To read in English click here
கேள்வி: தீபாவளியில் பட்டாசு வெடிப்பது சமீப கால நடப்பா அல்லது நமது பாரம்பரியத்திலேயே உள்ளதா?
பதில்: தீபாவளியின் போது பட்டாசு கொளுத்துதல் பல ஆயிரம் வருடங்கள் பழமையான நிகழ்வாகும். நம்முடைய பழங்கால நூல்கள் சிலவற்றில் (ஸ்ம்ருதி கோஷம், கார்த்திகை மாஹாத்ம்யம்) இதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அவற்றில் இருந்து மேற்கோள்கள்:
“துலா ஹம்ஸதே சஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஷியோ:
உல்கா ஹஸ்தா நரா: குரியு: பித்ரூணாம் மார்க தர்ஷணம் “
” யமலோகம் பரித்யஜ்ய ஆகதே யே மஹாளயே
உஜ்வல ஜ்யோதிஷ வர்த்ம பிரபஷ்யந்து வ்ரஜந்து தே”
துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, ‘உல்கா’ எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது மத்தாப்பு கொளுத்த வேண்டும். ஏனென்றால் நம் பித்ருக்கள் நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் முன்னேறிச் செல்வார்கள். பொதுவாக பித்ருக்கள் மஹாளய பக்ஷ நேரத்தில் நம் உலகிற்கு வருவதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு ஆகாச தீபம் (பட்டாசு/மத்தாப்பு ) மூலம் வழி காண்பிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
சிலர் வெடிமருந்து என்பது சற்று முன்பு தான் சீனர்கள் கண்டு பிடித்தது என்று நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் வெடி உப்பு (சால்ட் பெட்டர்) என்பது அக்னிச்சூர்ணம் என்ற பெயரில் 2300 வருடங்களுக்கு முன்பே புகையை உருவாக்கப் பயன் படுத்தப் பட்டதாக சாணக்கியரின் கவுடில்ய அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. தவிர சீனர்களே நாம் வெடி உப்பை வண்ணப் புகை (மத்தாப்பு?) உருவாக்கப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொள்கின்றனர்.
ஆன்மீக காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்கும் பட்டாசு பயன்பட்டு இருக்கிறது. அன்றைய நாட்களில் பட்டாசில் கந்தகம் இருந்திருக்கிறது . இந்த கந்தகம் பயிர்களில் உள்ள பூஞ்சை, நோய்ககள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. பயிரிடும் வேளையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தையும் குறைத்துள்ளனர் நம் முன்னோர் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை!
இன்றைய சூழ்நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைகளின் மூலமே நமது சிறார்களை ஒன்று திரட்டி வெளியில் நேரத்தை செலவழிக்கச் செய்ய முடியும். ஒன்று கூடி பட்டாசு வெடிக்கும் போது, உதவி மனப்பான்மை, பொறுப்புணர்ச்சி, பயத்தை போக்கி கொள்ளுதல், கவனம், வழி நடத்துதல் போன்ற நல்ல குணங்களை அவர்கள் கற்கிறார்கள். இவற்றுக்காகவாவது நாம் தீபாவளி போன்ற பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடியே ஆக வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள எவருக்கும் கஷ்டங்களை கொடுக்காமல் (அதிக சத்தமுள்ள பட்டாசுகளை தவிர்த்து) இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவோம். அப்பொழுது தான் திருநாளும் சிறக்கும், திருவருளும் பிறக்கும்!
தேடல் வாசகர்களுக்கு எங்கள் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!