
ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே சென்றாள். கோவில் கோபுரத்தை பார்த்து ஆச்சிரியத்தில் முழுகினாள்.
“அப்பா ஸ்ரீரங்கம் கோவில் தான் உலகத்திலே பெரிய கோவிலா?” என்று கேட்டாள் நந்தனா
“இந்தியாவில் இந்த கோவில்தான் மிக பெரிய கோவில். உலகத்திலே பெரிய கோவில் நேபாளத்தில் உள்ள சிவன் கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றும் கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் என்ற விஷ்ணு கோவிலையும் மிக பெரிய கோவில் என்று சொல்வார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷ்ணு கோவில் புத்த தலமாக மாற்றப்பட்டுவிட்டது.” என்றார் அவள் தந்தை.
ஸ்ரீரங்கம் கோவில் பிரகாரத்தில் உள்ள மக்கள் கூட்டத்தை கண்டு நந்தனா அப்பாவிடம் “அப்பா, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்களே. இந்த கோவில் தான் கடவுளுக்கு மிகவும் பிடித்த கோவிலா? இது போன்ற பெரிய கோவில்களில் தான் கடவுள் இருக்கிறாரா?”, என்று கேட்டாள்.
நந்தனாவின் தந்தை அவள் கேள்விகளைக் கேட்டு புன்னகைத்தார். பிறகு அவளிடம் கூறலானார்: “நந்தனா, கடவுள் எல்லா கோவில்களிலும் உள்ளார். ராஜாக்களும், மகான்களும் அவர்களின் சக்திக்கேற்ப இது போன்ற பெரிய கோவில்களை கட்டினார்கள். கடவுள் தனக்கு இந்த கோவில் பிடிக்கும், இந்த கோவில் பிடிக்காது என்று சொன்னதே இல்லை. ஆனால் சிவபெருமான் விரும்பி சென்று தங்கிய கோவில் ஒன்று உண்டு. அதை கட்டியவர் பூசலார் நாயனார் என்ற ஒரு மகான்.” என்றார் அவள் தந்தை.
“அந்த கோவில் எங்குள்ளது? நாம் அங்கு சென்று இருக்கிறோமா”, என்று ஆவலுடன் கேட்டாள் நந்தனா.
“அந்தக் கோவிலைப் பற்றியும், அந்தக் கோவிலைத் தேடி சென்ற ஒரு பல்லவ ராஜா அறிந்துக் கொண்ட உண்மையையும், நம் சுவாமி தரிசனத்துக்கு பிறகு சொல்கிறேன்” என்றார் அவள் தந்தை.
நல்ல தரிசனத்துக்கு பிறகு இருவரும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்தனர். “பூசலார் நாயனார் கட்டிய கோவிலைப்பற்றி சொல்லுங்கள்”, என்று நந்தனா ஆர்வத்துடன் கேட்டாள்.
“அந்த பல்லவ ராஜாவின் பெயர் காடவர்கோன். அவர் சிறந்த சிவ பக்தர். அவர் தன் மகனை அரசனாக்கிவிட்டு சிவ தொண்டு புரிவதற்காக தேசாந்திரம் சென்றார். அவர் பிற்காலத்தில் காடவர்கோன் நாயனார் என்று போற்றப்பட்டார். அவர் அரசனாக இருக்கும் பொது சிவபெருமானுக்கு பெரிய கோவில் எழுப்ப விரும்பினார். அதற்கான பணிகளை ஆகமசாஸ்திரப்படி முழு கவனத்துடன் செய்து முடித்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தார்.
விசேஷத்திற்கு ஒரு நாள் முன் இரவு சிவபெருமான் பல்லவ ராஜாவின் கனவில் தோன்றி, “நாளை நான் திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்திற்குப் போகவேண்டும். நீ கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை வேறொரு நாள் வைத்துக்கொள்.” என்று கூறி மறைந்தார்.
கனவு கலைந்து எழுந்த பல்லவ ராஜா திடுக்கிட்டார். பூசலார் கட்டிய கோவிலைக் காண திருநின்றவூருக்கு ஆர்வத்துடன் புறப்பட்டார். அந்த ஊருக்குச் சென்று விசாரித்த ராஜா ஆச்சிரியத்தில் முழுகினார். அப்படி ஒரு கோவில் இங்கு இல்லை என்றும், பூசலார் என்பவர் சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிபவர் என்றும் ஊர் மக்கள் மூலம் தெரிந்துகொண்டார். மேலும் கோவில் கட்டுமளவிற்கு செல்வம் அவரிடம் இல்லை என்றும் உணர்ந்தார். பூசலாரை பார்க்க ராஜாவிற்கு ஆர்வம் கூடியது. அவர் இருக்கும் வீட்டிற்கு விரைந்தார் ராஜா.
பூசலாரைப் பார்த்து பல்லவ ராஜா நடந்தவற்றைக் கூறினார். பூசலார் கண் கலங்கினார். “மகாராஜா நான் கோவில் கட்ட ஆசைப்பட்டது உண்மை தான். ஆனால் கோவில் கட்ட என்னிடம் வசதி இல்லை. அதனால் என் மனதிற்குள்ளேயே கோவில் கட்டத் துவங்கினேன். கோவிலின் கோபுரம், தேர், கருவறை, கோவில் படிகள் என்று படிப்படியாக மனதிற்குள் ஆகாமசாஸ்திரப்படி மிக பெரிய கோவிலைக் கட்டினேன். இன்று காலையில் அனைத்து தேவர்களும் ரிஷிகளும் உடனிருக்க மனத்திற்குள்ளே கும்பாபிஷேகத்தை நடத்திமுடித்தேன்.” என்று பூசலார் கூறினார்
இதைக் கேட்ட ராஜா பூசலார் காலில் விழுந்து வணங்கினார். “அய்யனே! மனிதனின் மனமே கோவில் என்ற உண்மையயை உங்கள் மூலம் அறிந்துக் கொண்டேன். நல்ல என்ணங்களினால் பரமசிவனையே மனத்திற்குள் கொண்டுவரமுடியும் என்பதை நீங்கள் எனக்கு உணர்த்தினீர்கள்.” என்று கூறி ராஜா விடைப்பெற்று சென்றார்.
“ஆகவே நந்தனா, நாம் எப்பொழுதும் நல்ல விஷயங்களைப் பற்றியே பேசவேண்டும். நம் சிந்தனைகளும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களின் மனதில் கடவுளே வந்து குடி கொள்ள ஆசை படுவார்.” என்று கூறி முடித்தார் நந்தனாவின் தந்தை.

குறிப்பு: பூசலார் நாயனார் நினைவாக பல்லவர்கள் கட்டிய ஹ்ருதயாலீஸ்வரர் கோவிலை இன்றும் திருநின்றவூரில் காணலாம்.
எனது முந்தைய பதிவுகள்
கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?