தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள் தோழியின் புத்தாடையை பார்த்தவுடன் அது தன் ஆடையை விட அழகாக இருப்பதாக நினைத்தாள் . எனவே தனக்கும் அதைப்போன்ற ஆடை வேண்டுமென்றும் அதிகமாக பட்டாசுகள் வேண்டுமென்றும் தன் அம்மாவிடம் அடம்பிடித்தாள். அவள் அம்மா மறுத்ததால் உற்சாகமின்றி காணப்பட்டாள்.
நடந்த விஷயத்தைக் கேட்டறிந்த நந்தனாவின் தந்தை “நந்தனா, மஹாபாரதத்தில் கர்ணன் தோற்றதற்கு துரியோதனின் சகவாசமே காரணம் (கர்ணனும் கூடாநட்பும்) என்று நான் ஒருநாள் சொன்னது ஞாபகமிருக்கிறதா? ஏன் அனைவரும் துரியோதனனை கெட்ட எண்ணம் கொண்டவன் என்று சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா?“, என்று கூறி நந்தனாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
நந்தனாவும் ஆர்வத்துடன் தலை அசைக்க, அவள் தந்தை மேலும் சொல்ல தொடங்கினார். “துரியோதனன் சிறு வயது முதலே பொறாமை, ஆணவம் முதலிய தீய குணங்களைக் கொண்டிருந்தான். அவன் ஒருபோதும் பெரியவர்களை மதிக்கவில்லை”, என்று சொல்லி நிறுத்தினார் அவள் தந்தை.
“துரியோதனனிடம் பல மோசமான குணங்கள் இருந்தபோதிலும், அவனை வாழ்க்கையில் தோல்வியடையச் செய்தது அவனுடைய பொறாமையான மனநிலையே . அவனால் பாண்டவர்களின் வளர்ச்சியையும் புகழையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தான் இளவரசனாக இருந்தபோதும், பாண்டவர்கள் இந்திரப்ரஸ்த நகரில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் அவனை வாட்டி வதைத்தது. அந்த நகரை அபகரிக்கப் பல கொடிய திட்டங்களைத் தீட்டினான். சூதாட்டத்தில் அவர்களை ஏமாற்றி காட்டுக்கு வனவாசம் அனுப்பினான். இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்ததைக் கண்டு அவன் மேலும் மனம் வெதும்பினான். கடைசியில் மஹாபாரதப் போரில் அவர்களிடம் தோற்று உயிர் துறந்தான். பொறாமை மனிதனை படுகுழியில் தள்ளி விடுகிறது பார்!“, என்றார்.
“ஒரு மனிதன் எப்பொழுது மற்றவர்களின் வளர்ச்சியையோ அல்லது அவர்கள் செல்வத்தையோ கண்டு மகிழ்ச்சியடையாமல் பொறாமை படுகிறானோ அப்போது அவன் வாழ்க்கையில் உயரிய நிலையை அடையமாட்டான் . மேலும் மற்றவர்களின் பொருட்களை அபகரிக்க நினைப்பவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான் என்பதை துரியோதனின் கதை நமக்கு உணர்த்துகிறது.”
“உன் தோழியின் புத்தாடை அழகாக இருந்தால் அது உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டுமே தவிர வருத்தத்தை அல்ல “, என்று கூறி நந்தனாவை சமாதானம் செய்தார். நந்தனாவும் தன் தவறை உணர்ந்தவளாய் தன் அம்மாவிடமும் தோழியிடமும் மன்னிப்பு கேட்கச் சென்றாள்.
துரியோதனனை போல் மனிதர்கள் இருக்கக்கூடாது என்பதை திருவள்ளுவர் இரண்டு வரிகளில் அழகாக கூறினார்:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்புஅர்த்தம்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
பல நேரங்களில் இந்த அறிவுரை நமக்கும் பொருந்துமே. இதை நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோமா?
என்னுடைய முந்தைய பதிவுகள்
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
கடவுள் குடியிருக்கும் கோவில்
கர்ணனும் கூடாநட்பும்
கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
குழந்தைகளுக்கான கர்ணன் கதை
குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?
தங்களின் இடுகைகள் அழகான நடையில் படிப்பினைகள் ஊட்டுவதாக அமைந்துள்ளன. எமது உளமார்ந்த பாராட்டுகள்.