நந்தனா தன் பள்ளித் தோழி லட்சுமியின் வீட்டிற்கு விளையாட சென்றிருந்தாள். அங்கு ரம்யா என்ற சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. அவளும் தன்னை போல் ஐந்தாம் வகுப்பு படிப்பதாக நந்தனா தெரிந்துகொண்டாள். விளையாடி முடிக்கும் தருணத்தில் நந்தனாவின் தாய் அவளை கோவிலுக்குச் செல்லும் பொருட்டு அழைக்க வந்தாள் . நந்தனா தன் புதிய தோழியான ரம்யாவையும் தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தாள் .
அவளுக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. ரம்யா தன் குடும்பம் என்றுமே கோவிலுக்குச் சென்றதில்லை என்று கூறினாள்.தன் தந்தை கோயிலில் இருப்பது வெறும் கல் என்று கூறியிருப்பதால் தாங்கள் அங்கு செல்வதில்லை என்றாள். பெரும் குழப்பத்துடன் நந்தனா அவளிடமிருந்து விடைபெற்றாள் . அன்று மாலை கோவிலுக்கு சென்று திரும்பும் போது நந்தனா ரம்யாவுடன் நடந்த உரையாடலைத் தன் தந்தையிடம் பகிர்ந்துகொண்டாள். “அப்பா, ரம்யாவோட அப்பா சொன்னது தப்பு தானே?” என்று கேட்டாள் நந்தனா.
“அவர் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை” என்று சிறு புன்னகையுடன் நந்தனாவிடம் தந்தை பேசத் தொடங்கினார். “இந்த சமுதாயத்தில் எப்படி கடவுளை வழிபடுபவர்கள் இருக்கிறார்களோ அதை போல் கடவுள் இல்லை என்ற நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்களை நாத்திகர்கள் என்று கூறுவார்கள். அவர்களுக்கு நமது தெய்வங்கள் கல்லாக தான் தெரியும்”.
“அப்படி சொல்பவர்களுடன் விளையாட எனக்கு விருப்பம் இல்லையப்பா”, என்றாள் கோபமாக. அதற்கு அவர், “நம் வழியில் ஒருவர் செல்லவில்லை என்பதால் நாம் அவரை வெறுக்க வேண்டியதில்லை. நம் பக்கத்துக்கு வீட்டில் உள்ள குழந்தையுடன் நீ விளையாடுவாய் அல்லவா? அதனிடம் நீ உன் கணக்குப் புத்தகத்தைக் காண்பித்திருக்கிறாயா?” என்றார். “அந்த குழந்தைக்கு அது புரியாதே அப்பா! நான் எப்படி கணக்கைப் பற்றி அதனுடன் பேசுவது?”, என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் நந்தனா
“சரியாகச் சொன்னாய். நாம் மற்றவர்களுடன் பழகும் போது பொதுவான விஷயங்களை மட்டும் பேசி மகிழ்ச்சியோடு இருக்க முடியும். நம் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிக்காமல் அவர்களுடன் பழக முடியும். மனு ஸ்மிருதியில் ஒரு நீதி ஸ்லோகம் உண்டு. அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் ரம்யா போன்றவர்களுடன் எளிதாகப் பழக முடியும்.” என்றார்.
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:
“உண்மையை பேசு. இனிமையாக பேசு. ஒருவருக்கு உண்மை கசப்பாகத் தோன்றுமானால் அவரிடம் அதை பேசாதே. அவருக்கு பிடிக்கும் என்பதற்காக பொய் உறைக்காதே. இதுதான் சநாதன தர்மம்”
“அதே சமயம் நம் நம்பிக்கையையும் விடக் கூடாது. நீ கணக்கைப் பற்றி அந்தக் குழந்தையிடம் பேசவில்லையென்றாலும் அது பொய்யாகி விடாது. இன்று அந்த குழந்தை அந்தப் புத்தகத்தை ஒரு விளையாட்டுப் பொருளாகத் தான் பார்ப்பாள். உரிய காலத்தில் அந்த குழந்தைக்கு கணக்கைப் பற்றிய உண்மை புரியும். நாத்திகர்கள் புதிதாக வந்தவர்கள் இல்லை. ஜாபாலி என்ற ரிஷி தசரத மகாராஜாவின் மந்திரி சபையில் உறுப்பினர். அவர் ஒரு நாத்திகராக இருந்தும் அவர் மற்றவர்கள் நம்பிக்கையை இழிவாகப் பேசியதில்லை. ரம்யா போன்றவர்களுக்கு இன்று கல்லாகத் தெரியும் கடவுள் ஒரு நாள் தெய்வமாகத் தெரியும். இந்த நம்பிக்கையே உண்மையான ஆன்மிகம்.” என்றார் அவள் தந்தை.
“புரிகிறது அப்பா. நான் அவளுடன் விளையாடுவேன்.” என்றாள் நந்தனா. இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்த நந்தனாவின் அம்மா “ஒரு சிலர் மாறாமல் தொடர்ந்து கடவுளை இகழ்ந்தால் என்ன செய்வது?” என்று கேட்டார்
நந்தனாவின் தந்தை “அதற்கும் நம் முன்னோர் ஒரு வழி சொல்லிக் கொடுத்துள்ளார்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு“, என்றார் சிரித்துக்கொண்டே !
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்.
- காக்க காக்க கனகவேல் காக்க
- பலராம அவதாரத்தின் மகத்துவம்
- அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
- உண்மையான பக்தி எது?
- கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
- நடப்பவை யாவும் நன்மைக்கே !
- துரியோதனனை பற்றி திருவள்ளுவர்
- ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
- கடவுள் குடியிருக்கும் கோவில்
- கர்ணனும் கூடாநட்பும்
- கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
- குழந்தைகளுக்கான கர்ணன் கதை
Very well said!
Thank you
Good explanation in simple terms.
Thanks Baskar!