நந்தனா ஒருநாள் தன் தந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள். “நந்தனா! சாப்பிடாமல் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார் அவள் தந்தை. “அப்பா, இன்று கோவிலில் நடந்ததை நினைத்து கொண்டிருந்தேன். ஒருவர் சந்நிதானத்தை மறைத்தபடி வெகு நேரம் நின்றுகொண்டிருந்தார். எல்லோரும் அவரை நகரச் சொல்லி சத்தம் போட்டனர். சிலர் அவரைத் தள்ளவும் முயன்றனர். நீங்களோ சத்தம் போட்டவர்களை பார்த்து, ‘இப்படி கோவிலுக்குள் கோபப்படுவது மிகப்பெரிய பாவம். அதற்கு விமோசனமே கிடையாது. எனவே அன்பாகச் சொல்லுங்கள்’ என்று கூறினீர்கள். கடவுளை மறைத்துக்கொண்டு நின்றவரைத் திட்டுவது எப்படி பாவச்செயலாகும்? அவர்கள் செய்தது சரி தானே?”என்றாள் நந்தனா.
நந்தனாவின் தந்தை “நான் உனக்கு இதை ஒரு கதையின் மூலம் விளக்குகிறேன்” என்று கூறி கதை சொல்லத் தொடங்கினார். சத்திய யுகத்தில் அம்பரீஷன் என்றொரு மன்னர் இருந்தார். அவர் மஹாவிஷ்ணுவின் சிறந்த பக்தர். மன்னரின் பக்தியில் மிகவும் மகிழ்ச்சியடைந்த பகவான் விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தை மன்னருக்கு வழங்கி ஆசீர்வதித்தார்.
ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் மன்னர் அம்பரீஷன் உபவாசம் இருந்து மறுநாள் விரதத்தை முடித்து கொள்வது வழக்கம். ஒருமுறை அப்படி ஒரு ஏகாதசியின் மறுநாள் விரதத்தை முடித்து கொள்ளும் வேளையில் மன்னனின் அரண்மனைக்கு மகரிஷி துர்வாசர் வந்தார்.
மகரிஷி துர்வாசரை சந்தித்ததில் மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “நான் குளத்தில் குளித்துவிட்டு வருகிறேன். பின்னர் இருவரும் உணவு அருந்துவோம்” என்றார் மகரிஷி துர்வாசர். மன்னரும் சம்மதித்தார். விரதத்தை முடித்து கொள்ள நேரம் வந்த போதும் துர்வாசர் திரும்ப வில்லை. வெகு நேரம் காத்திருந்த மன்னரைக் கண்ட அவர் அமைச்சர் “மகரிஷி துர்வாசர் வருவதற்கு தாமதமாகும் போல் இருக்கிறது. நல்ல நேரம் முடிவதற்குள் துளசி நீரை அருந்தி விரதத்தை முடித்து கொள்ளுங்கள். மகரிஷி வந்த பிறகு உணவு அருந்தலாம்” என்றார். முதலில் தயங்கிய மன்னர் அவ்வாறே துளசி நீரை அருந்தி விட்டு முனிவருக்காகக் காத்திருந்தார்.
சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த மகரிஷி, மன்னர் விரதத்தை முடித்துக் கொண்டதை அறிந்து கடும் கோபமடைந்தார். தன் சக்தியால் ஒரு பூதத்தை ஏவிவிட்டு மன்னரைக் கொல்ல ஆணையிட்டார். பதட்டம் இல்லாத மன்னர் அம்பரீஷன் இரு கை கூப்பி பூதத்தை வரவேற்றார். ஆனால் பூதம் அவரைத் தாக்கும் முன் மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் தானாகவே வெளிப்பட்டு பூதத்தைக் கொன்றது. பிறகு துர்வாசரை தாக்க பாய்ந்தது. இதை கண்ட துர்வாசர் பயந்து போய் அங்கிருந்து ஓடி பிரம்ம தேவனிடம் முறையிட்டார். “நீ மஹாவிஷ்ணுவின் பக்தனை அவமதித்துவிட்டாய். எனவே என்னால் உன்னை காப்பாற்ற முடியாது. பரமசிவனிடம் சென்று முறையிடு.” என்றார் பிரம்ம தேவர். பரமசிவனும் அதே காரணத்தை கூறி விஷ்ணுவிடம் அனுப்பி வைத்தார்.
“ஒரு உண்மையான பக்தன் மீது கோபத்தை காட்டுவது நல்லதல்ல. இதிலிருந்து தப்ப ஒரே வழி பக்தன் அம்பரீஷனிடம் முறையிடுவது மட்டுமே. அவனால் மட்டுமே உன்னை சுதர்சன சக்கரத்தினிடமிருந்து காப்பாற்ற முடியும்.” என்றார் மஹாவிஷ்ணு.
தன் தவறை உணர்ந்து கொண்டு மன்னர் அம்பரீஷனிடம் மன்னிப்பு கேட்டார் துர்வாசர். “மகரிஷி துர்வாசர் என்னுடைய விருந்தினர். அவரை மன்னித்து விடுங்கள்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் மன்னர். அடுத்த நிமிடமே சுதர்சன சக்கரம் அமைதி அடைந்து அதன் இருப்பிடத்துக்கு சென்றுவிட்டது.
“ஒரு உண்மையான பக்தனிடம் நம் கோபத்தை காட்டினால் கடவுளாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்பதை இந்த கதை உணர்த்துகிறது.” என்று சொல்லி முடித்தார் நந்தனாவின் தந்தை. “மேலும், கோபம் ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர தன் பக்தனை பகவான் மிகவும் நேசிக்கிறார் என்பதை நம் இதிகாசங்களும் புராணங்களும் விளக்குகின்றன. உதாரணமாக, இராமாயணத்தில் தன்னிடம் சரணாகதி அடைந்த சுக்ரீவன், விபீஷணன் போன்ற பலரை ஸ்ரீராமர் ஏற்றுக் கொள்வதற்கு முன் லக்ஷ்மணனின் அனுமதியை எதிர்ப்பார்த்தார் என்று பல உபன்யாசங்களில் நான் கேட்டுள்ளேன். லக்ஷ்மணன் போன்ற ஒரு உண்மையான பக்தனின் ஒப்புதலை பெற்ற பிறகே பகவான் தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்பது தெளிவாகிறது.”
கடவுளுக்கு பூஜை செய்பவர்கள், பாராயணம் செய்பவர்கள், கோவிலை தூய்மை செய்பவர்கள், பூ வியாபாரிகள் போன்ற அனைவரும் கடவுளின் நேரடிப் பார்வையில் இருக்கிறவர்கள். இவர்களில் பல அம்பரீஷர்கள் லக்ஷ்மணர்கள் போன்றோர் இருக்கலாம். ஆகையால் எப்பொழுதும் பொது இடங்களில் முக்கியமாக கோவில் போன்ற இடங்களில் அனைவரிடமும் அன்பு செலுத்தி, பகை வளர்க்காமல் கடவுளை வணங்கினால் மட்டுமே அவர் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். நந்தனா, இதிலிருந்து நீ என்ன புரிந்துக்கொண்டாய்? என்று அவள் தந்தை கேட்டார்.
“கோபம் நல்லதல்ல. அதிலும் முக்கியமாக பக்தர்களிடம் கோபத்தை காட்டினால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்” என்றாள் நந்தனா. இதை கேட்டு அவள் தந்தை மிக்க சந்தோஷமடைந்தார்.
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்.
- உண்மையான ஆன்மீகம் எது?
- காக்க காக்க கனகவேல் காக்க
- பலராம அவதாரத்தின் மகத்துவம்
- அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
- உண்மையான பக்தி எது?
- கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
- நடப்பவை யாவும் நன்மைக்கே !
- துரியோதனனை பற்றி திருவள்ளுவர்
- ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
- கடவுள் குடியிருக்கும் கோவில்
- கர்ணனும் கூடாநட்பும்
- கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
- குழந்தைகளுக்கான கர்ணன் கதை
Wonderful description of showing our love and not to be angered at any place or time. Congratulations Ramalingam
thanks a lot sir.