To read in English, click here
கேள்வி : கோவில்களுக்கு வழிபடச் செல்லும் போது பாரம்பரிய உடையை தான் அணிய வேண்டுமா? எனக்கு எது வசதியோ அதை அணிந்து சென்றால் என்ன தவறு?
பதில்: இந்த கேள்விக்குப் பல கோணங்கள் இருக்கின்றன. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது இது தான்: முதலில் பாரம்பரிய உடை என்பதே காலத்திற்கேற்ப மாறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் இருந்த பாரம்பரிய உடைகள் (கச்சம், கொசுவம், மடிசார் போன்றன) இன்று அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. எனவே பாரம்பரியம் என்பதை விட பொருத்தமான அல்லது தக்கதான என்று எடுத்துக்கொள்ளலாம்.
உடை கட்டுப்பாடுகள் (பரிந்துரைகள்?) இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். கீழ்க்கண்டவை போல:
- சமத்துவத்தை உணர்த்த
கடவுள் என்பவரின் முன் அனைவரும் சமம் என்றிருக்கும் போது சமூக ஏற்றத்தாழ்வுகள் தெரியாதவாறு இருக்க இவை கொண்டு வரப்பட்டு இருக்கலாம். - கவனச்சிதறல்களைத் தடுக்க
வழிபட வந்த இடத்தில் வந்த காரியத்தை மறந்து மற்றவர் உடையில் கவனம் சென்றால் நம் வேண்டுதலில் மனம் செல்லாது. ஒன்று போல் உடை அணிந்தால் முழு கவனமும் கடவுள் பால் செல்லும். - வசதிக்காக
கோயிலில் சில பணிகள் செய்ய அவா எழலாம். துடைப்பது, பூ கட்டுவது, அன்ன தானத்தில் உதவுவது போன்ற பணிகளில் ஈடுபட நேரலாம். அல்லது தரையில் அமர்ந்து தியானம் கூட செய்ய விரும்பலாம். நவீன ஆடைகளில் இது எளிதில் முடியுமா? - விதிகளை மதிக்க
பல புராதன கோயில்கள் ஆகமங்களை அனுசரித்து பல விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில விதிகள் நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலம் காலமாக பின்பற்றப்படும் விதிகளை மதிப்பதால் யாதொரு தீங்கும் இல்லையே !
மறுபுறம், பல நாட்களாகவே நான் நமது அலுவலக வழக்கமான ‘டை ‘ அணிதலைப் பற்றி சிந்தித்து இருக்கிறேன். இன்று வரை அதை எதற்காக கட்டுகிறோம் என்று புரிந்ததில்லை. ஆச்சர்யம் என்னவென்றால் அதை பற்றி யாரும் இது போல் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை!