தன் பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நந்தனா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தியும் விநாயக சதுர்த்தியும் விரைவில் வருவதே அவள் உற்சாகத்துக்கு முக்கிய காரணம்.
மாலையில் வீடு திரும்பிய நந்தனா “அப்பா நீங்கள் கதை சொல்லி பல மாதங்கள் ஆயிற்று. இன்று எனக்கு ஒரு கதை சொல்றீங்களா?” என்று கேட்டாள்
“சரி. சொல்கிறேன். அதற்கு முன், இன்று உன் தோழிகளுடன் என்ன பேசிக்கொண்டு வந்தாய் என்பதைப் பற்றி சொல்லு”, என்றார் அவள் தந்தை
“அப்பா என் தோழியுடன் கிருஷ்ண ஜெயந்தி நாளில் நாம் செய்யும் பலகாரங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்போது அவள் எப்படி பிறந்த குழந்தை இத்தனை பலகாரங்களையும் சாப்பிடும்? என்று கேட்டாள். அதற்கு நான், ‘கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரத்தை அவர் முன் வைத்து வணங்கிவிட்டு நாங்கள் எல்லோரும் சாப்பிடுவோம்’ என்று சொன்னேன். எல்லோரும் சிரித்தார்கள்.” என்றாள்.
இதை கேட்டு சிரித்த நந்தனாவின் தந்தை “நீ சொன்னதில் தவறொன்றும் இல்லை. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதை மறந்து வெறும் ஒரு சம்ரதாயமாக பண்டிகைகளை கொண்டாடுவதால் தான் இதுபோன்ற கேள்விகளை பலர் கேட்கிறார்கள். மேலும் கிருஷ்ணர் பாதங்களை வீட்டில் வரைவதைக் கூட சிலர் கேலி செய்கிறார்கள். கிருஷ்ணனுடைய குழந்தை பருவத்தை கொண்டாடி மகிழ்வதே கோகுலாஷ்டமி ஆகும். கிருஷ்ணரின் பாதங்களை வரைவதின் மூலமும் குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணர் வேஷம் அணியவைப்பதின் மூலமும் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வரும் காட்சியை மனதில் கண்டு களிக்கிறார்கள். “
“நம்மிடம் உள்ள பயத்தையும் பாவங்களையும் போக்கி நல்வழி காட்ட பகவான் வருவார் என்ற நம்பிக்கையை வலியுறுத்தவே இது போன்ற பண்டிகைகளை நாம் கொண்டாடுகின்றோம். மேலும் அந்த பகவனுக்காக செய்யும் பிரசாதத்தை பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தபின் மிச்சம் இருப்பதை நாம் உண்டோமானால் பகவானின் அருள் நமக்கு நிச்சயமாக கிடைக்கும்.” என்றார் நந்தனாவின் தந்தை
“அப்பா கதை…” என்று இழுத்தாள் நந்தனா. சிரித்துக்கொண்டே மேலும் பேசலானார். “சொல்கிறேன். இந்த கதையை கேட்டபின் கிருஷ்ணர் கோகுலாஷ்டமி தினத்தில் யாருடைய வீட்டுக்கு வருவார் என்று நீ சொல்லவேண்டும்.” அதற்கு ‘சரி’ என்று தலையை ஆட்டி சம்மதித்தாள் நந்தனா.
கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா தன் அரச பரம்பரை மற்றும் தன் செல்வங்கள் பற்றி அளவுகடந்த பெருமை கொண்டிருந்தாள். ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ணரை தரிசிப்பதற்காக அங்கு வந்தார். சத்யபாமாவிடம் “தாயே! பல நாளாக எனக்கு ஒரு சந்தேகம். ருக்மணியை விட நீங்க வயதில் இளையவராக இருப்பினும் கிருஷ்ணரின் கவனம் ருக்மணியிடமே அதிகமாக உள்ளது. இளைய ராணியான நீங்கள் அதிக கவனத்திற்கு தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்று கேட்டார் நாரதர்.
“அவரின் கவனத்தை ஈர்க்க நான் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறேன். நீங்களே ஒரு யோசனை சொல்லுங்களேன்” என்று கேட்டார் சத்யபாமா. “தாயே நான் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றினால் கிருஷ்ணர் உங்களுடனே இருப்பார். நான் சொல்வதை நீங்கள் கிருஷ்ணரிடம் கூறவேண்டும்” என்றார் நாரத முனி. சத்யபாமாவும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
உடனே நாரதர் கிருஷ்ணரிடம் சென்று, ‘கிருஷ்ணா நாம் ஒருமுறை ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோமே, அதன் படி நீ இன்று முதல் என்னுடன் கிளம்ப வேண்டும். உடனே வா என்றார். கிருஷ்ணர் வாய் திறக்கும் முன்பே சத்தியபாமா, ‘முனிவரே, என்ன இது? என் கணவரை நான் உங்களுடன் அனுப்ப முடியாது. அதற்கு பதில் வேறு ஏதாவது கேளுங்கள் என்றாள். உடனே முனிவர், ஓஹோ! அப்படியா? சரிசரி அப்படியானால் உங்கள் கணவரின் எடைக்கு இணையாக மதிப்பு மிக்க பொருள் உங்களிடம் இருந்தால் தாருங்கள்” என்றார்.
“முனிவரே! நான் சத்ராஜித்தின் மகள். என் செல்வம் எல்லையற்றது. கிருஷ்ணரின் எடைக்கு சமன் செய்ய என்னிடம் போதுமான செல்வங்கள் இருக்கிறது” என்று கூறி கிருஷ்ணரை தராசின் ஒரு தட்டில் வைத்துவிட்டு தங்கம், நகைகள் மற்றும் ரத்தினக் கற்களை மற்றொரு தட்டில் குவிக்க ஆரம்பித்தார் சத்யபாமா. கிருஷ்ணர் இருந்த தட்டு அசைய கூட இல்லை. சற்று பதற்றத்துடன் “கஜானாவில் இருக்கும் அனைத்து தங்களையும் எடுத்து வாருங்கள்”என்று தன் பணிப்பெண்களுக்கு கட்டளையிட்டார் சத்யபாமா. இவ்வாறாக அனைத்து செல்வங்களையும் வைத்த பிறகும் தராசு தட்டு துளி கூட நகர வில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சத்யபாமாவை கிருஷ்ணரை வணங்கி “சுவாமி, தவறு செய்துவிட்டேன். நீங்கள் தான் யோசனை சொல்லவேண்டும்” என்றார். கிருஷ்ணர் நீ ருக்மணியிடம் போய் நடந்தவற்றை கூறி அவளிடம் யோசனை கேள்” என்றார் கிருஷ்ணர்
சத்யபாமா நடந்தவற்றை ருக்மணியிடம் கூறி தராசு தட்டு இருக்கும் மண்டபத்திற்கு அவரை அழைத்து வந்தார். ருக்மணி கிருஷ்ணரை வணங்கிவிட்டு தன் கையில் இருந்த சில துளசி இலைகளை தராசு தட்டில் வைத்தார். அப்படி செய்தவுடனே கிருஷ்ணர் இருந்த தட்டு மேலே உயர்ந்து துளசி தட்டு தரையை தொட்டது. தட்டிலிருந்து கீழே இறங்கிய கிருஷ்ணர் “சத்யபாமா! நீ விலை உயர்ந்த பொருட்களை கொடுத்தாலும் உன்னிடம் பக்தியை விட ஆணவமே மேலோங்கி இருந்தது. என்னை அடைய பெருஞ்செல்வங்கள் தேவையில்லை. ஒருவர் பக்தியுடன் தன்னால் முடிந்த சிறு பொருளை அர்ப்பணித்து வணங்கினால் அதுவே போதுமானது. அதையே ருக்மணி இன்று நிரூபித்துக் காட்டினாள்” என்றார்
தன் தவறை உணர்ந்து கிருஷ்ணரை வணங்கினார் சத்யபாமா. நாரதரும் தான் வந்த காரியம் சுபமாக முடிந்ததை எண்ணிக்கொண்டு கிருஷ்ணரை வணங்கி விடைப்பெற்றுக்கொண்டார்
இவ்வாறு கதையை முடித்த அப்பா “இப்போது சொல் நந்தனா! கிருஷ்ணர் கோகுலாஷ்டமி தினத்தில் யாருடைய வீட்டுக்கு வருவார்?” என்று கேட்டார். “பக்தியுடன் பகவானை வணங்குவதில் கவனம் செலுத்தி தங்களால் முடிந்ததை அளித்து யார் வணங்குகிறார்களோ அவர்கள் வீட்டுக்குத்தான் கிருஷ்ணர் வருவார்” என்றார் நந்தனா
“சரியாக சொன்னாய். நாம் கடவுளுக்கு பெரும் பொருட்செலவு செய்து சேவை செய்வது தவறு இல்லை. ஆனால் அப்படி செய்யும் பொழுது பணிவும் பக்தியும் இருக்கவேண்டுமே தவிர துளிகூட அகங்காரம் இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, கிருஷ்ணர் என்றாலே ஆனந்தம். கோகுலாஷ்டமி போன்ற நாட்களில் ஆனந்தத்துடன் பக்தி செலுத்தினால் நம் மனது புத்துணர்ச்சி பெரும்” என்றார் நந்தனாவின் தந்தை
“புரிந்தது அப்பா! நாளைக்கும் இதே போல் வேறொரு கதை சொல்ல வேண்டும்” என்று சொல்லி விளையாட சென்றாள் நந்தனா
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்.
- மகாபாரதத்தில் அதிகம் போற்றப்படாத மாவீரர்
- எந்த நாளும் இனிய நாளே
- மன்னிக்க முடியாத குற்றம்..
- உண்மையான ஆன்மீகம் எது?
- காக்க காக்க கனகவேல் காக்க
- பலராம அவதாரத்தின் மகத்துவம்
- அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
- உண்மையான பக்தி எது?
- கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
- நடப்பவை யாவும் நன்மைக்கே !
- துரியோதனனை பற்றி திருவள்ளுவர்
- ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
- கடவுள் குடியிருக்கும் கோவில்
- கர்ணனும் கூடாநட்பும்
- கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
- குழந்தைகளுக்கான கர்ணன் கதை
அருமையான பதிவு சார் . வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி