சோபக்ருது என்பதன் பொருள்
இன்று சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு (வெள்ளிக்கிழமை, நவமி திதி, 14/4/2023). சோபகிருது என்ற சொல்லுக்கு ‘சுபகாரியங்கள் செய்தல்’ என்று பொருள். இந்த வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் பல மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழில் ஒரு பழங்கால கவிதை சோபகிருதுவின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறது:
“சோபகிருது தன்னிற் எல்லுலகு எல்லாம் செழிக்கும்
கோபமகன்று குணம்பெருகும் – சோபனங்கள் உண்டாகும்
மாரி ஒழியாமற் பெய்யும் – எல்லாம்
உண்டாகும் என்றே உரை”
“சோபகிருது ஆண்டில், முழு உலகமும் சிறப்பும், வளமும் பெறும். மக்கள் கோபம், போட்டி, பொறாமை போன்ற தீய குணங்களை வெல்வார்கள். உலகம் முழுவதும் சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழும். நற்பண்புகள் மேலோங்கி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது, மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள்”
மகாவிஷ்ணுவின் நட்சத்திரமாகக் கருதப்படும் திருவோண நட்சத்திரத்தில் புத்தாண்டு வருவதால் இம்முறை புத்தாண்டு மேலும் சிறப்பு வாய்ந்து காணப்படுகிறது.
பஞ்சாங்கத்தின் பயன்
நம் பண்பாட்டில் சூரியன் அல்லது சந்திரன் ஒரு ராசியில் பிரவேசிப்பதை ஒட்டியே ஆண்டுகள் கணிக்கப்படுகின்றன. பொதுவாக சூரியன் மேஷ ராசியில் புகுவது முதல் மீன ராசியிலிருந்து வெளியேறும் வரை ஒரு வருடம் கணக்கிடப்படுகிறது. இவ்வாறாக பிரமாதியில் தொடங்கி அறுபது வருட சுழற்சி உண்டாகிறது.
இந்த விஷயம் பஞ்சாங்கங்களில் தெளிவாக கணிக்கப்படுகிறது. தவிர, கிரகங்களின் திசை மற்றும் இயக்கம் ஆகியவற்றின் உதவியுடன் ஜ்யோதிடர்கள் கிரகண காலங்கள், விரத நாட்கள், பண்டிகைகள் மற்றும் உற்சவ காலங்கள் ஆகியவற்றிற்கான சுப நேரம் அல்லது ஹோரை ஆகியவற்றைக் கணக்கிடுகிறார்கள். புதிய முயற்சிகள், வியாபாரம், திருமணம் போன்ற சுப தினங்கள், அதே போல் இறுதி சடங்குகள் மற்றும் திதி போன்ற சடங்குகள் ஆகியவற்றைச் செய்ய பஞ்சாங்கம் மிகத் துல்லியமான கணிதக் கணக்கீடுகள் கொண்டு நேர காலங்களை நமக்கு அளிக்கிறது.
மேலும் பருவ மாற்றங்கள், வானிலை நிகழ்வுகள் (வறட்சி, வெள்ளம்) போன்றவைகளையும் நாம் பஞ்சாங்கம் மூலம் அறியலாம்.
இன்று கணிக்கப்படும் பஞ்சாங்கங்கள் புராதனமான இருநூல்களான சூர்ய சித்தாந்தம் மற்றும் கிரஹலாகவம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன .
பஞ்சாங்கம் என்றால் என்ன
பஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருள் (பஞ்ச – ஐந்து). இவையாவன :
1) திதி – சந்திரனின் நீட்சியின் முடிவுத் தருணம். முழு நிலவில் (அல்லது அமாவாசை) இருந்து மறுமுறை முழு நிலவு (அமாவாசை) வரும் காலம் ஒரு மாதமாகும்.
2) நட்சத்திரம் – சந்திரன் குடியேறும் நட்சத்திரம் அன்றைய நட்சத்திரமாக கொள்ளப்படும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
3) வாரம் – ஏழு வார நாட்கள்
4) யோகம் – சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
5) கரணம் – கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். மொத்தம் பதினோரு கரணங்கள் உள்ளன.
பஞ்சாங்க படனம்
பஞ்சாங்கம் வாசிப்பது புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். இத்தருணத்தில் ஜோதிட வல்லுநர்கள் 12 ராசிகளுக்கான பலன்களையும், லாபநஷ்ட கணக்கையும் படிப்பார்கள். மேலும் புது வருடத்தின் நிகழ்வுகளும் அன்று கணித்துச் சொல்லப்படும். முந்தைய காலத்தில் தினந்தோறும் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
தினமும் பஞ்சாங்கம் படிப்பதால் உண்டாகும் நலன்களை கீழ்கண்ட ஸ்லோகம் விளக்குகிறது.
“திதேஸ்ச ஸ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்யவர்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோகநிவாரணம்
கரணாத் கார்யஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்”
இதன் பொருளாவது : ஒவ்வொரு நா ளும் அதிகாலையில் எழுந்தவுடன், அன்றைய திதியை அறிவதால் செல்வம் பெருகும். கிழமையை அறிவதால் ஆயுள் வளரும். நக்ஷத்ரத்தை அறிவதால் பாபவிமோசனம். யோகத்தை அறிவதால் நோய் விலகும். கரணத்தை அறிவதால் காரியசித்தி உண்டாகும். எனவே பஞ்சாங்கத்தை படித்தால் உத்தமமான பலங்கள் கிடைக்கும்.
இன்றைக்கும் பல திருக்கோயில்களில் பஞ்சாங்க படனம் நாள்தோறும் நடைபெறுகிறது. தினமும் படிக்க முடியாவிட்டாலும், வருடப் பிறப்பு அன்றாவது இந்நிகழ்வு நடக்கும் இடத்திற்குச் சென்று வரவிருக்கும் வருடத்தின் பலன்களைக் கேட்க வேண்டும்.
இந்த இனிய சோபக்ருது வருடத்தில் அனைவரும் பஞ்சாங்கத்தின் பெருமை அறிந்து வளமுடன் வாழ இறைவனை வேண்டுவோம்.