அன்று கந்த ஷஷ்டி கவசம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் நந்தனா சிரித்துக்கொண்டே “என்னப்பா இது ரரரர ரிரிரிரி டுடுடுடு டகுடகு ….. என்றெல்லாம் வரிகள் வருகிறது. இந்த வரிகளுக்கு அர்த்தம் உள்ளதா? இதை எழுதியவர் யார்?” என்று கேட்டாள்.
“இந்த வரிகளின் அர்த்தத்தை சொல்கிறேன். அது மட்டுமின்றி, கந்த ஷஷ்டி கவசம் உருவான கதையையும் அதை படிப்பதினால் கிடைக்கும் பலனையும் சொல்கிறேன், கேள் ” என்று சொல்லி மேலும் பேசினார் நந்தனாவின் தந்தை.
உருவான கதை
“பால தேவராயர் என்ற முருக பக்தர் தீராத நோயுடன் போராடிக்கொண்டிருந்தார் . திருச்செந்தூர் கோவிலில் அவருக்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். பின் அவரை ஒரு பதிகம் இயற்றுமாறு கூறி அதன் மூலம் அவரைத் துன்புறுத்தும் நோய் விலகுமென்றும் கூறினார். மேலும் இந்த பதிகத்தை யாரெல்லாம் படிக்கிறார்களோ அவர்களின் அனைத்து நோய்களும் விலகும் என்றும் அருள்பாலித்தார். இந்தப் பதிகமே ஸ்ரீ கந்த ஷஷ்டி கவசம் ஆகும். பால தேவராயர் இதைப் போல் முருகனின் மற்ற ஆறுபடை வீடுகளின் மீதும் கவசம் பாடியுள்ளார். என்றாலும் கந்த ஷஷ்டி கவசமே மிகப் பிரபலமாக உள்ளது. “
“கந்த ஷஷ்டி கவசத்தை கவனத்துடன் படித்தால் ஒருவர் கடவுளிடம் தன் வேண்டுதலை எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழிமுறையை தெரிந்து கொள்ளலாம். முதலில் கடவுளை மனதில் தியானிக்க வேண்டும். அதன் பின் அவரைப் போற்றி அழைக்க வேண்டும். அவரின் திவ்ய உருவத்தை மனதில் இருத்தி நம் கஷ்டங்களில் இருந்து விடுவிக்க முறையிடவேண்டும். இறுதியாக அவரிடம் சரண் அடைய வேண்டும். இந்த வரிசையில் முடிகிறது கந்த ஷஷ்டி கவசம்.”
பொருள்
“முதல் சில வரிகளின் வரிகளின் மூலம் தன்னை காப்பாற்ற விரைந்து வர வேண்டும் என்று முருகரை அழைக்கிறார் பால தேவராயர். “சரவணபவ” என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ‘ர’, ‘ரி’ போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப்பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும்.”
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி…
“தனக்கு காட்சி அளித்த முருகப்பெருமானின் தோற்றத்தை வர்ணிக்கிறார் பால தேவராயர். அந்த வரிசையில் முருகரின் திருவடி மற்றும் சிலம்பு ஏற்படுத்தும் சப்தத்தை வர்ணிக்கும் வரிகளையே நீ தொலைக்காட்சியில் கேட்டாய் நந்தனா.”
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு…
இப்போது அதன் அர்த்தம் புரிகிறது தானே?” என்கிறார். நந்தனாவும் அர்த்தம் புரிந்த மகிழ்ச்சியில் தலை அசைத்தாள்.
அவர் மேலும் தொடர்ந்தார். ” முருகப்பெருமானே! உன் திருவடியை சரணடைகிறேன். என் தலை, முகம், கண்கள், காதுகள், நாசி ஆகியவற்றை உன் வேல் கொண்டு காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். உன்னை பாடும் என் வாய், பல் மற்றும் கன்னம், மார்பு, தோள்கள், பிடரிகள், முதுகு, விலா முதலிய உடல் உறுப்புகளை உன் வேற்படை கொண்டு காக்க வேண்டும் என்று பாடுகிறார்.”
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க…..
“முருகப்பெருமானே! எனக்கு ஏற்படும் தடைகளை விலக்கி, நோய், பில்லி, சூனியம், வறுமை, தீராத கவலைகள் போன்றவற்றிலிருந்து என்னை விடுவித்து காக்க வேண்டும் என்று கந்தனை வணங்குகிறார்.”
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க…..
“மேலும் முருக பெருமானை பல பெயர்களில் போற்றிய பிறகு கந்த ஷஷ்டி கவசத்தை படிப்பதற்கான செயல் முறையை விளக்குகிறார். எப்பொழுது படிக்க வேண்டும், எத்தனை நாட்கள் படிக்க வேண்டும், எந்த மனநிலையோடு படிக்க வேண்டும் என்பதை விளக்கி அதை படிப்பதினால் ஏற்படும் பலன்களை விளக்குகிறார்.”
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி….
இவ்வாறு நந்தனாவிடம் விளக்கம் கூறி அவளை கவனத்துடன் கந்த ஷஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நந்தனாவும் தலை அசைத்தபடி விளையாடச் சென்றாள்.
இந்த தந்தை-மகள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தனாவின் அம்மா “நான் பல நாள் சஷ்டி கவசத்தைச் சொல்லி இருக்கிறேன். ஆனால் அதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது இப்போது தான் தெரிகிறது. இத்தகைய உயர்ந்த ஸ்லோகத்தையும் சிலர் பழிக்கின்றார்களே”, என வருத்தத்துடன் தெரிவித்தாள் .
அதற்கு நந்தனாவின் தந்தை , “அனைத்தும் நன்மைக்கே என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இன்று நேற்று நடக்கும் விஷயமல்ல. பல யுகங்களாக ஹிரண்யகசிபு, இராவணன், கம்சன், சிசுபாலன் போன்ற பலர் பகவானை இழிவு படுத்த முயற்சி செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இன்றைய காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. எதிர்காலத்திலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும். ஆனால் ஒன்றை நினைத்துப் பார். இவர்கள் மூலம் தான் கடவுளின் மேன்மை அனைவருக்கும் நன்றாகத் தெரிய வருகிறது. நம் அடுத்த தலைமுறைக்கு ஆன்மீகத்தின் புரிதலை அதிகப் படுத்த இந்தச் செயல்கள் உதவக் கூடும். ஒரு வகையில் நாம் இவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார் சிரித்துக் கொண்டே!
நந்தனாவின் தந்தையைப் போல் நாமும் நம் குழந்தைகளுக்கு கந்த ஷஷ்டி கவசத்தின் மேன்மையை சொல்லிக் கொடுப்போம். வள்ளுவர் சொன்னது போல நன்னலம் செய்தலே இன்னா செய்தாரை ஒறுத்தல் ஆகும் அல்லவா!
கந்தனுக்கு அரோஹரா ! முருகனுக்கு அரோஹரா !
குமரனுக்கு அரோஹரா ! வேலனுக்கு அரோஹரா !
***
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய சில பதிவுகள்.
பலராம அவதாரத்தின் மகத்துவம்
அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
உண்மையான பக்தி எது?
Nice one Rama. Continue the good work.
Thank you Jana
Super Rama.
Thanks Anand
Rama… No words to say. This article has become a perfect Medine for me at the right time now. Keep up your work da.
Thanks Mohan
Excellent Ranga… detailed one..
Thanks Raathigha, this one is by my friend Ramalingam.
Well explained sir. Continue your journey on knowledge sharing
Thank you.
Very good explanation.
Thank you
கந்தசஷ்டி கவசத்துககு அருமையான விளக்கம் அளித்தீர்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி