கைசிக ஏகாதசியின் மகத்துவம்

ஏகாதசியின் பெருமை

நம் பண்பாட்டில் ஏகாதசி நாள் மிக முக்கியமானதாகும். ஏகாதசி நாள் ஒவ்வொரு பக்ஷத்திலும் பதினொன்றாவது நாளாக வருகிறது. ஒரு பக்ஷம் என்பது பௌர்ணமி அல்லது அமாவாசையில் தொடங்கி வரும் பதினைந்து நாட்களைக் குறிக்கிறது. அதாவது சந்திரனின் வளர்பிறை (சுக்ல பக்ஷம்) மற்றும் தேயும் கட்டத்தின் (கிருஷ்ண பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். இந்த நாள் பகவான் விஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஏகாதசி விரதத்தை பின்பற்றுவதன் மூலம், மோட்சம் முதலான மேலான பலன்களைப் பெற முடியும்.

ந அன்ன உதக சமம் தானம் திதி: ந ஏகாதசி சமா |
ந காயத்ர்யா: பரோ மந்த்ர: ந மாது: பரா தைவதம் ||

காயத்திரி மந்திரத்திற்கு இணையான மந்திரம் இல்லை, தாய்க்கு இணையான கடவுள் இல்லை. உணவளிப்பதை விட பெரிய தானம் இல்லை, ஏகாதசி திதிக்கு நிகரான திதி இல்லை – இவ்வாறு ஏகாதசியின் மேன்மை ஒரு ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தை ஆண், பெண், ஏழை, பணக்காரன் மற்றும் குல வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றலாம்.

கைசிக ஏகாதசி

வருடத்தில் இருபத்தாறு முறை ஏகாதசி வருகிறது. இவற்றுள் மிகவும் சிறந்தவைகளாக கொண்டாடப்படுபவை வைகுண்ட ஏகாதசி மற்றும் கைசிக ஏகாதசி ஆகும். இதில் கைசிக ஏகாதசி பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவே. முன்பொரு காலத்தில் வசித்து வந்த நம்பாடுவான் என்னும் விஷ்ணு பக்தன் கைசிகப் பண்ணில் பெருமாளை பாடியதால் இது கைசிக ஏகாதசி என்று வழங்கப்படுகிறது. நம்பாடுவானின் சரித்திரம் கைசிக மாஹாத்ம்யம் என்று அழைக்கப்படுகிறது.

வராஹ புராணம் – நம்பாடுவான் சரித்திரம்

இந்த சரித்திரம் வராஹ புராணத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. பூமிதேவி தன் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் நற்கதி அடையும் வழியை வேண்ட, வராஹப் பெருமாள் கைசிக புராணத்தை உபதேசித்தார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருக்குறுங்குடி என்றும் மகேந்திர மலை என்றும் வழங்கப்படும் ஊரில், பாணர் குலத்தில் தோன்றிய ஒருவர் தினந்தோறும் விடிகாலையில் திருக்குறுங்குடி கோயில் முன் சென்று அழகிய நம்பி என்று வழங்கப்படும் பெருமாளைக் குறித்து கைசிகம் என்னும் பண் இசைத்துப் பாடுவார். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று அவரைப் பாடி சேவித்து வந்தார். அவரின் பாட்டின் இனிமையைக் கண்ட பெருமாள் இவன் நம்மைப் பாடுவதால் இனி இவனை எல்லோரும் நம்பாடுவான் என்று அழைக்கட்டும் எனக் கட்டளை இட்டு, அவர் தரிசனத்திற்காக தன் சன்னதி முன் இருந்த கொடி மரத்தையும் நகருமாறு செய்தருளினார்.

ஒரு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, நம்பாடுவான் அழகிய நம்பியைப் பாட காட்டு வழியே சென்றார். அப்போது அவரை ஒரு பிரம்மராட்சசன் பிடித்துக் கொண்டான். “நான் பல நாட்களாகச் சாப்பிடாததால் அகோரப் பசியில் இருக்கிறேன். நீ மாட்டிக் கொண்டாய். அதனால் உன்னைக் கொன்று சாப்பிடப் போகிறேன்”, என்றான். அதற்கு நம்பாடுவான், “அப்பா, நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன். அதன் பின்னர் நீ விரும்பியபடி என்னைச் சாப்பிட்டுக் கொள்”, என்கிறார். ப்ரம்மராட்சசனோ, “நான் எப்படி உன்னை நம்புவது? நீ தப்பித்து போக தந்திரம் செய்கிறாய்“, என்று கூறி அவரை நம்ப மறுத்தான்.

அதற்கு நம்பாடுவான் “நான் பகவான் விஷ்ணுவின் பரம பக்தன். நான் பொய் சொல்ல மாட்டேன். நிச்சயமாகத் திரும்பி வருவேன். அப்படி வரவில்லை என்றால் பதினெட்டு விதமான கொடிய செயல்களைச் செய்வதால் வரும் பாவங்களுக்கு உள்ளாவேன்“, என சத்தியம் செய்தார். அதனைக் கேட்ட பிரம்மராட்சசன் ஆச்சரியத்தோடு அவரின் நேர்மையை உணர்ந்து பெருமாளைப் பாட அவரை அனுப்பி வைக்கிறான்.

நம்பாடுவானும் பெருமாளை வணங்கி ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, பிரம்மராட்சஸன் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்குகிறார். அந்த சமயத்தில் நம்பாடுவானைச் சோதிக்கும் பொருட்டு அழகிய நம்பியே ஒரு முதியவராக அவர் முன்னே தோன்றி “ஐயா, இந்த வழியில் ஒரு ராட்சசன் இருக்கிறான், எனவே வேறு வழியில் செல்லுங்கள்”, என்று அவரைத் தடுக்கிறார். அவரிடம் தான் செய்து கொடுத்த சத்தியத்தை எடுத்துரைத்து, “என் உயிரே போனாலும் நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் சொல்லி மீண்டும் அவ்வழியிலேயே புறப்பட்டார். நம்பி அவரது உறுதியைக் கண்டு புன்னகைத்து மறைந்தார்.

நம்பாடுவான் வருகையைக் கண்ட ப்ரம்மராட்சசன் ஆச்சர்யமடைந்தான். பின் தன் கதையைக் கூறலானான் . முற்பிறவியில் தான் சோமசர்மா என்னும் அந்தணனாகப் பிறந்ததாகவும், யாகம் செய்யும் போது செய்த சில தவறுகளால் சபிக்கப்பட்டு பிரம்ம ராட்சசன் ஆனதாகவும் கூறினான். “என்னை இந்த சாபத்திலிருந்து விடுவிக்க, நீ உன் பாடல்களால் சேர்த்த புண்ணியத்தின் பலனை எனக்கு அளிப்பாயாக’ என்று வேண்டினான். அதற்கு நம்பாடுவான் “நான் எந்த பலனுக்காகவும் பாடவில்லை; எனவே அதை அளிக்க முடியாது“, என்று மறுத்தார். பிரம்ம ராட்சசனோ அவரை மன்றாடிக் கேட்க, கடைசியில் தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனை அளித்தேன் என்று கூற மறுநிமிடமே பிரம்ம ராட்சசன் சாபம் நீங்கி மோட்சம் அடைந்தான். நம்பாடுவான் பெருமாளின் கடாட்சத்தால் பல ஆண்டுகள் இருந்து நம்பியைப் பாடி மகிழ்வித்து இறுதியில் மோட்சம் அடைந்தார்.

கைசிக ஏகாதசி கொண்டாடும் முக்கிய திருத்தலங்கள்

இத்தகைய கைசிக ஏகாதசி திருவரங்கத்திலும் திருக்குறுங்குடியிலும் மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது.
திருவரங்கத்தில் காலை நம்பெருமாளுக்கு அபிஷேகத்தோடு தொடங்கும் இந்த உற்சவத்தில் இரவு அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள்/சால்வைகள் போர்த்தப்படுகின்றன. அதன் பின் ஸ்ரீபராசர பட்டர் என்னும் ஆச்சார்யர் அருளிச் செய்த வியாக்யானத்துடன் கைசிகபுராணம் வாசிப்பர் . மறுநாள் துவாதசியன்று, நம்பெருமாள் அதிகாலை அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மேலப்படியேறி தன் இடத்திற்கு சென்று சேர்வார். இதற்கு கற்பூரப் படியேற்ற சேவை என்று பெயர்.

Kaisika Ekadasi Srirangam - YouTube

திருக்குறுங்குடியில் காலை ஶ்ரீவைஷ்ணவநம்பிக்குத் திருமஞ்சனம் நடைபெறும். இரவில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் உபயநாச்சிமார்களுடன் எழுந்தருளியிருக்கும் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ நம்பி முன், கைசிக மஹாத்மியம் நாடகமாக நடத்தப்படும். துவாதசி  இரவு, திருக்குறுங்குடி நம்பி கருட சேவை நடைபெறும்.

Kaisika Purana Natakam By MADHUSUDHANAN KALAICHELVAN

கைசிக மஹாத்ம்யம் அளிக்கும் பாடங்கள்
  • இறைவனிடம் அதீத நம்பிக்கை வைக்கும் எவருக்கும் எந்த ஆபத்தும் நேராது
  • பகவானிடம் அன்பு செலுத்தும் அடியார்கள் என்றும் அதன் பலனை எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை
  • ஏகாதசி விரதம் இருப்பவர்களிடம் எதையும் எதிர்கொள்ளும் மனநிலை ஏற்பட்டு விடுகிறது
  • குலத்தில் ஏற்றத்தாழ்வுகள் என்றுமே நம் பண்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை

கைசிக ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, இந்த கைசிக புராணத்தை படிப்பவர்களும் கேட்பவர்களும் அனைத்து பாவங்களும் விலகி உயர்ந்த நற்கதியான மோட்ச பதவியை அடைவார்கள் என்று ஶ்ரீவராஹப் பெருமாள் அருளிச் செய்துள்ளார்.

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

2 thoughts on “கைசிக ஏகாதசியின் மகத்துவம்”

  1. Excellent Sri Rangarajan. Many thanks.
    I feel if you can explain 18 promises, many Adiyars will be benefitted. Dasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *