நோய்க்கிருமி பரவுதல் காரணமாக நந்தனாவின் தந்தை அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்து இருந்தார். நந்தனாவின் பள்ளியும் விடுமுறை அறிவித்ததால் கிடைத்த கூடுதல் நேரத்தில் இருவரும் சேர்ந்து உலக நலனுக்காக ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்ல முடிவெடுத்தனர்.
அவள் தந்தை “நந்தனா, இன்று நாம் சுப்ரமணிய புஜங்கம், நாராயணீயம் போன்றவற்றில் இருந்து சில ஸ்லோகங்கள் சொல்வோம். மேலும் ஒரு வேத மந்திரத்தையும் கேட்போம். அது கிருமிகளை கொல்லும் சக்தி உடையது என்று கேள்வி பட்டேன்”, என்றார்.
“அப்படியா அப்பா?”, என ஆச்சரியமாகக் கேட்ட நந்தனா , “இவைகளின் அர்த்தத்தையும் எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று கேட்டாள் .
அதற்கு அவர், “எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. ஆனால் இவைகளை நாம் சொல்வதின்/கேட்பதின் மூலம் நாம் வேண்டும் பலன்கள் கண்டிப்பாகக் கிடைக்கும்”, என்கிறார்.
“ஆனால் அப்பா, அர்த்தம் தெரியாமல் மந்திரத்தை சொல்வதால் ஒருவருக்கு எப்படி பலன் கிடைக்கும்?”, என்று கேட்டாள் நந்தனா.
“மந்திரங்களின் அர்த்தத்தை தெரிந்துகொள்வது அவசியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் ஒரு மந்திரத்தை நம்பிக்கையோடு சொல்வது. இப்படி ஒரு சொல்லை பல காலங்கள் நம்பிக்கையோடு ஜபித்ததால் தான் ரத்னாகரன் என்ற திருடன் வால்மீகி என்ற மாபெரும் முனிவராக மாறினார். உனக்கு தெரியும் தானே?” என்றார்.
“கதை தெரியும் அப்பா, ராம நாமத்தை ஜபித்து தானே அவர் அருள் பெற்றார். ராமரின் மகிமையை தெரியாதவர்கள் இருப்பார்களா?” என்றாள் நந்தனா.
“ஆனால் ராமரின் மகிமையை பற்றியும் அவர் நாமத்தின் சக்தியையும் ரத்னாகரனுக்கு அப்போது தெரியாதே. சொல்லப்போனால் ராம நாமத்தையே அவனால் உச்சரிக்க முடியவில்லையே. அப்படி இருக்க அவனுக்கு எப்படி பகவான் அருள் கிடைத்தது” என்றார் அவள் தந்தை. எப்படி என்ற முக பாவனையுடன் நந்தனா தன் தந்தையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவள் தந்தை தொடர்ந்து கூற ஆரம்பித்தார்.” தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட ரத்னாகரன், நாரத முனிவரிடம் ஆலோசனை கேட்டான். ராம நாமத்தை உபதேசிக்க முயன்ற நாரதர், தான் செய்த பாவங்களின் பயனால் ரத்னாகரனால் ராம நாமத்தை சொல்ல முடியாது என்பதை உணர்ந்தார். எனவே அதற்கு பதிலாக “மராமரா” என்று சொல்லுமாறு அவனிடம் கூறினார். ராமரை பற்றி எதுவும் தெரியாத போதிலும் ரத்னாகரன் பல காலம் நம்பிக்கையோடு ‘மராமரா’ என்று சொல்லத் தொடங்கி ‘ராம ராம’ என்று ராம நாமத்தை அறிந்து கொண்டார். வால்மீகியாக மாறினார். “
“தெரிந்த கதையாக இருந்தாலும், இந்தக் கதையின் உட்பொருள் மிக முக்கியமானது.ராம நாமத்தை மராமரா என்று சொல்லிய போதும், பல பாவங்கள் செய்த ஒரு திருடனுக்கு கடவுள் அனுக்கிரஹம் கிடைத்தது. காரணம், அவன் அதன்மீது வைத்த நம்பிக்கை. அது போல நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை சிறிதளவும் சந்தேகமின்றி பின்பற்றினால் வாழ்க்கையில் நல்ல பயனை அடையலாம். பகவான் என்னைக் காப்பாற்றுவார் என்று எவர் ஒருவர் முழு நம்பிக்கையுடன் ஜெபிக்கிறாரோ அவருக்கு அர்த்தம் தெரியாத மந்திரம் கூட பயன் தரும். இதையே வால்மீகியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.”
“நமக்கு நோய் இருக்கும் போது எப்படி மருத்துவர் கொடுக்கும் மருந்தை நம்பிக்கையோடு சாப்பிடுகிறோமோ அதைப் போல் நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களையும் நம்பிக்கையோடு பின்பற்ற வேண்டும். உதாரணமாக, மேலே சொன்ன வேத மந்திரம், கிருமிகள் மற்றும் அதனால் வரும் வியாதிகளை முறியடிப்பதற்காகச் சொல்லப் படுகிறது. விஞ்ஞானத்திலோ கிருமிகள் பற்றிய அறிவு ஒரு சில நூற்றண்டுகளுக்கு முன் தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே கிருமிகளை பற்றிய குறிப்புகள் வேத மந்திரத்தில் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதனால் நாம் அனைவரும் முழு மனத்துடனும் நம்பிக்கையுடனும் கடவுளை வழிபட வேண்டும்”, என்றார்.
தந்தை சொன்னதை புரிந்து கொண்ட நந்தனா உலக நலனுக்காக பிரார்த்தனைக்குத் தயாரானாள்.
——————-
கிருமிகளைக் கொல்வதற்கான வேத மந்திரமும் அதன் அர்த்தமும் – பிரார்த்திப்போம்…
என்னுடைய முந்தைய பதிவுகள்
கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு