To read this article in English, click here.
நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மிகத் தொன்மையானவை. நாம் மேற்கொள்ளும் பல சடங்குகளில் இயற்கையாகக் கிடைக்கும் பல பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, மூலிகைகள், விலங்குகளில் இருந்து கிடைக்கும் பால், தயிர், தேன் முதலியன, மண் பாத்திரங்கள், கற்சட்டிகள் போன்றவை. இவற்றைத் தவிர, கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து சடங்குகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் தர்ப்பை ஆகும். இந்த தாவரம் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. பல யாகங்கள், ஹோமங்கள் முதலியவற்றில் இவை பயன்படுவதைத் தவிர, முனிவர்கள் மற்றும் கடவுள்களின் ஆசனமாக தர்ப்பை விளங்குகிறது. குறிப்பாக, பகவத் கீதையில் பகவான் கண்ணன் தர்ப்பையை தோல் மற்றும் துணியால் சுற்றி அதன் மேல் அமர்வதன் மூலம், த்யானம் செய்யக் கூடிய சூழ்நிலை உருவாவதாகக் குறிப்பிடுகிறார்.
தவிரவும், பல பிறப்பு இறப்பு சம்பத்தப்பட்ட சடங்குகள் செய்யும் நேரத்தில் (தர்ப்பணம், ச்ராத்தம், குழந்தை பிறப்பு தொடர்பான சடங்குகள்) தர்ப்பை கைவிரலில் அணியப்படுகிறது. த்யானம் செய்யும் போது, தர்ப்பையில் அமரும் போதோ அல்லது அதை அணியும் போதோ, நம் உடலில் உருவாகும் ஆற்றல் தரைக்கு கசியாமல் தடுக்கப் படுவதாக நம்பப்படுகிறது. வீட்டை ஹோமம் போன்றவற்றின் மூலம் சுத்திகரிக்கும் போது கூட, தர்ப்பையைக் கொண்டே புனித நீரை வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளிப்பது வழக்கமாகும். ஆயுர்வேத சாஸ்திரத்திலும் தர்ப்பை வயிற்றுப்போக்கு முதலான நோய்களுக்கு ஒரு நல்ல மருந்தாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
காடு போல வளரும் ஒரு சாதாரண புல் வகைக்கு உண்மையிலேயே இவ்வளவு ஆற்றல் உள்ளதா அல்லது இது ஒரு மூட நம்பிக்கையா என்கிற கேள்வி எழுகிறது. இதற்கான விடையை ஒரு ஆராய்ச்சி கட்டுரை நமக்கு காட்டுகிறது. CeNTAB (Centre for Nanotechnology and Advanced Bio materials) மற்றும் CARISM (Centre for Advanced Research in Indian System of Medicine) ஆகிய இரு மையங்கள் சேர்ந்து ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கினர். இதில் தர்ப்பையுடன், எலுமிச்சை புல், மூங்கில் புல் போன்ற பல புல் வகைகளை அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தண்ணீரைத் தள்ளும் சக்தி (hydophobicity) ஆகியவற்றை சோதனை செய்தனர். நாம் அன்றாடம் உபயோகிக்கும் தயிரில் அவற்றின் தாக்கத்தை அறிய முயன்றனர். அந்த ஆய்வில் தர்ப்பை மட்டுமே தயிர் உறைவதற்கான நுண்ணுயிரிகளை கவரும் சக்தியை பெற்று இருந்ததைக் கண்டறிந்தனர்.
கிரகண காலங்களில் கிருமிகளை அழிக்கும் புற ஊதா கதிர்கள் தேவையான அளவுகளில் கிடைப்பதில்லை. அதன் காரணமாக உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகள் உணவுப் பொருட்களில் அதிக அளவில் உண்டாகி உணவை உண்ணத் தகாததாக மாற்றி விடுகின்றன. நம்மிடையே இருக்கும் புல் வகைகளில் தர்ப்பை மட்டுமே இயற்கை கிருமி நாசினியாகச் செயல்பட்டு இவற்றை அழிக்கும் சக்தி உள்ளதாக மேலே உள்ள ஆராய்ச்சி கட்டுரை தெரிவிக்கிறது. தர்ப்பைக்கு ஊடு கதிர்(X- Ray) விளைவிக்கும் கேடுகளைத் தடுக்கும் ஆற்றலும் உள்ளதாக கண்டு அறியப்பட்டுள்ளது.
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்முடைய பழக்கவழக்கங்களின் நேர்த்தியை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறன. ஏற்கனவே மஞ்சள், வெற்றிலை, துளசி போன்றவற்றின் மகத்துவத்தை மேற்கத்தினரும் மற்றவரும் இன்று உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்ந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல விஷயங்களைக் கடைப்பிடித்தல் நமக்கு இன்றியமையாததாகும். இதன் மூலம் நாம் மட்டுமே பல நலன்களை பெறாமல் இந்த உலகத்திற்கே அவைகளை நம்மால் பகிர முடியும்.
குறிப்புகள் http://cpreecenvis.nic.in/Database/Kusha_grass_989.aspx https://gyanopadesam.wordpress.com/2017/06/14/dharbai-and-its-significance-to-hindus/ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/darbha-grass-a-natural-preservative/article7000098.ece