To read in English, click here.
முன்னுரை
நம் மதமானது வழிபாட்டு முறைகளில் அதிகப்படியான விதிகள் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்காத மதம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நமது சமயத்தைச் சேர்ந்தவர்கள் யாராகவும் இருக்கலாம் – கோவிலுக்குச் செல்பவர்கள்/செல்லாதவர்கள், ஓதுபவர்கள்/ஓதாதவர்கள், சடங்குகளைப் பின்பற்றுபவர்கள்/ பின்பற்றாதவர்கள், சைவ உணவு உண்பவர்கள்/அசைவம் சாப்பிடுபவர்கள், இவர்கள் மத்தியில் இருப்பவர்கள் என பலர் உள்ளனர். மிகப்பழமையானதாக இருப்பதனால், நமது மதம் வழிபாட்டு நெறிகளில் கண்டிப்பை அறிவுறுத்துவதில்லை. ஒரு அன்பான தாயைப் போல, அதுவும் நம் தவறுகளைக் கண்டும் காணாமல் செல்கிறது.
என்றாலும், நமது மதத்துடன் நமக்கு இருக்கும் பலவீனமான பிணைப்பை மேம்படுத்த வேண்டுமானால் ஒரு சில வழிகாட்டுதல்களையாவது கடைப்பிடிப்பது விவேகமானதாகும். ஏற்கனவே பல வழிமுறைகளை மீறியதன் பயனை இன்று அனுபவித்து வருகிறோம். நமது குருமார்கள் மற்றும் மகான்கள் கூறியுள்ளதைப் போல், சாஸ்திரங்கள் மற்றும் சடங்குகள் ஒருபோதும் அறிவியலுக்கும் பொது அறிவுக்கும் எதிரான கருத்துக்களை என்றுமே கூறுவதில்லை. எனவே, தவறான கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் அல்லது நவீனத்துவ எதிர்ப்பு என அவற்றைப் புறக்கணிப்பதன் மூலம் நாம் மேலும் பிரச்சனைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இறை நம்பிக்கை உள்ள ஒருவரின் எளிய சைகைகளில் ஒன்று கோவிலுக்குச் செல்வதாகும். பல்வேறு காரணங்களுக்காக மக்கள் கோவில்களுக்கு திரள்வதைப் பார்க்கிறோம். கடன், நோய், பிரச்சனைகள் போன்ற கஷ்டமான சூழ்நிலையில் இருந்து விடுபட, ஒரு குறிப்பிட்ட காரியம் கைகூடியதற்கு நன்றி தெரிவிக்க, அன்னதானம் வழங்க, கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ள, மன அமைதி பெற என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
காரணம் என்னவாக இருந்தாலும், நாம் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டால் ஒரு சில கோயில் நெறிமுறைகள் / வழிகாட்டுதல்களைக் கடைபிடித்தல் நன்மை பயக்கும்.
கோயிலுக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய சில கோயில் நெறிமுறைகள் பின்வருமாறு:
1. தூய்மையே முதன்மையானது
இது அனைவரும் அறிந்ததே என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்குச் செல்லும்போது உடல் மற்றும் மனம் இரண்டும் சுத்தமாக இருப்பது முக்கியம். கோவில் என்பது மக்கள் கூடும் இடம் என்பதால், நாம் யாருக்கும் எந்த அசௌகரியமோ அல்லது நோய்த்தொற்றோ ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியம். கோயிலுக்குச் அதிகாலையில் குளித்த பிறகு செல்வதே உகந்த நேரமாகும்.
2. உடை விதிகளைப் பின்பற்றவும்
பெரும்பாலும், நாம் கோவில் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுகிறோம். எனவே நெற்றியில் அணியும் குறியீடுகள் (நாமம், விபூதி, சந்தனம் அல்லது குங்குமம்) உட்பட பொருத்தமான பாரம்பரிய உடைகளை அணிவது விரும்பத்தக்கது. ஒரு கோவிலில் உள்ள தெய்வம் அரசனாகவும் நாம் அனைவரும் அவருடைய குடிமக்களாகவும் இருக்கிறோம். சரியான உடையை அணிந்து பணிவோடு இருப்பதின் மூலம் அரசரிடம் நாம் முறையான மரியாதையைக் காட்டுவது அவசியம். அதே போல அதிக விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்கலாம். மேலும், அழுக்கான அல்லது கிழிந்த ஆடைகளை அணிவது அரசனின் புகழைக் குறைக்கும் செயல் அல்லவா?
3. இறைவனுக்கு காணிக்கை அளித்தல்
நமது சாஸ்திரங்களின்படி, கோவில், முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் முதலானவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அன்பளிப்பு எதையாவது எடுத்துச் செல்ல வேண்டும். மலர்கள், துளசி இலைகள், அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சிறந்தது. வருத்தம் என்னவென்றால் இன்று பல கோவில்களில் தினசரி தீபம் ஏற்றுவதில் கூட சிரமம் உள்ளது. எனவே எண்ணெய்/நெய் அல்லது இதே போன்ற பிற தேவைகளைக் கூட நாம் கோவிலுக்கு வழங்கலாம்.
4. கவனச் சிதறலைத் தவிர்க்கவும்
நாம் அனைவரும் பல நோக்கங்களுக்காக கோயிலுக்குச் செல்கிறோம். எனவே கோயிலின் உள்ளே இருக்கும் வரையாவது இறைவனின் மீது கவனம் செலுத்த வேண்டும். நமது செல்பேசியைப் பார்ப்பதற்கோ, நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிப்பதற்கோ அல்லது வீண் பேச்சுகளில் ஈடுபடுவதற்கோ இது நேரமில்லை. கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தாலும், அந்நேரத்தை தியானத்திலோ அல்லது ஸ்லோகங்கள் அல்லது பஜனைகள் செய்வதிலோ நேரத்தை செலவிடலாம். நாம் இதைச் செய்ய ஆரம்பித்தவுடன், பலர் நம்முடன் ஆர்வமுடன் இணைவதைப் பல இடங்களில் காணலாம்.
5. உடலால் சேவை
இன்றும் கோயில்களில் முக்கியமான பிரச்சனையை, பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல. பொருளாதார ரீதியாக மேம்பட்ட கோயில்களில் கூட இன்று மனித சக்தி பற்றாக்குறை உள்ளது. உற்சவ நேரங்களில் தெய்வத்தை ஊர்வலமாக கொண்டு செல்வது அல்லது கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது அல்லது பிரசாதம் சமைப்பது போன்றவற்றிற்காக இன்று தேவையான அளவு உதவியாளர்கள் இல்லை. எனவே, உங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தால், உங்கள் உள்ளூர் கோயிலுக்கு (அல்லது குடும்பக் கோயில்) சென்று அங்கு சேவையில் ஈடுபடவும். மாலை கட்டுதல், கோலம் போடுதல், கோயில் வளாகத்தைச் சுத்தம் செய்தல், கோவில் சமையலறையில் உதவி செய்தல், பசுக்களுக்கு உணவளித்தல் போன்ற சேவைகளை செய்வதன் மூலம் இறைவனை எளிதில் அடையலாம்.
6. கோயிலின் வரலாற்றை அறிதல்
நம் கோவில்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகள் பழமையானவை (சில பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை). அவை ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளன. கோயிலுக்குச் செல்வதற்கு முன், அக்கோயிலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம். இது அந்த கோயிலின் மகத்துவத்தை நன்றாக அறிய உதவும். ஒவ்வொரு கோயிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல இதிகாசங்கள் மற்றும் புராணங்களின் தொடர்புகளைக் கொண்ட ஒரு வரலாற்று பொக்கிஷமாகும். கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் பிற அமைப்புகளைப் பார்த்து பல்வேறு நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பது குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வாகும். மேலும் இதன் மூலம் கோயிலின் நினைவு அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.
7. கோயிலின் சிறப்பம்சங்களை ஆராய்தல்
இறுதியாக, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சில குறிப்பிட்ட நெறிமுறைகள் உள்ளன. கோவிலை தரிசிக்குமுன் அந்த நெறிமுறைகளை பற்றி அறிந்து கொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக, சில கோயில்களில் குறிப்பிட்ட திறப்பு மற்றும் மூடும் நேரங்கள் உள்ளன, சில கோயில்கள் ஆண்கள் சட்டை அணிவதைக் கட்டுப்படுத்துகின்றன, சில கோயில்களில் ஒரு சில பிரசாதங்கள் அல்லது பூக்கள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் சில கோயில்களில் நமஸ்காரம் செய்யத் தனி இடம் உள்ளன. இது போன்ற நெறிமுறைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம், நாம் கோயிலுக்குள் செலவிடும் நேரம் நல்லப்படியாகக் கழிகிறது.
கோயில்கள் பற்றிய இந்த வழிகாட்டுதல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் இறைவனின் ஆசீர்வாதத்தின் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெற வேண்டுகிறேன். உங்களிடம் ஏதேனும் கூடுதல் கோயில் நெறிமுறைகள் இருந்தால், கருத்துகள் பிரிவில் அவற்றை இடவும். நன்றி!