நம் சனாதன தர்ம வழியில் கடவுள் பற்றிய துதிகள் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிலும் உள்ளன. தமிழ் மற்றும் சம்ஸ்க்ரிதம் இரண்டுமே நமக்கு இரு கண் போன்றவை. இருந்தும் நம்மில் பலருக்கு சம்ஸ்க்ரிதம் தெரியாததால் அந்த ஸ்லோகங்களைத் தமிழில் எழுதி படிக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. ஒரு மொழியில் உள்ள வாக்கியங்களை வேறு மொழியில் எழுதும் போது சில சமயங்களில் பொருளே மாறி விடும் அபாயம் கூட உண்டு.
எனவே வடமொழி ஸ்லோகங்களைத் தமிழில் படிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்:
- தமிழில் உள்ள க,ச, ட, த மற்றும் ப ஆகிய எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சம்ஸ்க்ரிதத்தில் நான்கு வித எழுத்துக்கள் உண்டு. உதாரணத்திற்கு क ख ग घ (ka , kha, ga , gha) ஆகிய நான்கு எழுத்துக்களுக்கும், தமிழில் க (ka ) என்று தான் குறிப்பிட்டாக வேண்டும். இது பல சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். உதாரணங்கள் சில:
i ) உபநிஷத்தில் ‘ஸத்யம் வத ‘ என்று வருகிறது. ‘வத’ (वद – vada) என்பதற்கு பேசு என்று பொருள். அதாவது ‘உண்மையையே பேசு’ என்று பொருள்.இதுவே ‘வத’ (वध – vadha ) என்பதற்கு கொல் என்று பொருள். சரியாக பாடம் ஆகாதவர்கள் எப்படி தவறாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது பாருங்கள்!
ii ) இதே போல அதிதி (अदिति – aditi) என்பது ரிஷி கஷ்யபரின் மனைவியைக் குறிக்கும். இவரே ஆதித்யனின்(சூரியன்) தாய் ஆவார். அதே சமயம் அதிதி (अतिथि – atithi) என்றால் வீட்டிற்கு வரும் விருந்தாளியைக் குறிக்கும். தமிழில் இரண்டையுமே ஒரே போல் தான் குறிக்க முடியும்.
iii) இது போல பல சொற்கள் உள்ளன. (பாகம் -1. bhaagam;भाग – பகுதி / 2. paakam; पाक – சமையல்), (தர்பணம் – 1. tharpanam;तर्पण – பித்ரு காரியம் / 2. dharpanam;दर्पण – கண்ணாடி). இது போன்ற தவறுகளைத் தவிர்க்க எழுத்துக்களின் அருகில் எண்களைப் பயன் படுத்தலாம். (வத3, அதி1தி2, பா1க1ம் , த3ர்ப1ணம் ) - அடுத்து, பலர் ‘ச’ மற்றும் ‘ஷ’வை மாற்றி உபயோகிப்பது உண்டு – சங்கரன், சாந்தி என்பன போல. இது தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், ஒரு ஸ்லோகத்தில் வரும் போது ஷங்கர, ஷாந்தி என்று உச்சரிப்பதே சரியான முறையாகும். குறிப்பாக, ஷரணம் மற்றும் சரணம் என்ற சொற்கள் வேறு வேறு பொருள் கொண்டவை. ஷரணம் என்பதற்கு ‘தஞ்சம் அடைதல்‘ என்று பொருள். சரணம் என்பதற்கு திருவடி என்று பொருள்.
- தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’கரம் போல, வடமொழியில் ஒரு எழுத்து உண்டு. அதனைத் தமிழ் படுத்தல் சற்று கடினம். ரிஷி, ருணம், ருது (ऋषि ऋण ऋतु) போன்ற சொற்களில் உள்ள முதல் எழுத்து தான் அது. இது ஒரு உயிரெழுத்தாகும். ரியும் இல்லாமல் ருவும் இல்லாமல் இடைப்பட்ட உச்சரிப்புடையது. ர்ஷி , ர்ணம், ர்து என்பது போல உச்சரிக்க வேண்டும். மேலும் பலர் வீட்டை க்ரஹம் என்று குறிப்பிடுகிறார்கள். இது தவறு. க்ர்ஹம் (அல்லது க்ருஹம்) என்றே குறிக்க வேண்டும். க்ரஹம் என்றால் கோள் என்று பொருள். நாம் அனைவரும் ஒரே க்ரஹத்தில் தானே இருக்கிறோம்! (அதே போல, பி3ரஹஸ்ப1தி1 என்பது தவறு, ப்3ர்ஹஸ்ப1தி1 (அல்லது ப்3ருஹஸ்ப1தி1 ) என்பதே சரி. இப்பொழுது இந்த ஸ்லோகங்களைச் சொல்ல முயற்சித்துப் பாருங்கள்.
இது போல் இன்னும் பல இருந்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைக் கடைபிடித்தாலே ஓரளவு சரியாக ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களைத் தமிழில் கற்க முடியும். ஆனால் மிக நேர்த்தியாகக் கற்க வேண்டுமானால் அந்த மூல மொழியைக் கற்றால் மட்டுமே முடியும்.
சம்ஸ்க்ரிதம் கற்க முயற்சிப்போமா?