“இந்த அண்ட சராசரத்தை படைத்தவனும் நீ, காப்பவனும் நீ, அழிப்பவனும் நீ. அறியாமையின் காரணமாக தன்னை காரணகர்தாவாகவும் சொந்தக்காரர்களாகவும் நினைப்பவர்களை என்ன செய்யவது?”
எனக்கேட்டாள் மஹாராணி விந்தியவல்லி, மஹாபலிச்சக்ரவர்தியின் பட்டமஹிஷி.
விஸ்வரூபமெடுத்த வாமனரின் இரண்டடியில் அனைத்தையும் அளந்ததால் தான் கேட்ட மூன்றாவது அடி வைக்க இடமில்லை.
எந்தவித அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தன்னை அளித்தான் ப்ரஹல்லாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான மஹாபலி. தன் தலைமீது மூன்றாவது அடியை வைப்பதன் மூலம் தன் வாக்கு நிறைவேறுமென்று நினைத்தான். இதுவே விந்தியவல்லியின் கேள்விக்குக் காரணம்.
“அவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டு மிகப்பெரிய சகாயம் செய்திருக்கிரான். ஏனெனில் இந்த பூவுலகில் ஒருவருக்கு இருக்கும் பொருட்செல்வம் அவரது அறிவுக்கண்களை மறைக்கக்கூடியது.”
ப்ரஹல்லாதனின் பதிலைக்கேட்ட பிரம்மா, “மஹாபலி இதை உணர்ந்து சரணாகதி அடைந்துள்ளான்” என்றார்.
“அனைத்தையும் இழந்த பிறகும்,
தன் சொல்லில் உறுதியாக நிற்கிறான். எனவே யாருக்கும், ஏன் தேவர்கள் கூட அடைய முடியாத
ஒரு இடத்தை அடையப்போகிறான். தேவேந்திரனின் இடத்தை எடுத்துக்கொள்ளும் காலம் வரும் வரை,
விஸ்வகர்மாவால் என் கட்டளைப்படி நிர்மாணிக்கப்பட்ட பாதாள உலகத்தை ஆளப்போகிறான்.
அந்த உலகம் சோர்வு, சோம்பேரித்தனம், தோல்விமனப்பான்மை என எந்த எதிர்மறை எண்ணங்களும் இல்லாத உலகம்.”
“சிறந்த ஆளுமையுள்ள மஹாபலிச்சக்ரவர்தியே! உன்னுடைய சுற்றம் சூழ பாதாள உலகம் சென்று, அதனை ஆட்சி செய்வாய். நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன், உங்களைக்காப்பேன்.” என்றார் வாமனனாக வந்த மஹாவிஷ்ணு.
மஹாபலி தன்னை அளித்த தருணம், தான் என்ற அகந்தை நீங்கி மஹாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்தான். மஹாவிஷ்ணு அவனை ஆட்கொண்டு யருக்கும் கிட்டாத ஒரு இடத்தை அளித்தார்.
பி.கு: பாகவத புராணத்தில் 8வது காண்டத்தில் இந்த கதை வருகிறது. இந்த புராணத்தில் எம்பெருமான் மஹாபலியின் தலை மீது கால் வைத்ததாக இல்லை.