வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா! இந்தக் கோவிலுக்கு இத்தனை மக்கள் வந்திருக்கிறார்களே, இவர்கள் தான் எல்லாரையும் விட கடவுளிடம் அதிக பக்தி உடையவர்களா?” என்று கேட்டாள்.
அதற்கு அவள் அப்பா, “கோவிலுக்குச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால் அதுவே உண்மையான பக்தி என்று சொல்லமுடியாது” என்றார். அப்பாவின் அந்த பதிலை எதிர்பாக்காத நந்தனா வியப்புடன் அவரையே பார்க்க அவர் மேலும் தொடர்ந்தார். “உனக்கு பக்த ப்ரஹலாதன் கதை ஞாபகம் இருக்கிறதா..” என்று கேட்டு முடிப்பதற்குள் நந்தனா குறுக்கிட்டு, “எனக்கு புரிந்து விட்டது. பக்த ப்ரஹலாதனைப் போல் கடவுள் நாமம் சொல்வதே சிறந்த பக்தி”, என்றாள் நந்தனா.
“கடவுள் நாமம் சொல்வதையும் சிறந்த பக்தி என்று சொல்லலாம். ஆனால் ப்ரஹலாதனை காப்பாற்றியது ஹரி நாமம் மட்டும் அல்ல. என்னை நாராயணன் காப்பாற்றுவார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையே அவனைக் காப்பாற்றியது. நாம் எல்லோரும் கடவுளின் நாமத்தை தினந்தோறும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ப்ரஹலாதனைப் போல் நம்பிக்கையான மனநிலையில் கடவுள் நாமத்தைச் சொல்கிறோமா என்பதே முக்கியம்.
ப்ரஹலாதனின் தந்தையான ஹிரண்யகசிபுவின் சித்ரவதையிலிருந்து மீள பல பேர் பகவான் நாராயணனை அழைத்திருக்கலாம். ஆனால் பகவான் நாராயணன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற ப்ரஹலாதனின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உகந்தே அவர் நரசிம்மராக பூமியில் அவதரித்தார்.
நந்தனா! ப்ரஹலாதனிடமிருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு நம்பிக்கை. கடவுள் அருகில் இருக்கிறார் என்ற உணர்வோடு ஸ்லோகங்களை தினந்தோறும் சொல்லி வந்தால் ப்ரஹலாதனை காப்பாற்றியது போல் உன்னையும் நாராயணன் காப்பாற்றுவார்.”
இந்தக் கதையில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பகவானுக்கு தான் தூணில் இருந்து வெளி வரப்போவது தெரியும் என்றாலும், பல தூண்கள் இருந்த அந்த மாளிகையின் எந்தத் தூணை ஹிரண்யகசிபு பிளப்பான் என்பது தெரியாததால் அங்கு இருந்த அத்தனைத் தூண்களிலும் அவர் தன்னை படைத்துக் கொண்டாராம்! பக்தனுடைய நம்பிக்கையை தளரவிடாமல் காப்பாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே!
“இறை நம்பிக்கையைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த தென்கச்சி சுவாமிநாதன் அய்யா ஒரு சுவாரசியமான கதை சொல்லியிருக்கிறார்” என்று கூறி மேலும் தொடர்ந்தார் நந்தனாவின் தந்தை.
“ஒரு நாள் கைலாயத்தில் பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டார் “சுவாமி உங்களை பல கோடிப்பேர் தினந்தோறும் வணங்குகிறார்கள். அவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது சிறந்த பக்தன் யார்?” சிவபெருமான் உடனே கங்கைக் கரை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு திருடனை காண்பித்து “அவனே சிறந்த பக்தன்”, என்றார். இதை எதிர்பார்க்காத பார்வதி தேவி, “ஒரு திருடனை சிறந்த பக்தன் என்று எப்படி கூறுகிறீர்கள்” என்று கேட்டார். “
“அவன் தான் சிறந்த பக்தன் என்று உனக்கு புரிய வைக்கிறேன்” என்று சொல்லி பார்வதி தேவியை கங்கை கரைக்கு அழைத்து வந்தார் சிவபெருமான். வயதான தம்பதிகளாக உருவெடுத்துக் கொண்டபின் பார்வதி தேவி என்ன செய்ய வேண்டுமென்று கூறிவிட்டு சிவபெருமான் கங்கை நதியில் குதித்தார்.
சிறிது நேரத்தில் பார்வதி தேவி “என் கணவர் நதியில் மாட்டிக் கொண்டார். யாராவது அவரைக் காப்பாற்றுங்கள் ” என்று கூச்சலிடத் தொடங்கினார். அவரைக் காப்பாற்ற பல பேர் முன் வந்தனர். உடனே, “பாவம் செய்த ஒருவர் காப்பாற்ற முயன்றால் அவரும் நதியில் சிக்கிக்கொள்வார். எனவே பாவம் செய்யாத ஒருவரே என் கணவரை காப்பாற்ற முடியும். அப்படிப்பட்டவர் யாரேனும் வாருங்கள். என் கணவரை காப்பாற்றுங்கள்”, என்று பார்வதி தேவி அங்கு வந்தவர்களைப் பார்த்து முறையிட்டார்.
இதைக் கேட்டதும் உதவி செய்ய ஒருவரும் முன்வரவில்லை. அங்கிருந்த அந்த திருடன் மட்டும் சட்டென்று நதியில் குதித்து அந்த முதியவரை (சிவபெருமானை) காப்பாற்றினான். இதைக் கண்ட அனைவரும், பார்வதி தேவியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஏனம்மா, பாவம் செய்யாதவரே காப்பாற்ற முடியும் என்று கூறினீர்கள். ஆனால் உங்கள் கணவரை காப்பாற்றியதோ பல பாவங்களைச் செய்த ஒரு திருடன்.” என்றார். இதைப் பற்றி பார்வதி தேவி அந்த திருடனிடம் கேட்டபொழுது, “கங்கை நதியில் குளித்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த நம்பிக்கையில் தான் அவரைக் காப்பாற்ற நதியில் குதித்தேன்”, என்றான் . அவன் சொன்ன பதில் அங்கிருந்த அனைவரையும் தலை குனியச் செய்தது.”
“ஆகவே நந்தனா, கடவுளை நம்பிக்கையோடு வழிபடுவதே உண்மையான இறை பக்தியாகும்”, என்றார் அவள் தந்தை. ஒரு புதிய விஷயத்தை அறிந்தவளாய் மிக்க மகிழ்ச்சியுடன் கடவுளை வழிபட்டாள் நந்தனா.
என்னுடைய முந்தைய பதிவுகள்
கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
Very nice Rama
Thank you Bharani.