இது முதல் முறை அல்ல. இது கடைசியாகவும் இருக்கப் போவதும் இல்லை. எப்பொழுதெல்லாம் மனிதனின் அகம்பாவம் கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் இயற்கை அனாயாசமாக அவனை அவனின் இடத்தில் இருத்துகிறது . அவனும் சிறிது காலத்திற்கு அடக்கத்துடன் இருக்கிறான். மறுபடியும் ஆணவம் தலைக்கேறி பிறகு இதே சுழற்சியை சந்திக்கிறான். எப்பொழுது மனிதன் தன் முயற்சியை மட்டும் பெரியதாக எண்ணாமல் தன்னையும் ஒரு சக்தி இயக்குகிறது என்கிற உண்மையை உணர்கிறானோ அப்பொழுது தான் அவன் நல்வழி படுத்தப்படுகிறான்.
நம் புராணங்களில் பல சம்பவங்கள் இந்த உண்மையை நமக்கு காட்டுகின்றன. உதாரணத்துக்கு சில:
- கஜேந்திரன் என்கிற யானை நீரில் ஒரு முதலையிடம் மாட்டிக்கொண்ட போது, பல நூறாண்டுகள் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தது. யானைகளின் அரசனான அது, முதலையை விட தான் பலசாலி என்ற இறுமாப்பில் தன் சொந்த முயற்சியை நம்பியது. கடைசியில் உயிர் போகும் நிலையில் தன் தவறை உணர்ந்து ஸ்ரீமன் நாராயணனைத் துதித்து உயிர் பிச்சை பெற்றது.
- மகாபாரதத்தில் அரசவையில் துச்சாதனன் தன்னை துகிலுரிக்க முற்பட்ட போது, திரௌபதி முதலில் தன் சக்தியைக் கொண்டே போராட முயன்றாள் . பிறகே தன் இயலாமையை உணர்ந்து கண்ணனிடம் சரணடைந்து அவனால் அருள்பாலிக்கப் பட்டாள்.
- பிரஹலாதன் சரித்திரம் சிறிது மாறுபட்டது. அவன் பிறந்தது முதலே அனைத்தும் கடவுள் மூலமே நடக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்ததால் தன் தந்தை ஹிரண்யகசிபுவின் எந்த சதியும் அவனை பாதிக்கவில்லை. ப்ரஹலாதனின் நிலையே மிகச் சிறந்த நிலையாகும்.
நாம் கடைசி நிலையை அடையாவிட்டாலும் குறைந்த பட்சம் கஜேந்திரன் அல்லது திரௌபதியின் நிலையை அடைய முயற்சிக்கலாம். வந்திருக்கும் பெரும் துன்பம் விலக முதலில் நம் முயற்சியால் ஆவது ஒன்றும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பிரார்த்தனைகளில் பல விதம் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
தியானம்
ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை மனதில் இருத்தி தியானம் செய்யலாம். தியானம் யோகத்தின் ஒரு அங்கம் என்பதால் மன அமைதியுடன், உடல் ஆரோக்கியமும் இதனால் மேம்படும்.
இறைநாமம் எழுதுதல்
ஒரு வெற்று புத்தகத்தில், நமக்கு பிடித்தமான இறைவனின் பெயரை பல முறை எழுதலாம். கட்டமிட்ட புத்தகங்கள் கூட இதற்காக பிரத்யேகமாக கிடைக்கின்றன. இவ்வாறு எழுதிய நாம புத்தகங்களை கோயில் கும்பாபிஷேகம் போன்ற நேரங்களில் சமர்ப்பிக்கலாம்.
நாம சங்கீர்தனம்
குடும்ப அங்கத்தினர் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம சங்கீர்த்தனம் மிகச் சிறந்தது. பகவானை விட பகவான் நாமமே இன்னும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பாடத் தெரிந்தவர்கள் பக்தி பாடல்களைப் பாடலாம். அவற்றில் சில உங்கள் கவனத்திற்கு. –
மந்திரங்கள்/ஸ்லோகங்கள் சொல்வது
நமது வேத நூல்களில் குறிப்பிடப்படாத அம்சங்களே இல்லை எனலாம். ஆச்சர்யம் என்னவென்றால் இவற்றில் நோய்கிருமிகளைக் கொல்லக் கூட மந்திரங்கள் உள்ளன. யஜுர் வேதத்தில் கூறப்படும் மந்திரம் இதோ:
இந்த மந்திரத்தின் சாராம்சம் என்னவென்றால் ‘பல முனிவர்கள் அருளிய இந்த மந்திரத்தால் நான் தீங்கு விளைவிக்கும் கிருமிகளையும், அவற்றின் உறவுகளையும், அவற்றின் அரசனையும், மற்ற தலைவர்களும் கொல்லுவேன். விலங்குகளையும் மனிதர்களையும் துன்புறுத்தும் இந்த பகைவர்களை நான் இந்த மந்திரத்தின் மூலம் யமனின் வாயில் செலுத்துகிறேன்’.
ஆச்சரியமாக இல்லை?
பிற ஸ்லோகங்கள்
வந்திருக்கும் இந்த நிகழ்வில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நம் அனைவருக்கும் செலவிட நேரம் கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தை நாம் மேல் சொல்லப் பட்டிருக்கும் பிரார்த்தனைக்காக செலவழித்து உலக மக்களின் நலனுக்காக மனமுருகி வேண்டுவோம். ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே நம் குடும்பம்) என்பதே நம் சனாதன தர்மம் என்றால் உலகத்தார் எல்லாம் நம் பந்துக்கள் அல்லவா ?
Wonderful Rengarajan continue to spread our values
Thanks very much for your blessings and encouragement sir.
People who pass on divine information are considered as the light that defeats darkness.. All your articles are powerful and spreads light throughout… Thank you Ranga
Thanks very much for your kind words Bharani.