தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு விட்டதால் ஊருக்கு இரண்டு தினங்கள் கழித்து தான் போக முடியும் என்று அவள் தந்தை கூறியதே அதற்கு காரணம். ஏமாற்றத்துடன் அவள் தன் அப்பாவை நோக்கி, ‘அப்பா, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நாம் மகிழ்ச்சியாக இருப்பது ஏன் கடவுளுக்கு பிடிக்க வில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினாள்.
அவள் அப்பா அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ‘கட கட’ என சிரித்தார். பின்னர், ‘நந்தனா, நான் ஏன் சிரித்தேன் என்பதைச் சற்று நேரம் கழித்து சொல்கிறேன். முதலில் இந்த மஹாபாரத கதையைக் கேள்’, என்று கூறி தொடங்கினார்.
“ஒரு முனிவர் தான் யாகம் செய்வதற்கு வைத்திருந்த அரணி கட்டை ஒரு மானின் கொம்பில் சிக்கியதால் அதை அந்த மான் காட்டிற்குள் இழுத்துச் சென்றதாகவும் எனவே அதை மீட்டு தரவேண்டும் என்று காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் முறையிட்டார். யுதிஷ்டிரர் தன் தம்பிகளான பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவனை தேடுவதற்கு அனுப்பிவைத்தார். அவர்கள் பல மணி நேரம் தேடியும் மானை கண்டுபிடிக்க முடியவில்லை. சோர்வடைந்த அனைவரும் அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றனர். அங்கிருந்த கொக்கு ஒன்று “இந்த குளம் என்னுடையது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு தண்ணீர் குடிக்கலாம். மீறினால் நீங்கள் உயிர் இழக்கக்கூடும்”, என்று அவர்களிடம் சொன்னது.
கொக்கின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் நீர் அருந்திய சில நிமிடங்களில் நால்வரும் உயிர் இழந்தனர். தம்பிகளைத் தேடி அங்கு வந்த யுதிஷ்டிரர் அவர்கள் இறந்து கிடப்பதை கண்ட துக்கத்தில் மூர்ச்சையாகி விழுந்தார்.
இதே நேரத்தில் துரியோதனன் பாண்டவர்களை கொல்வதற்காக ஒரு யாகம் வளர்த்து க்ரித்தியை என்ற பூதத்தை ஏவி விட்டான். இந்நிலையில் அவர்களை பார்த்த பூதம் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக எண்ணி திரும்பிச்சென்றது.
மயக்கம் தெளிந்த யுதிஷ்டிரர் அந்தக் குளத்தின் அருகில் இருந்த கொக்கைக் கண்டார். அப்பொழுது அந்த கொக்கு ஒரு யக்ஷனாக உருமாறி, ” என் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு நீர் அருந்தவும். மீறினால் நீயும் உயிர் இழக்கக்கூடும்” என்று யுதிஷ்டிரரிடம் கூறியது. யுதிஷ்டிரர் நிதானத்துடன் செயல்பட்டு யக்ஷன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டு தனது தம்பிகளையும் மீட்டெடுத்தார். இந்த சம்பவம் தான் “யக்ஷ ப்ரஷ்னம்” (யக்ஷனின் கேள்விகள்) என்று போற்றப்படுகிறது. யுதிஷ்டிரரின் அழகான பதில்கள் நமக்கு ஒரு நீதி போதனையாக இருக்கின்றன” என்று கூறி நந்தனாவின் அப்பா மேலும் தொடர்ந்தார்
உயிர் வந்த உடன், ‘நமக்கு ஏன் இப்படி நேரவேண்டும்’, என்று பீமனும் மற்றவர்களும் வருந்தி பேசிக் கொண்டனர். ஆனால் இந்த சம்பவம் தான் அவர்களை அந்த பூதத்தின் கொடிய பிடியில் இருந்து காப்பாற்றியது என்பதை அவர்கள் உணரவில்லை. சில சமயங்களில் நமக்கு சிறு இடையூறுகள் அல்லது தொல்லைகள் வரலாம். ஆனால் அவைகளின் மூலம் பல பெரிய துன்பங்களில் இருந்து நாம் தப்பிக்க கூடும். எனவே நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் நன்மைக்கே என்று உணர நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதையே தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார்
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.”
“நான் தொடக்கத்தில் சிரித்ததற்கான காரணம் என்ன தெரியுமா? நீ இந்த கேள்வியைக் கேட்ட இதே நாளில் தான் அர்ஜுனனும் பல கேள்விகளை கிருஷ்ணரிடம் பாரத போரின் முன் கேட்டான். கார்த்திகை மாத ஸுக்ல ஏகாதசியான இன்று தான் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். இன்று முதல் நீ பகவத் கீதையை அர்த்தத்துடன் பயில வேண்டும்” என்று கூறி சில ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்தார் நந்தனாவின் தந்தை.
என்னுடைய முந்தைய பதிவுகள்
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
Very good rama
Thanks Chandrasekar
Good one. Always stay with positive thinking.
thank you