காலத்திற்கேற்ப வரும் பண்டிகைகள்
நம் பண்டிகைகள் பல முக்கியத்துவங்களை உடையவை. ஆண்டுதோறும் ஏற்படும் பருவ நிலைக்கேற்ப பண்டிகைகள் அமைக்கப்பட்டிருப்பது நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உதாரணமாக, அறுவடை நேரத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் ஹோலி முதலிய பண்டிகைகள் வருகின்றன. அது போல குளிர்காலத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப் படுகிறது.
குளிர்காலத்தில் திருக்கார்த்திகை
குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் இருள் அதிக நேரம் இருக்கிறது. அதன் பாதிப்பு மனதளவிலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைப் போக்கவே திருக்கார்த்திகை பண்டிகை ஒளித் திருவிழாவாக தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பல கோயில்களில் தீபம் ஏற்றப்படுவதால் இந்நாள் சர்வாலய தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேரும் நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பண்டிகைக்கான காரணங்கள்
கார்த்திகைப் பண்டிகை தோன்ற இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒரு முறை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களுள் சிறந்தவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது சிவபெருமான் ஜோதி வடிவமாகி தன் அடி மற்றும் முடியை முதலில் கண்டு வருபவரே சிறந்தவர் என்று கூறினார். வராகமாக விஷ்ணுவும் அன்னப்பறவையாக பிரம்மாவும் மாறி சிவபெருமானின் அடி முடியைத் தேட முற்பட்டனர். நீண்ட நாட்கள் முயற்சி செய்தும் கண்டுபிடிக்க இயலாமல் திரும்பினர். எனினும் ப்ரம்மா தான் சிவனின் முடியைக் கண்டதாகப் பொய் கூறியதால் அவருக்கு பூவுலகில் கோவில் இல்லாமல் போனது. சிவபெருமான் ஜோதி வடிவமாகத் தோன்றிய இந்நாளே கார்த்திகையாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது காரணம், இந்நாளில் சிவபெருமானின் அருளால் சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் பாலமுருகன் அவதரித்தார். ஆறு குழந்தைகளாகப் பிறந்த முருகன் பார்வதியின் அருளால் ஆறுமுகத்துடன் ஒரே குழந்தையாக உருவெடுத்து அனைவருக்கும் அருள்பாலித்தார். இந்த தினம் கார்த்திகைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
வழிபடும் முறை
இந்நாளில்நாம் நம்முடைய வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். நம் வழிபாட்டு முறைகளில் தீப வழிபாடு மிக முக்கியமானதாகும். பண்டைய காலத்திலிருந்தே தீப வழிபாடு இருந்து வந்ததற்கு அகநானுறு மற்றும் ஒளவையாரின் நூல்களில் பல சான்றுகள் உள்ளன. அகல்விளக்கு மண், பஞ்சு மற்றும் எண்ணெய்/நெய் என மக்கும் பொருட்களால் ஆனது. எனவே இவை சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்துவது இல்லை. புனித விளக்குகளின் ஒளியில் நமக்கு புது நம்பிக்கை பிறக்கிறது. அன்று தேங்காய், வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை இறைவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். பொரியின் வெண்மை நிறம் விளக்கொளியில் பிரகாசிப்பது போல் நம்வாழ்க்கையும் ஜொலிக்கும் என்பது ஐதீகம். பொரியும் வெல்லமும் மிக எளிதில் ஜீரணமாக் கூடியவை என்பதால் குளிர் காலத்திலும் எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களும் பெரியவர்களும் உண்டு மகிழலாம்.
இந்நாள் திருவண்ணாமலை கோயிலில் மிக முக்கியமானது. இந்நாளில் மலை உச்சியில் அதிகாலையில் மகா தீபம் ஏற்றப்படும்.இந்த காணற்கரிய காட்சியைக் கண்டு களிக்க வருடந்தோறும் லட்சக் கணக்கில் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசிப்பார்கள். பிரசாதமாகக் கிடைக்கும் இந்த தீபத்தின் மையானது தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும். பனை மரத்தில் பனை ஓலைகளையும், இயற்கைப் பட்டாசுகளையும் இணைத்து கொளுத்தி மகிழ்வர். அந்த நெருப்பில் நம் அறியாமை, ஆணவம் போன்ற தீய குணங்கள் அழியும் என்பது நம்பிக்கை.
இந்த கார்த்திகை நன்னாளில் நம்மைச் சுற்றி வரும் அனைத்து துன்பங்களும் விளக்கைக் கண்ட இருள் போல விலகி நம் அனைவருக்கும் அனைத்து இன்பங்களும் கிடைக்க இறைவன் நமக்கு அருளட்டும்!
எங்களின் இந்தப் பதிவை இன்றைய தினமலர் (வெளியூர்) இதழில் வெளியிட்ட பதிப்பாசிரியருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
அருமை, ரங்கா! முயற்சிகள் தொடரட்டும்…வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி அண்ணா ..