அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில் (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார். ஆலய தரிசனத்திற்கு பிறகு வீடு திரும்பும் போது நந்தனா, “அப்பா! கோயிலில் என்னை ஸ்லோகங்கள் சொல்ல சொல்கிறீர்கள். மற்றபடி எதுவும் கேட்கச் சொல்லுவதில்லை. பிறகு எப்படி நமக்கு வேண்டியதை கடவுள் கொடுப்பார்? ” என்று தந்தையிடம் கேட்டாள்
உடனே அவர் ஒரு சிறு புன்னைகையுடன், “சரி, இன்று ஒரு கதை சொல். உன் கேள்விக்கான விடை அந்த கதையில் இருக்கும்”, என்றார். “எந்த கதை?” என்றாள் ஆர்வத்துடன் நந்தனா. “உனக்கு மிகவும் பிடித்த கதை தான், கிருஷ்ணரின் நண்பர் சுதாமா பற்றிய கதை”, என்றார் அவர்.
சரி என்று கூறி நந்தனாவும் சொல்லத் தொடங்கினாள். “சுதாமா என்கிற குசேலரும் கிருஷ்ணரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். குருகுலம் முடிந்த பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. பல வருடங்கள் கடந்தன. கிருஷ்ணர் த்வாரகையின் மன்னராக ஆனார். சுதாமா தன் மனைவி குழந்தைகளுடன் ஏழ்மையில் இருந்தார். அவரால் தன் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு கூட அளிக்க முடியவில்லை.
ஒரு நாள் அவர் மனைவி, “நமக்கு மிகவும் பணக் கஷ்டம் இருப்பதால் உங்கள் நண்பரான கிருஷ்ணரிடம் உதவி கேட்கலாமே. அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?”, என்று கேட்டாள். “கண்டிப்பாக செய்வார். ஆனால் எனக்கு தான் நண்பனிடம் உதவி கேட்கத் தயக்கமாக இருக்கிறது ” என்றார் சுதாமா. “நமக்கு அவர் மட்டும் தான் உதவி செய்ய முடியும் “, என்று கூறி அவரை போகச் சொன்னார் சுதாமாவின் மனைவி. மேலும் அன்பளிப்பு கொடுக்க வீட்டில் வேறு ஒன்றும் இல்லாததால் ஒரு பிடி அவலை ஒரு துணியில் கட்டிக் கொடுத்தார்.அதை எடுத்துக் கொண்டு தன் நண்பனைக் காண புறப்பட்டார் சுதாமா.
அரண்மனை வாசலில் தயக்கத்துடன் நின்றுக் கொண்டிருந்த சுதாமாவை பார்த்த கிருஷ்ணர் வாசலுக்கு ஓடி வந்து, “எப்படி இருக்கிறாய் சுதாமா! இத்தனை வருடங்களுக்கு பிறகு தான் என் ஞாபகம் வந்ததா? உன் மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? ” என்று பலவாறு விசாரித்து சந்தோஷத்துடன் சுதாமாவை உள்ளே அழைத்துச் சென்றார்
தன்னை கிருஷ்ணர் அடையாளம் கண்டு கொண்டதை எண்ணி சுதாமா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்த அவலை உண்ட கிருஷ்ணர், “அருமை! எனக்கு அவல் மிகவும் பிடிக்கும் என்பதை ஞாபகம் வைத்திருக்கிறாயே. மிக்க மகிழ்ச்சி. சரி, உனக்கு என்ன வேண்டும் சொல் சுதாமா” என்று கேட்டார்.
“கிருஷ்ணா, உன்னை பார்த்த ஆனந்தத்தில் இருக்கிறேன். எனக்கு வேறென்ன வேண்டும்? இப்படி உன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்”, என்று கூறிய சுதாமா தான் வந்த விஷயத்தைப் பற்றி பேசாமலே கிருஷ்ணரிடம் இருந்து விடைப் பெற்றுக்கொண்டார்.
வீட்டுக்கு அருகில் வந்த உடன் தான் “கிருஷ்ணன் என்ன கொடுத்தான் என்று மனைவியும், குழந்தைகளும் கேட்பார்களே” என்ற எண்ணம் சுதாமாவுக்கு வந்தது. ஆனால் வீட்டுக்கு உள்ளே வந்த சுதாமாவுக்கு அதிர்ச்சி. அங்கே பொன், பொருள் மற்றும் புத்தாடைகள் ஏராளமாக குவிந்து கிடந்தன. “இவை அனைத்தும் கிருஷ்ணர் அனுப்பியது”, என்றார் அவரின் மனைவி.ஆச்சரியத்தில் அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. இவ்வாறாக சுதாமாவின் வறுமை நீங்கியது”, என்று கூறி முடித்தாள் நந்தனா. “இப்போது சொல்லுங்கள். நான் கேட்ட கேள்விக்கு பதில் இந்த கதையில் எங்கு உள்ளது?” என்று தந்தையிடம் கேட்டாள்
“இப்போது அரண்மனையை ஒரு கோவிலாகவும், நண்பர் கிருஷ்ணரை கடவுளாகவும், சுதாமாவை ஒரு பக்தனாகவும் மாற்றி இந்த கதையை மனதில் சொல்லிப் பார்” என்றார் அவள் தந்தை. “நாம் எல்லோரும் சுதாமாவைப் போல் கடவுளுக்கு நம்மால் முடிந்ததை அர்ப்பணித்து, நம் மெய்க்கண்ணால் அவர் உண்ணுவதைக் கண்டு ஆனந்தப் படவேண்டும். நம் கடமைகளைச் சரியாகச் செய்து வந்தால் நமக்கு வேண்டியவற்றை கடவுள் நாம் கேட்காமலே தந்தருளுவார்.”, என்றார்.
இதை தான் பகவான் கிருஷ்ணர் கீதையில் விளக்கமாகச் சொல்லிருக்கிறார்.
என்னைச் சரணடை.
நம்பிக்கையுடனும் ச்ரத்தையுடனும் என்னை வணங்கு.
ஆனந்தத்துடன் உன் கடமையை செய்.
இதுவே வெற்றிக்கான பாதை.
நாமும் கீதையைக் கற்று நம் பிறப்பின் பயனை அடைவோமாக.
என்னுடைய முந்தைய பதிவுகள்
நடப்பவை யாவும் நன்மைக்கே !
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?