளானவன்.
- மஹாபாரத போரில் எதிரியின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டவன்.
மேலும் பல பேருக்கு நடிகர் சிவாஜி நடித்த படமும் நினைவுக்கு வரும். ஆனால் நம் குழந்தைகள் கர்ணனை எப்படி புரிந்துகொள்வார்கள். கர்ணனுக்கு நேர்ந்த அவமானங்களையும் மற்றும் பல நிகழ்வுகளையம் எப்படி குழந்தைகளுக்கு சொல்லுவது என்ற தயக்கம் வரலாம். இந்த பதிவில் கர்ணனின் கதையை நம் குழந்தைகளுக்கு இப்படியும் சொல்லலாம் என்பதை மகள்-தந்தை உரையாடல் வடிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
நந்தனா என்ற 10 வயது சிறுமி மிக மகிழ்ச்சியுடன் வீட்டுற்குள் ஓடி வந்தாள். “அப்பா நான் இன்று என் தோழியுடன் புதிய விளையாட்டு விளையாடினேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த விளையாட்டின் பெயர் பூப்பந்து (Badminton). அந்த இடத்தில் சிலரது படங்களை சுவற்றில் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்கள் நிறைய பதக்கங்கள், கோப்பைகள் வென்றிருக்கிறார்களாம். அவர்களின் பெயர் சாய்னா நேவால் (Saina Nehwal) மற்றும் பி.வி.சிந்து (PV Sindhu). எனக்கு அவர்களை போல் நன்றாக விளையாடி நிறைய பதக்கங்களை வென்று எல்லோருடைய பாராட்டுகளையும் பெறவேண்டும் என்ற ஆசை வருகிறது” என்று தன் அப்பாவிடம் கூறினாள்.
மகளின் ஆர்வத்தை கண்டு வியந்த தந்தை சந்தோஷத்தில் அவளை அணைத்துக் கொண்டு “நீ கண்டிப்பாக சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வருவாய். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்
தினந்தோறும் இரவில் தன் மகளுக்கு குட்டி கதைகள் சொல்லும் வழக்கம் கொண்ட அவர் “நந்தனா, உனக்கு நிறைய மஹாபாரத கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்று அதே மகாபாரத்தில் கர்ணன் என்ற ஒரு மாவீரன் பற்றிய கதை சொல்லப்போகிறேன். அவன் சிறு வயதில் உன்னை போல் விளையாட்டில் ஆர்வமுடையவன். முக்கியமாக வில் எய்வதில் ஆர்வமாக இருந்தான்.”
“இவனை போல் அர்ஜுனனும் வில் வித்தையை ஆர்வத்துடன் பயின்றுவந்தான். இருவர்க்கும் சிறுவயதிலிருந்தே போட்டி மனப்பான்மை வளர்ந்து கொண்டிருந்து. அர்ஜுனனை வில் வித்தையில் வென்று விட வேண்டும் என்ற வெறியுடன் கற்றுக் கொண்டிருந்தான். மேலும் வில் வித்தையின் பல நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்கு குரு பரசுராமரிடம் கல்வி கற்க சென்றான் “.
“உனக்கு நான் வில் வித்தையை கற்றுக் கொடுக்கிறேன். ஆர்வமுடைய எவரும் இந்த வித்தையை கற்றுக் கொள்ளலாம். ஆனால் உலகத்தில் சிறந்த வீரனாக வருவதற்க்கு ஒரு ஒழுக்கமான முறையை பின்பற்ற வேண்டும். நீ என்னிடம் பயிற்சி பெற சில நிபந்தனைகள் உண்டு. ஒரு குரு ஸ்தானத்தில் உள்ளவரிடம் எப்பொழுதும் பொய் சொல்ல கூடாது. அவர் கூறும் விஷயத்தை எந்தவித சந்தேகமின்றி பின்பற்ற வேண்டும். மற்ற மாணவர்களுடன் ஒப்பீடுவது தவறு. இந்த விஷயங்களை பின்பற்ற தவறினால் நீ கற்ற விதை உனக்கு தேவையான நேரத்தில் உதவாது” என்றார் பரசுராமர்.”
“கர்ணனுக்கு வில் வித்தையை மிக விரைவில் கற்று கொண்டு அர்ஜுனனை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தபடியால், பரசுராமர் சொன்ன எல்லா நிபந்தனைகளுக்கம் சம்மதித்தான். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து முந்தினம் சொல்லிக் கொடுத்த பாடத்தை பயிற்சி செய்யவேண்டும். ஆனால் கர்ணன் தன் திறமை மீது உள்ள கர்வத்தில் குருவின் நிபந்தனைகளை பின்பற்றவில்லை. “
“முடிவில் பரசுராமர் கர்ணனின் திறமையை பாராட்டினாலும் அவனுடைய அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினார். ஆனால் கர்ணன் அதை பற்றி கண்டு கொள்ளாமல் அவரை வணங்கி விடை பெற்றான்.”
“பல வருடங்களுக்கு பிறகு யுத்தம் நடந்தது. கர்ணன் அதில் அர்ஜுனனினடம் தோல்வியுற்றான். அவனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்தகளத்தில் இருந்த கிருஷ்ணரிடம் முறையிட்டான். “என் திறமையில் என்ன குறை இருந்தது. பரசுராமரிடம் பயின்ற என்னால் ஏன் அர்ஜுனனை வெல்ல முடியவில்லை” என்று கேட்டான். “
“கர்ணா உன் திறமை உலகத்திற்கே தெரியும். ஆனால் உன் திறமை உன் கண்ணை மறைத்துவிட்டது. நீ வித்தையை கற்றுக் கொள்வதற்காக பின்பற்றிய முறை தவறு. குரு பரசுராமர் கூறிய பயிற்சி முறையை பின்பற்றியதாக பொய் கூறினாய். மேலும் வில் வித்தையை நன்றாக பயல வேண்டும் என்ற எண்ணத்தை விட அர்ஜுனனை வெல்ல வேண்டும் என்ற எண்ணமே உன் மனதில் அதிகமா இருந்தது. ஒருவன் தனக்கு கொடுத்த பயிற்சி முறையை பின்பற்றாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தால் அவன் பயின்ற வித்தை தேவையான சமயத்தில் மறந்து விடும். மேலும் தான் கற்ற வித்தை மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால் அவன் கடைசியில் தோல்வியையே சந்திப்பான்” என்றார் கிருஷ்ணர்.
“நந்தனா, நீ இந்த கதையை எப்பொழுதும் மறக்கக்கூடாது. நீ ஒரு பந்தயத்தில் வெற்றியடைவதை விட நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணமே இருக்க வேண்டும். மற்றவர்களுடன் எப்பொழுதும் நம்மை ஒப்பீடுவது தவறு. மற்றவர்களின் திறமையை கண்டு பொறாமை படுவது தவறு. நீ சிறந்த வீராங்கனையாக ஆனப்பிறகும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறையவே கூடாது.”
கதை சொல்லும் ஆர்வத்தில் நந்தனா உறங்கியதை அவர் கவனிக்கவில்லை. இந்த கதை அவளுக்கு சொன்னதா இல்லை அலுவலகத்தில் பந்தயக்குதிரை போல் ஓடிக் கொண்டிருக்கும் தன்னை போலுள்ளவர்களுக்கா? என்று எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டார்.
குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா? இது என்னுடைய முந்தைய பதிவு
Nice one Ram. Story telling approach is a good one.. hoping to see more Nandhana-father stories.
thanks. will post more such stories.
Very well written. A much needed reminder – on the father daughter conversations, stories and dialogues. The role of a father is such that it needs to create a role model feel on virtues for the children.
Thanks madam.
Ram wonderful approach. In todays world we as adults fogets the moral and lagging in teaching our kids. Many parents forgot the habit of story telling the bridge for talking with kids. And in many houses the television is telling stories.
This is the need of the hour and good for both adults as well the kids
Good one sir. Simple way of conveying the message and interesting .