“ஒரு கையால் கோவர்தன மலையை குடைபோல் தூக்கி மக்களைக் காத்தான் கண்ணன்.” அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. இதை ஏன் கண்ணன் செய்ய நேர்ந்தது என்பதைப் பார்ப்போம்.
தன் தந்தை நந்தகோபர் மூலம் இந்திரனுக்கு செய்யப்போகும் பூஜையைப்பற்றி அறிந்துகொண்ட கண்ணன், மக்களிடம் “நாம் வனப்பகுதியில் மலைகளுக்கு நடுவில் வசிப்பவர்கள். பசுக்கள் நம் செல்வம் , கோவர்தன மலை மேகத்தைத் தடுத்து மழையைத்தருகிறது. பசுமையான இந்த நிலம் மழையாலும் நம் உழைப்பாலும் தானியங்கள் தருகிறது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள புல்வெளியில் மேயும் பசுக்கள் நமக்கு பால் தருகின்றன. நாம் வணங்க வேண்டியது நமது நிலம், பசுக்கள் மற்றும் இந்த கோவர்தன மலை, இந்திரனையல்ல.”
கண்ணன் சொன்னதைப் புரிந்துகொண்ட மக்கள் கோவர்தன மலையை வழிபடத் தயாரானார்கள். இந்திரன் இதைக்கண்டு கடுங்கோபம் கொண்டான்.
இந்திரனின் கோபத்துக்கு ஆளான ஆயர்பாடி கடும் காற்றுடன் கூடிய மழையை எதிர்கொள்ள நேர்ந்தது. மக்களையும், விலங்குகளையும் காக்கவே கண்ணன் கோவர்தன மலையை குடைபோல் தூக்கினான்.
இயற்கையை வழிபடும்படி கண்ணன் கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இயற்கையும் இறைவனும் ஒன்றே என உபனிஷத்தில் உள்ளது என சென்ற பதிவில் பார்த்தோம்.
தமிழ் இலக்கியத்தில் இயற்கையை இறைவனோடு ஒப்பிட்டு நிறைய பாடல்கள் உள்ளன. குறிப்பாக தேவாரத்தில் வரும் கோளறு பதிகம். அதன் பாடல்களையும், பொருளையும் இங்கு காணலாம்.
தமிழின் பழமையான இலக்கியம் என கருதப்படும் தொல்காப்பியத்தில் வரும் இப்பாடல் மிகச்சிறந்த உதாரணம்:
மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
திருமால் பொருந்திய வாசனை உறையும் உலகமும், சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும், வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும், வருணன் பொருந்திய பெரும் ஓசையினை உடைய உலகமும் – முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.
இந்த பாடலை சற்று கூர்ந்து கவனித்தால் தொல்காப்பியர் எவ்வாறு நம் புலன்களை நிலத்திணைகளுடன் ஒப்பிட்டுள்ளார் என விளங்கும்.
கீழுள்ள அட்டவணையில் பாடலின் பொருள் மற்றும் ஒப்பீடுகளை சுருக்கமாகக் காண்போம்:
அதிபதி (தெய்வம்) |
நிலத்திணை |
அம்சம் |
உணர்வு |
புலன் |
திருமால் |
முல்லை |
கானகம் (காடு) |
நுகர்தல் (வாசனை) |
மூக்கு |
முருகன்
|
குறிஞ்சி |
மலை |
காண்பது |
கண் |
இந்திரன் |
மருதம் |
நீர்நிலைகள் |
சுவை |
வாய் |
வருணன் |
நெய்தல் |
கடல் |
ஓசை (அலைகளின் ஓசை) |
செவி |
விரிவான விளக்கத்தை இங்கே காணலாம்.
ஐந்து நிலத்திணைகளில் நான்கை மேற்கூறிய பாடலில் பார்த்தோம். ஐந்தாவது பாலை நிலம். அதன் தெய்வம் கொற்றவை.
திருவள்ளுவர் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணத்துகிறார். அந்த அதிகாரத்தில் ஏழாவது குறள்:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மழை பொய்த்துப்போனால் பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும்.
ஆண்டாள் திருப்பாவையில் “வாழ உலகினில் பெய்திடாய்” என மழையின் அவசியத்தை உணர்த்துகிறார்.
நம் வழிபாட்டு முறையும் வாழ்க்கை முறையும் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதே. மழைக்கு மரங்கள் ஆதாரம், மழை பெய்யும் பொழுது அதை சேமித்து வைக்க நீர்நிலைகளை ஏற்படுத்தினர் நம் முன்னோர்கள்.
குழந்தைகளுக்கு நாம் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கி எவ்வாறு மக்களைக் காத்தான் என சொல்லும்போது இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதின் முக்கியத்துவத்தையும் சொல்லலாமே.
இதைப்படிக்கும்போது தங்களுக்கு ஏதேனும் கதையோ, சம்பபவமோ நினைவிற்கு வந்தால் இங்கு (Comments) பகிர்ந்து கொள்ளவும்.
Good one Krishnan. Explained well in simple terms.
Good one and need of the hour