ஆன்மீகத் தேடலில் நம்பிக்கைகள் பல உண்டு. இவை வழிவழியாக வந்தவை. பல தலைமுறைகள் கடந்ததால் சில நம்பிக்கைகள் மருவி இன்று வேறு உருவங்கள் கூட எடுத்திருக்கலாம். வழிவழியாக வந்ததால் மட்டும் அவை அனைத்தும் சரி ஆகி விடாது (ஆன்மீக அன்பர்கள் மன்னிக்க!). ஆனால் அதே சமயம் ஒரு சில தவறான எடுத்துக்காட்டுகளால் அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனமானவை அல்ல (பகுத்தறிவுவாதிகள் மன்னிக்க!). அவற்றை மூடநம்பிக்கைகள் என்பதை விட கூடாநம்பிக்கை என்று கூறுவதே சரியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
ஒரு ஹாஸ்யமான உதாரணத்தைப் பார்ப்போம். நண்பர் ஒருவர் பித்ரு காரியம் செய்ய நேர்ந்தது. சம்பிரதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத அவர் அந்த காரியத்தின் அனைத்து அங்கங்களையும் முழுமையாகச் செய்ய விரும்பினார். திவச நேரத்தில் அவர் தந்தை ஒரு பூனையை மூங்கில் கூடைக்கு அடியில் போட்டு முடியது நினைவுக்கு வரவே, பல இடங்களில் தேடி ஒரு வழியாக ஒரு பூனையைப் பிடித்து கூடையை மூடி வெற்றிகரமாக பித்ரு காரியத்தை முடித்தார். வந்தவர்கள் இதைப் பற்றி அவரிடம் விசாரிக்க அவர் இது எங்கள் குல வழக்கம் என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டார்.
அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெரியவர் கலகலவென சிரிக்கவே, அனைவரும் அவரையே நோக்கினார். அவர் கூறினார், ” தம்பி! உங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் உங்கள் வீடு ஒரு குக்கிராமத்தில் இருந்தது. அங்கு வெட்ட வெளியில் தான் இந்த காரியங்கள் நடந்தேறும். மேலோருக்கு உணவு சமைக்கும் போது பூனை போன்ற விலங்குகள் வாயை உணவில் வைத்து விட்டால் தோஷமாகிவிடும் என்பதால் சடங்கு முடியும் வரை அவற்றை கூடைக்கு அடியில் போட்டு மூடி பிறகு வெளியில் விடுவார்கள். நீயோ இது தெரியாமல் பூனையை தேடி பிடித்து அடைத்து வைத்திருக்கிறாய்!”, என்று கூறி மீண்டும் சிரித்தார். இதைத்தான் கூடாநம்பிக்கை என்கிறோம்.
இதைப் பற்றி என் தமிழாசிரியர் கூறியது நினைவுக்கு வருகிறது. ஒரு ரேஷன் கடையில் எல்லாரும் அரிசியை துணிப்பையில் அப்படியே வாங்குவர். ஆனால் சர்க்கரையை பையை உள்பக்கம் திருப்பி வாங்குவார்கள். பிறகு பிளாஸ்டிக் கவரில் வாங்கும் போதும் இதையே செய்தனர். பிறகு தான் தெரிய வந்தது, துணிப்பையில் உள்ளே தையல் இருப்பதால் அதில் சர்க்கரை ஓட்டும் என்பதால் அப்படிச் செய்து இருக்கிறார்கள் என்று! பிளாஸ்டிக் கவரில் ஏது தையல்!! கூடாநம்பிக்கை எப்படி வந்தது தெரிகிறதா?
அருமை நண்பர் மற்றும் சக பதிவாளர் கிருஷ்ணன் அடிக்கடி கூறும் மேற்கோளான ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதைப் பின்பற்றி, எது நம்பிக்கை எது கூடாநம்பிக்கை என்று அறிந்தோமானால் ஆன்மிக வாழ்க்கையும் அறிவுசார் வாழ்க்கையாகி மகிழ்ச்சி பெருகும்!
Good and informative
Thanks for the encouragement, Selvaganesan,,