விதி வலியது, எல்லாம் விதிப்படி தான் நடக்கும், விதியை யாரலும் வெல்ல முடியாது, போன்ற வாசகங்களை நம் அன்றாட வாழ்வில் கேட்டிருப்போம்.
விதி – வள்ளுவர் பார்வை
திருவள்ளுவரும் விதிக்கென்று ஒரு அதிகாரமே வகுத்துள்ளார். “ஊழ்” என்பதே அந்த அதிகாரத்தின் பெயர். அதில் ஒரு குறளைப்பார்ப்போம்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
(குறள் 380 ஆதிகாரம் – ஊழ்)
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயல்பட்டாலும், அந்த வழியிலோ வேறொரு வழியிலோ அது நம் முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு வலிமையானது எது?
விதி என்பதற்கு நியதி என்றொரு பொருள் உண்டு. அதை முன்னரே தீர்மானிக்கப்பட்டது என நாம் புரிந்து கொள்கிறோம். விதியென்பது உண்டென்றால் நிர்ணயிப்பது எது? பார்ப்போம்.
கண்ணனின் கேள்வி
இயற்கையே இறைவன் என்ற பதிவில் கண்ணன் இந்திரனை ஏன் வழிபட வேண்டும் என கேள்வி எழுப்பியதோடில்லமல் இயற்கையை ஏன் வழிபட வேண்டும் என விளக்கினார். அப்பொழுது விதியைப்பற்றியும் விளக்கினார்.
எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ஒருவன் (இறைவன்) தான் என்று வைத்துக்கொள்வோம், அவன் எதனடிப்படையில் நிர்ணயம் செய்வான்? புண்ணியம்,பாவம், சுகம், துக்கம் முதலியன
எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பிய கண்ணன் மேலும் தொடர்ந்தார்.
விதி – கண்ணனின் விளக்கம்
கர்மாவின் அடிப்படையில் தான் பிறப்பு, இறப்பு, சுகம், துக்கம் ஆகியவை தீமானிக்கப்படுகிறது.
கர்மா என்றாலென்ன? ஒருவன் செய்த, செய்யத்தவறிய செயலே கர்மா. அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.
அதை நாம் விதி, தலையெழுத்து , வினை, ஊழ் என பல சொற்களில் குறிக்கிறோம்.
விதி – நம்மாழ்வார்
நம்மாழ்வார் திருவாய்மொழியில் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் வைகுண்டம் புகுவதே விதி என்கிறார்.
திருவாய்மொழி பாசுரம்
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
எம்பெருமான் அடியவர்கள் வைகுந்தத்தில் நுழைந்ததும், அங்கே வாசலில் காத்திருந்த வானவர்கள் அவர்களை வரவேற்றார்கள், ‘வைகுந்தனாகிய எம்பெருமானின் அடியவர்களாகிய நீங்கள், எங்களுடைய தலைவர்களைப்போன்றவர்கள், எங்கள் இடத்துக்கு வருக’ என்று அழைத்தார்கள், வைகுந்தத்திலிருக்கும் அமரர்களும் முனிவர்களும் இந்த அடியவர்களைக் கண்டு வியந்தார்கள், ‘மண்ணுலகில் பிறந்தவர்கள் வைகுந்தம் புகுவது பெரும் பாக்கியமே’ என்று வாழ்த்தினார்கள்.