இந்த உலகத்தில் நல்ல முறையில் வாழ பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைபிடித்தால் நாம் நல்ல முறையில் வாழ முடியும். எனினும் சில நேரங்களில் சில கருத்து வேறுபாடுகளையும் மோதல்களையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் தர்மத்தின் வழியிலிருந்து பிறழ்வதாக இருக்கலாம். தீய வழியில் செல்பவர்களுக்கு இது பொருந்தும். ஆனால் பல சமயங்களில் தர்மவழியில் நடப்பவர்களே கூட சில தவறுகளைச் செய்வதை நாம் காண்கிறோம். ஏன், சில சமயங்களில் நமக்கே கூட இது நிகழக் கூடும்.
என்ன காரணம்? ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வுலகில் நடக்கும் பெரும்பாலான தவறுகளுக்குக் காரணம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் அல்ல. பல தவறுகள்/பாவங்கள் இரு விதமான தர்மங்களில் ஒன்றை நாம் தேர்வு செய்வதன் காரணமாகவே ஏற்படுகின்றன. இதனால் தான் இந்த நிலைமையை தர்மசங்கடம் என்கிறோம்.
பொதுவாக அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்க வேண்டிய தர்மத்திற்கு சாமான்ய தர்மம் என்று பெயர். சாமான்ய தர்மத்திற்கு எதிர்மறையாகத் தோன்றினாலும் அதுவே உயர்வான தர்மம் என்பதால் அத்தகைய தர்மத்திற்கு விசேஷ தர்மம் என்று பெயர். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய தர்மம் விசேஷ தர்மமே ஆகும். மேலான தர்மம் எது என்றால் இது வேறொன்றுமில்லை, இறைவனிடம் சரணாகதி அடைவதே ஆகும்.
தர்மசங்கடம் ஏற்பட்ட போது சாமானிய தர்மத்தைக் கடைபிடித்து தோல்வியை தழுவியவர்கள் பற்றியும் விசேஷ தர்மத்தைக் கடைபிடித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் பற்றியும் நம் இதிஹாச புராணங்களில் பல உதாரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.
சாமான்ய தர்மத்தை கடைபிடித்தவர்கள்
- மனைவி கைகேயிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதை மேலான தர்மமாகக் கருதிய தசரதன், இறைவனே தன் மகன் இராமனாக அவதரித்திருந்த போதிலும் அவனை இழந்தான்
- அண்ணனுக்கு தொண்டு புரிய வேண்டும் என்ற தர்மத்தை கடைபிடித்த கும்பகர்ணன் போரில் மாண்டான்
- பீஷ்மர், துரோணர் முதலியவர்கள் செஞ்சோற்றுக்கடன் என்னும் தர்மத்தைக் கடைபிடித்தலே முக்கியம் என்று கருதியதால் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க முடியாமலும் மகாபாரத போரைத் தவிர்க்க முடியாமலும் தவித்து இறுதியில் உயிரைத் துறந்தனர்
- நட்பை மேலான தர்மமாகக் கருதிய கர்ணன் அதர்ம வழியில் சென்ற துரியோதனனைத் தடுக்கத் தவறினான்
விசேஷ தர்மத்தை கடைபிடித்தவர்கள்
- தன் தந்தை மற்றும் தாயின் சொல்லைத் தட்டி தனக்கு என்று அளிக்கப்பட்ட ராஜ்யத்தை மறுத்து பரதன் தன் அண்ணன் இராமன் பாதுகைகளை வைத்து அரசாண்டு விசேஷ தர்மத்தை கடைபிடித்தான்
- தன் அண்ணன் இராவணனையே எதிர்த்து அவன் விரோதியான இராமபிரானின் பாதம் பற்றினான் விபீஷணன்
- பலம் கொண்ட சேனை கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் ஆயுதம் ஏந்தாமல் தனி ஒருவனாக நின்ற கண்ணபிரானைத் தன் பக்கம் ஏற்றுக்கொண்டான் அர்ச்சுனன்
- தன் தந்தையின் மடியில் அமரும் வாய்ப்பு வேண்டி தவம் செய்து, பின் பகவான் நாராயணன் பிரத்யட்சமானதும் அவன் சேவை மட்டுமே போதும் என்றான் துருவன் என்னும் பாலகன்
- தன்னுடைய தந்தை சொல்லை ஏற்காமல் அந்த நாராயணனே பரம்பொருள் என்று நிலைநாட்ட பல்வேறு துன்புறுத்தல்களைச் சந்திக்கத் தயாரானான் பிரஹலாதன்
- தன் தாய்க்கு செய்யும் சேவையை விட இந்த உலகின் மக்களுக்கு பரம்பொருள் பற்றிய உண்மையை உணர்த்துவதே மேலான தர்மம் எனத் துறவறம் பூண்டார் ஆதிசங்கரர்
இவ்வாறாக, தர்மசங்கடங்கள் நேரும் போது அந்த பகவானைத் துணையாக அடைவதே விசேஷ தர்மமாகும். அந்நேரங்களில் மேலான தர்மம் எது என்பதும் சாமான்ய தர்மங்களால் யாது பயனும் இல்லை என்பது புலனாகிறது.
இந்த உண்மையை தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ’ என்னும் ஸ்லோகத்தில் இவ்வாறு விளக்குகிறார்:
“இவ்வுலகில் உள்ள அனைத்து தர்மங்களையும் விடுத்து என் ஒருவனையே சரணடைவாயாக! அவ்வாறு செய்யும் பட்சத்தில் நான் உனது அனைத்து பாவங்களையும் போக்கி உனக்கு மோக்ஷத்தை அருள்வேன். கவலை வேண்டாம்! “
ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாமான்ய தர்மத்தை கடைபிடித்தல் அவசியமே. ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை வரும்பொழுது மட்டுமே விசேஷ தர்மம் இன்றியமையாததாகிறது. ஏனெனில் லௌகிக வாழ்வில் இருக்கும் நாம் அனைத்தையும் விட்டொழித்து பரிபூர்ண சரணாகதி அடையும் நிலையில் இல்லை என்பதே உண்மை அல்லவா?
சகல தர்மசங்கடங்கள் நீங்கி தர்மத்தை கடைபிடிக்க அந்த கண்ணன் நமக்கு அருள் புரியட்டும்.
தர்மத்தை கடைபிடிக்க …..நாம் தினமும் வணங்கும் கண்ணபிரான் நமக்கு அருளட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
Excellent post Sir …
Gratitudes 🙏🏻
Thanks very much sir!
அருமையான பதிவு. 🙏🏻
Thanks madam.