அனைவருக்கும் சுபகிருது வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ப்லவ வருடம் முடிந்து சுபகிருது வருடத்தின் வரவை எதிர்நோக்கி இருக்கிறோம். சுபகிருது என்னும் சொல்லுக்கு மங்களமான காரியங்களை செய்து தரும் வருடம் என்று பொருள். அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி மெல்ல நற்காரியங்களைத் தொடங்க இதுவே நல்ல தருணம் அல்லவா?
சித்திரைக்கு வந்த சோதனை
புது வருடம் வந்தாலே சிலருக்கு புதுப்புது ஐயங்களும் கூடவே வந்து விடுவது தான் ஆச்சர்யமான விஷயம். சித்திரை புது வருட தொடக்கம் அல்ல என்று ‘தை தை’ என்று நடனமாடும் அனைவருக்கும் நம் பண்டைய இலக்கியங்களே அழகாக விளக்கம் அளிக்கின்றன. கேட்க பொறுமையை வளர்த்துக் கொள்பவர்கள் பெருமை பெறுவார்கள்!
சூரியனின் சுழற்சி
சித்திரை மாதத்தில் சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். மேஷ ராசியே முதல் ராசியாக இதிஹாச-புராணங்களிலும் ஜோதிட சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏதோ வடமொழியில் மட்டும் இருப்பதால் இதை நம்ப முடியாமல் இருப்பவர்களுக்காக, சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் உள்ள பாட்டினைக் கீழே கொடுத்துள்ளோம்.
“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” – நெடுநல்வாடை
இதன் விளக்கம்: “வலிமையான கொம்பை உடைய ஆடு (மேஷம்) முதலான உடுத்தொகுதிகளில் (ராசிகள்) புகக்கூடிய சூரியன் இயங்கும் வான் மண்டலம்”. சூரியன் மேஷ இராசியில் நிற்கும் மாதம் சித்திரை என்பதால் சித்திரையே வருடத்தின் முதல் மாதமாக இருக்க முடியும்.
இது தவிர ஐம்பெரும்காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கதிரவன் மேஷ ராசியில் தன் பயணத்தைக் தொடங்குகிறான் என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
இதையே கிட்டத்தட்ட 1500 வருடங்கள் முன் வாழ்ந்த தொல்காப்பியர் தன் தொல்காப்பியத்தில் பருவங்கள் ஆறு வகைப்படும் என்றும், அவற்றில் இளவேனில் பருவம் சித்திரையில் தொடங்குகிறது என்றும் விளக்கியிருக்கிறார். இரு மாதங்கள் சேர்ந்தது ஒரு பருவம் என்றால், தை மாதம் எந்தப் பருவத்தையும் தொடங்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிக்கு ஈடு.
ஆயிர வருட பாரம்பரியம்
சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவது என்பது குறைந்தது பத்தாம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்து வந்தது என்பதை சைவ நூல்கள் மற்றும் கல்வெட்டுக்கள் மற்றும் பட்டயங்கள் மூலம் அறியலாம். தவிர தமிழகம் மட்டும் அல்லாமல் இந்நாள் கேரளா, வட இந்தியா மற்றும் பல உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தைத் திங்களும் திருவள்ளுவர் தினமும்
மறைமலை அடிகள் திருவள்ளுவரின் வாழ்ந்த காலத்தை ஆராய்ந்து அளித்தவர் என்பது உண்மை என்றாலும், அவர் திருவள்ளுவர் பிறந்த நாள் என்று ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிப்பிடவில்லை. சில தமிழ் அறிஞர்கள் வைகாசி அனுஷ நட்சத்திரமே திருவள்ளுவர் பிறந்த தினம் என்று கணித்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப, 1966-ஆம் ஆண்டு முதல், ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது வரலாறு.
தை மாதம் என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதே நாள் மகரசங்கராந்தி என்னும் பெயரில் ஆந்திரா, அசாம், வங்காளம், பீகார், குஜராத், கர்நாடகம், பஞ்சாப் உட்பட பல பிற மாநிலங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. சங்க இலக்கியங்களில் தைத் திங்களின் பெருமை பலவாறாகப் போற்றப்படுகிறது. எனினும் இந்நாளே வருடத் தொடக்கம் என்ற குறிப்பு எங்கும் காணப்பட வில்லை.
மாற்றம் எப்போது அவசியம் ?
இவ்வுலகில் மாற்றம் என்பதே மாறாதது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் அது தேவைப்படும் போது மட்டுமே அந்த தேவை உள்ளவர்களால் மட்டுமே ஏற்பட வேண்டும். திணிப்புகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களே நம்மீது தேவை இல்லாத இந்தத் திணிப்பை செய்யலாமா?
அனைவருக்கும் இந்த சுபகிருது வருடம் சுபமாக இருந்து நல்ல புத்தியை அருளட்டும்.
***
உங்களின் பிறந்த தமிழ் வருடத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள பெட்டியைக் காணவும்.
Gregorian Year Name | Gregorian Year Name |
---|---|
1943–1944 | 1983–1984 |
சுபானு | ருத்ரோத்காரி |
1944–1945 | 1984–1985 |
தாரண | ரக்தாட்சி |
1945–1946 | 1985–1986 |
பார்த்திப | க்ரோதன |
1946–1947 | 1986–1987 |
விய | அட்சய |
1947–1948 | 1987–1988 |
சர்வஜித் | பிரபவ |
1948–1949 | 1988–1989 |
சர்வதாரி | விபவ |
1949–1950 | 1989–1990 |
விரோதி | சுக்ல |
1950–1951 | 1990–1991 |
விக்ருதி | பிரமோதூத |
1951–1952 | 1991–1992 |
கர | பிரசோற்பத்தி |
1952–1953 | 1992–1993 |
நந்தன | ஆங்கீரச |
1953–1954 | 1993–1994 |
விஜய | ஸ்ரீமுக |
1954–1955 | 1994–1995 |
ஜய | பவ |
1955–1956 | 1995–1996 |
மன்மத | யுவ |
1956–1957 | 1996–1997 |
துன்முகி | தாது |
1957–1958 | 1997–1998 |
ஹேவிளம்பி | ஈஸ்வர |
1958–1959 | 1998–1999 |
விளம்பி | வெகுதானிய |
1959–1960 | 1999–2000 |
விகாரி | பிரமாதி |
1960–1961 | 2000–2001 |
சார்வரி | விக்ரம |
1961–1962 | 2001–2002 |
பிலவ | விஷு |
1962–1963 | 2002–2003 |
சுபகிருது | சித்திரபானு |
1963–1964 | 2003–2004 |
சோபக்ருத் | சுபானு |
1964–1965 | 2004–2005 |
க்ரோதி | தாரண |
1965–1966 | 2005–2006 |
விசுவாசுவ | பார்த்திப |
1966–1967 | 2006–2007 |
பரபாவ | விய |
1967–1968 | 2007–2008 |
ப்லவங்க | சர்வஜித் |
1968–1969 | 2008–2009 |
கீலக | சர்வதாரி |
1969–1970 | 2009–2010 |
சௌம்ய | விரோதி |
1970–1971 | 2010–2011 |
சாதாரண | விக்ருதி |
1971–1972 | 2011–2012 |
விரோதகிருது | கர |
1972–1973 | 2012–2013 |
பரிதாபி | நந்தன |
1973–1974 | 2013–2014 |
பிரமாதீச | விஜய |
1974–1975 | 2014–2015 |
ஆனந்த | ஜய |
1975–1976 | 2015–2016 |
ராட்சச | மன்மத |
1976–1977 | 2016–2017 |
நள | துன்முகி |
1977–1978 | 2017–2018 |
பிங்கள | ஹேவிளம்பி |
1978–1979 | 2018–2019 |
காளயுக்தி | விளம்பி |
1979–1980 | 2019–2020 |
சித்தார்த்தி | விகாரி |
1980–1981 | 2020–2021 |
ரௌத்திரி | சார்வரி |
1981–1982 | 2021–2022 |
துன்மதி | பிலவ |
1982–1983 | 2022–2023 |
துந்துபி | சுபகிருது |
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
மிக்க நன்றி மேடம்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு. எல்லோருக்கும் நல்லருள் கிடைக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻