ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம் எது?” என்று கேட்டாள்
அதற்கு அவள் அப்பா, “நந்தனா, கடவுள் பூமியில் அவதரிப்பதே ஒரு அழகான நிகழ்வு. ஒவ்வொரு அவதாரமும் நமக்கு பல உண்மைகளையும், நாம் பின்பற்ற வேண்டிய பாதையையும் உணர்த்துகின்றன”, என்று சொல்லி மேலும் பேசலானார். “இவைகளில் ராமாவதாரம் தனித்துவம் வாய்ந்தது. மற்ற அவதாரங்களில் மஹாவிஷ்ணு தன்னுடைய தெய்வத் தன்மையை வெளிக்காட்டியுள்ளார். ராமாவதாரத்தில் மட்டும் தான் அவர் மனிதனாகவே வாழ்ந்து நாம் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்ந்து காட்டினார். தவிர ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறத் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம் என்பதை ராமாயணம் உணர்த்துகிறது. “
இதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த நந்தனாவின் அம்மா குறுக்கிட்டு “இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் மூலம் தவறு செய்தான், ராமர் கடவுளின் அவதாரம் என்பதால் அவரால் அவனைக் கொல்ல முடிந்தது. தனி மனித ஒழுக்கம் தான் இராவணனை வெல்ல ராமருக்கு உதவியது என்று எப்படி கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். தன் அம்மாவும் இந்த உரையாடலில் சேர்ந்து கொண்டதைக் கண்ட நந்தனா தன் அப்பா என்ன கூறப் போகிறார் என்று ஆவலுடன் அவரைப் பார்த்தாள்.
அவர் சொன்னார், “நான் கூறியது ராமரின் ஒழுக்கத்தைப் பற்றி அல்ல. ராமரின் ஒழுக்கத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். இது இராவணனின் ஒழுக்கமின்மை பற்றியது. இங்கு ஒழுக்கமின்மை என்பது பிறர் மனைவியை அபகரிப்பது மட்டும் அல்ல, தன் தவறுகளை பிறர் சொல்லியும் திருத்திக் கொள்ளாதது, தன்னைவிட கீழ் நிலையில் உள்ளவர்களை மதிக்காதது, மற்றும் தன்னுடைய சக்தியைப் பற்றிய அகங்காரம் ஆகியவையும் ஒழுக்கமின்மையே ஆகும்.”
“இராவணன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்கள் அவனை ஒன்றும் செய்யமுடியாது என்ற ஆணவத்தால், மனிதனைத் தவிர தன்னை யாரும் கொல்லக் கூடாது என்ற வரத்தை ப்ரம்மாவிடமிருந்து பெற்றான். அதே சமயம், இராவணனின் வலிமையைப் பற்றி ராமர் அறிந்திருந்தாலும் அவர் தனது இலக்கை அடையும் வரை ஒரு போதும் தளர்ந்துவிடவில்லை. தன் ஒழுக்கத்தின் பயன் மூலம் அவரால் இராவணனை நேருக்கு நேர் எதிர்க்க முடிந்தது. தனி மனித ஒழுக்கம் இல்லாத காரணத்தினால் கடைசியில் இராவணன் தோல்வியுற்றான்.
ஒருவனின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்வதில் தனி மனித ஒழுக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நீ மனதில் நன்றாகப் பதிந்துகொள்.” என்று நந்தனாவிடம் அவர் கூறினார். “சரி அப்பா, நான் கண்டிப்பாக இதை நினைவில் கொள்கிறேன்” என்று கூறிய படியே தூங்கிப் போனாள் நந்தனா.
அவளை வருடிய படியே அவள் அப்பா, நந்தனாவின் அம்மாவிடம் மேலும் கூறலானார், “இராமாயணத்தில் அதிகமாக அறியப்படாத சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. போர் முடிந்த பிறகு இராவணன் இறந்த செய்தியறிந்த அவன் மனைவி மண்டோதரி அங்கு வந்தாள். அப்போது அவளுடைய நிழல் ராமர் மீது விழ உடனேயே ராமர் இரண்டடி பின் சென்று வணக்கத்துடன் நின்றார். இப்படி பிறர் மனைவியின் நிழல் கூட தன் மீது படாமல் பார்த்துக் கொண்டதால் தான் உலகம் அவரை ‘ஏக பத்தினி விரதன்’ என்று இன்றும் போற்றுகிறது” என்றார். காலம் தான் எப்படி மாறி விட்டது என்று இருவரும் பேசிய படியே உறங்கச் சென்றனர்.
எனது முந்தைய பதிவுகள்
Very good post Ram,. Need of the hour..
Ravana is a great Shiva bhakta & Sama Veda scholar and great veena player. He had best of everything. But the problem is, he is unable manage his success.
I agree. We need to educate our children about handling success. Thanks for sharing.