பல நாள் கொட்டித் தீர்த்த மழையால் நந்தனாவின் வீட்டு அருகில் உள்ள பூங்கா சேதமடைந்திருந்தது. மழை காலம் முடிந்த நிலையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அந்த பூங்காவை சீர் செய்ய முடிவெடுத்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நந்தனா மிகவும் சந்தோஷம் அடைந்தாள். “அம்மா, நானும் என் தோழிகளும் எங்களால் முடிந்த உதவியை செய்ய பூங்காவிற்கு போகிறோம். அப்பொழுது தான் சீக்கிரம் நாங்கள் பூங்காவில் விளையாட முடியும்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
பூங்காவில் ஆர்வத்துடன் நந்தனாவும் அவள் தோழிகளும் வேலை செய்தார்கள். பொதுமக்கள் பூங்காவை சீர் செய்யும் நிகழ்வை ஒரு செய்தியாளர் பதிவு செய்து கொண்டிருந்தார். நந்தனா உட்பட அங்கிருந்த பல குழந்தைகளை தனித்தனியாக அவர் பேட்டி எடுத்தார்.
அடுத்த நாள் அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வருவதாகக் கேள்வி பட்டு நந்தனா ஆர்வத்துடன் தன் குடும்பத்தினருடன் தொலைக்காட்சி முன் அமர்ந்தாள். சில வினாடிகள் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியில் நந்தனா பேசிய பதிவு வரவில்லை. இதனால் அவள் மிகவும் ஏமாற்றமடைந்தாள். “நேரமின்மை காரணமாக நீ பேசியதை நீக்கிருப்பார்கள். அடுத்த முறை இதே போன்ற வாய்ப்பு கிடைக்கும். கவலைப்படாதே” என்று அவள் தந்தை அவளை சமாதானப்படுத்தினார். ஆனால் நந்தனா அழுதுகொண்டே “நான் அன்று நிறைய வேலை செய்தேன். சிறு வேலைகள் செய்தவர்களைக்கூட காட்டினார்கள், ஆனால் என்னை விட்டுவிட்டார்கள். இனி அந்த பூங்காவிற்கு நான் போகமாட்டேன்” என்று கோபத்துடன் கூறினாள்.
“நீ இப்படி பேசுவது சரியா நந்தனா? நீ எதற்காக பூங்காவிற்கு போனாய் – சீக்கிரம் அங்கு விளையாடுவோம் என்ற எண்ணத்தோடு தானே தவிர தொலைக்காட்சியில் வருவதற்காக இல்லை அல்லவா?” என்று கூறி விட்டு அவளை மேலும் சமாதானப்படுத்த “உனக்கு பிடித்த மகாபாரதத்தைப் பற்றி பேசலாம்” என்று கூறினார். “யாரெல்லாம் மகாபாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற துணை நின்றார்கள்” என்று கேட்டார்.
“கிருஷ்ணர், சிகண்டி, கடோத்கஜன், திருஷ்டத்யுமன், விராட அரசன்” என்றாள் நந்தனா. “இவர்கள் மட்டும்தானா?” என்று கேட்டார் அவள் தந்தை. “இல்லை. காசி அரசன், மகத அரசன், பாண்டிய அரசன் போன்ற பல அரசர்களும் பாண்டவர்கள் பக்கம் இருந்தார்கள்” என்றாள் நந்தனா. இன்னும் பலர் இருக்கிறார்கள் என்று தந்தையின் முகபாவத்திலிருந்து புரிந்துக்கொண்ட நந்தனா இந்திரன், ஹனுமார் என்று சொல்லத் தொடங்கினாள்.
“ஏன் இவர்கள் அனைவரும் பாண்டவர்கள் பக்கம் போரிட்டார்கள்?” என்று கேட்டார் நந்தனாவின் தந்தை. “தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் பக்கம் போரிட்டார்கள்.” என்று பதிலளித்தாள் நந்தனா. “சரியாக சொன்னாய். தர்மம் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அனைவரும் போரிட்டனர். பலர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களில் முக்கியமான ஒருவரின் பெயரை நீ சொல்லவில்லை. சொல்லப்போனால் பலருக்கு அவர் பெயர் மறந்திருக்கும். அவர்தான் அர்ஜுனனின் மகன் அரவான். அவர் தியாகம் அதிகம் போற்றப்படவில்லை”
“நரபலி கொடுப்பதற்காக அரவானிடம் கிருஷ்ணர் கேட்ட பொழுது, அரவான் தர்மம் வெல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஒப்புக்கொண்டார். போரில் பங்குப்பெற்று பலரை கொன்று தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்று அரவான் நினைக்கவில்லை. நீ உட்பட பலர் அவரை மறந்தாலும் அரவானின் தியாகம் பொய்யாகிவிடுமா? அரவானை போல் பலர் வெவ்வேறு காலகட்டங்களில் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட நமக்கு தெரியாது. அவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் தர்மம் வெல்ல வேண்டும் என்பதே.”
“இதை போல பல உதாரணங்கள் உள்ளன. 13ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாட வந்த முஸ்லிம் படையை எந்தவித போர் பயிற்சியும் இன்றி பல மணி நேரம் தடுக்க முயன்ற பல்லாயிரக்கணக்கான அரங்கனின் பக்தர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இன்று வரையில் அவர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது. என்றாலும் அவர்கள் தியாகம் மகத்தானது அல்லவா?”
“பூங்காவில் விளையாட வேண்டும் என்ற உன் எண்ணம் நிறைவேறியதை எண்ணி சந்தோஷமடைய வேண்டுமே தவிர மற்றவர்கள் உன்னை பாராட்டவில்லை என்பதற்காக நீ வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.” என்று கூறி முடித்தார். இவ்விஷயத்தில் ஒரு தெளிவு பிறந்ததன் விளைவாக நந்தனாவும் ஒரு புன்னகை பூத்தாள்.
———-
*சனாதன தர்மத்தை நிலை நாட்டப் போராடிய நம் முன்னோர்களின் தியாக வரலாற்றை நம் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் உண்மையான வரலாறு வெளிவராமல் ம(றை)றக்கப் பட்டுள்ளது. உதாரணத்துக்கு 13ம் நூற்றாண்டில் நடந்த ஸ்ரீரங்க கோவில் மீது ஏற்பட்ட தாக்குதல், மற்றும் தில்லி சுல்தானின் படை செய்த கொடுமைகள், உற்சவர் அரங்கநாதனை காப்பாற்றுவதற்காக பக்தர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியவை. இந்தச் சம்பவங்களைத் தொகுத்து திரு வேணுகோபாலன் “திருவரங்கன் உலா” என்ற நாவலை எழுதி உள்ளார். இந்நாவலை அனைவரும் படித்து நம் முன்னோர்களின் தியாகத்தை போற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
அருமையாக, தெளிவுடன் , சொல்லியருக்கின்றீர்கள் . நன்றி. 🙏🏻
மிக்க நன்றி.