இந்த ஊரடங்கு காலத்தை நந்தனா இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பக்தி கதைகளை படிப்பதன் மூலம் பயனுள்ளதாகச் செலவிட்டாள். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் உள்ள பல கிளைக் கதைகள், நாயன்மார்கள் பற்றிய கதைகள், ஔவையார், ஆண்டாள், ஆதி சங்கரர், ராமானுஜர் போன்ற மகான்களின் வரலாற்றுக் கதைகள் பற்றியும் படிக்க அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்த கருத்துக்களைப் பற்றி தன் தந்தையுடன் விவாதமும் செய்தாள். விவாதம் சுவையான கலந்துரையாடலாகவே இருந்தது.
ஒரு நாள் நந்தனா அப்பாவிடம் கேட்டாள் ” அப்பா, அர்ஜூனன் , லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், பிரஹலாதன், அகலிகை, ஆண்டாள், ஆதி சங்கரர், ராமானுஜர், நாயன்மார்கள் போன்ற பல பக்தர்களுக்கு பகவான் அருள் பாலித்திருக்கிறார். அவர்களில் யார் முதல் இடத்தில் இருக்கிறார்? “
நந்தனாவின் கேள்வி வியப்பளித்தாலும் அவளின் சிந்திக்கும் திறனை எண்ணி அவள் தந்தை ஆனந்தம் அடைந்தார். “நந்தனா, ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது நியாயமாகாது. கடவுள் அருள் பெற்ற அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்.”, என்கிறார். ஆனால் நந்தனா அவரை விடவில்லை. “இல்லை அப்பா நீங்கள் சொல்லித் தான் ஆக வேண்டும்”, என்று வற்புறுத்தினாள். சிரித்துக்கொண்டே அவர் சொன்னார், ” நான் சொல்லாமல் நீ என்னை விட மாட்டாய் போலிருக்கிறது. சரி, சொல்கிறேன். முதலில், உன் கேள்வியோடு சில பெயர்களை கூறினாய். எதனால் அவர்கள் உன்னத நிலையை அடைந்தார்கள் என்று நீ நினைக்கிறாய்?”, என்றார் அவள் தந்தை.
அர்ஜுனன் – பகவத் கீதையை முதலில் கேட்டவர். அதுவும் பகவான் கிருஷ்ணர் வாயிலாக.
லக்ஷ்மணன் – ராமருக்கு சேவை செய்யவே தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார்.
ஆஞ்சநேயர் – இவரிடம் தான் ராமர் மிக நம்பிக்கையோடு பல காரியங்களை செய்யச் சொன்னார். சிறந்த ராம பக்தர்.
ப்ரஹலாதன் – இவரின் பக்திக்கு அடிபணிந்து ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மராக பூமியில் அவதரித்தார்.
ஆண்டாள் – நம்பிக்கையும் பக்தியும் அவரை பகவான் ரங்கநாதரிடம் சேர்த்தது. இது போல பலர் பல காரணங்களுக்காகப் போற்றப் படுகின்றனர்”, என்றாள்.
‘கதைகளை மிக நன்றாகப் படித்திருக்கிறாய், மிக்க மகிழ்ச்சி!’ என்று கூறி மேலும் தொடர்ந்தார். ‘ எனக்கு மிகவும் பிடித்தவர் லக்ஷ்மணன். உனக்கு நினைவிருக்கிறதா? நீ ஒரு முறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டாய் – ஆதிசேஷன் தான் லஷ்மணனாகவும் பலராமராகவும் அவதரித்தார். ஆனால் பலராமர் தசாவதாரங்களில் ஒரு அவதாரமாக இருக்க, லக்ஷ்மணர் மட்டும் ஏன் அவதாரமாகக் கருதப் படுவதில்லை என்று கேட்டாய். அதற்கு பதிலை இப்போது சொல்கிறேன்.”
“ராம அவதாரத்தில் ராமருக்கு தம்பியாக பிறந்து வாழ்நாள் முழுவதும் ராமருக்கு சேவை செய்தார் ஆதிசேஷன். தன்னலமற்ற சேவையைத் தன் கடமையாகக் கொண்டதால் இதைப் போற்றும் விதமாக கிருஷ்ண அவதாரத்தில் தனக்கு அண்ணனாக ஆதிசேஷனை அவதரிக்க செய்து அவரை தினந்தோறும் வணங்கி வந்தார் பகவான் கிருஷ்ணர். இதன் மூலம் தன் முக்கியமான தசாவதாரங்களில் பலராமரும் ஒரு அவதாரமாக அனைவரையும் அறியச் செய்தார். “
“நான் கற்றுக்கொண்ட உன்னதமான பாடம் – தன்னலமற்ற சேவைகளில் ஈடுபடுகிறவர்களை பகவான் அவதாராபுரஷராகவே அங்கீகரித்து அருளுவார். அத்தகையவர் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதையே பலராமரின் அவதாரம் உணர்த்துகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து”
“இந்தத் தகவலை தசாவதாரம் என்ற திரைப்படத்தில் கிருஷ்ணர் நாரதரிடம் கூறும் விதமாக காட்சி அமைத்து இருப்பார்கள். அந்தத் திரைப்படத்தை இன்று நாம் பார்ப்போம்” என்று கூறி அவளை அழைத்துச் சென்றார் நந்தனாவின் தந்தை.
உங்கள் குழந்தைகள் நம் பாரம்பரியத்தைப் பற்றி அறிய அமர் சித்ர கதா (Amar Chitra Katha ) போன்ற புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.
அமர் சித்ரா கதாவின் தொகுப்பின் இணைப்பு – Online collection of Amar chitra Katha
குழந்தைகள் அவற்றைப் படித்து விட்டு உங்களைக் கேள்வி கேட்க ஊக்கப் படுத்துங்கள். இது போன்ற உரையாடல்கள் நமக்கு முழு மனநிறைவைத் தரும் என்ற உத்தரவாதத்துடன் இந்த பதிவை நிறைவுசெய்கிறேன்.
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய சில பதிவுகள்.
கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?