ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம் என்று சினேகாவின் அப்பா சொன்னார். அதனால் நாங்கள் எல்லோரும் நாளை மறுநாள் நம் தெருவில் உள்ள பூங்காவை சுத்தம் செய்யப் போகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் நந்தனா.
“நல்ல விஷயம். ஆனால் ஏன் நாளை மறுநாள். இன்றே தொடங்கலாமே?” என்று கேட்டார் நந்தனாவின் தந்தை
“இன்று அஷ்டமி நாளை நவமியாம். ரொம்ப நாட்களுக்கு பிறகு பூங்காவில் விளையாட போகிறோம் என்பதால் அஷ்டமி நவமியில் ஆரம்பிக்க வேண்டாம் என்று சினேகாவின் தந்தை சொன்னார்” என்றாள் நந்தனா. “அப்பா, ஏன் அஷ்டமி நவமியில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது ? தாத்தாவும் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றாள் நந்தனா.
நந்தனாவின் தந்தை புன்னகையுடன் “ஆமாம். சுப காரியங்களை இந்த நாட்களில் தொடங்க மாட்டார்கள். காரணத்தை நான் தெரிந்துகொண்டு உனக்கு சொல்கிறேன். ஆனால் பிறர்க்கு உதவக்கூடிய காரியங்களில் ஈடுபடும் போது, இந்நாட்களைக் காரணம் காட்டி தள்ளிப்போடக் கூடாது” என்றார்
நந்தனாவிற்கு புரியவில்லை என்பதை அவள் முகம் காட்டிக்கொடுத்தது. மேலும் பேசத் தொடங்கினார் அவளின் தந்தை. “நந்தனா நீ ஒரு நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்க முடிவெடுத்தால் அதை உடனே பின்பற்ற வேண்டும். உதாரணத்துக்கு இரவில் தூங்குவதற்கு முன் பல் துலக்குவேன், சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வேன் போன்ற முடிவுகளை எடுத்தால் அதை பின்பற்ற நாள் கிழமைகள் பார்க்கக் கூடாது. அதைப்போல் பூங்காவைச் சுத்தம் செய்வது போன்ற நல்ல காரியங்களை உடனே செய்ய வேண்டும்.”
“அசுரர்களிடம் இருந்து பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த பகவான் தான் அவதரிக்க இப்படி நாள் கிழமை பார்க்க வில்லை. அப்படி இருந்தால் ராமர் நவமியிலும் கிருஷ்ணர் அஷ்டமியிலும் பூமியில் அவதரித்திருக்கமாட்டார்கள். ராமநவமி, கோகுலாஷ்டமி நாட்களை விட புனிதமான நாட்கள் உண்டா? இந்த நாட்களில் பகவானை தியானிப்பதிலும், நல்ல விஷயங்களிலும், பிறர்க்கு உதவ கூடிய காரியங்களிலும் நம் மனதை ஈடுபட வைக்கவே இப்படி ஒரு விதியை நம் முன்னோர்கள் வைத்திருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த நாட்களை அசுப நாட்களாக நாம் கருத ஆரம்பித்திருப்போம்.”
“மேலும் ஒரு நல்ல விஷயத்தை செய்ய ஏன் நேரம் கடத்த கூடாது என்பதை இராமாயணத்தில் விபீஷணனின் செயல் அழகாக விளக்கி இருக்கிறது. அதை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் நான் கேட்டிருக்கிறேன். ராமரிடம் சரணாகதி அடைய சென்ற விபீஷணனை சுக்ரீவன் வாசலில் காக்க வைத்திருப்பான். “சுக்ரீவா உடனே ராமரிடம் என்னை அழைத்துச் செல். அவரிடம் நான் சரணாகதி அடையவேண்டும். தாமதிக்காதே” விபீஷணன் கூறினார். “ஏன் அவசரப்படுகிறாய் விபீஷணா. ராமர் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று எண்ணுகிறாயா?” என்று கேட்டான் சுக்ரீவன்.
“இல்லை. ராமர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் முடிவிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் நானோ அசுர குலத்தை சேர்ந்தவன். என் புத்தி இப்பொழுது போல் எப்பொழுதும் இருக்குமா என்பதையே நான் சந்தேகிக்கிறேன். நல்ல விஷயத்தை காலம் கடத்தாமல் செய்ய வேண்டும். ஆதலால் ராமரிடம் என்னை உடனே அழைத்துச்செல்” என்றான் விபீஷணன்
விபீஷணன் சொன்னதைப் போல் ஒரு மனிதனின் புத்தி எப்போது வேண்டுமானாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும். ஆதலால் நாம் ஒரு நல்ல விஷயத்தை செய்ய முடிவெடுத்தால், அதுவும் மற்றவர்களுக்கு உதவ கூடிய விஷயம் என்றால் அதை நாம் உடனே செய்ய வேண்டும். புரிகிறதா நந்தனா?” என்றார் நந்தனா
“நன்றாகப் புரிந்தது அப்பா. நாம் இன்றே சுத்தம் செய்ய போகலாம்” என்றாள் நந்தனா. அதற்கு தலை அசைத்த நந்தனாவின் தந்தை சுத்தம் செய்யும் வேலையைப் பற்றி பேச நந்தனாவுடன் சினேகாவின் வீட்டுக்கு சென்றார்.
***
நந்தனாவின் ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்.
- மன்னிக்க முடியாத குற்றம்..
- உண்மையான ஆன்மீகம் எது?
- காக்க காக்க கனகவேல் காக்க
- பலராம அவதாரத்தின் மகத்துவம்
- அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
- உண்மையான பக்தி எது?
- கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
- நடப்பவை யாவும் நன்மைக்கே !
- துரியோதனனை பற்றி திருவள்ளுவர்
- ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
- கடவுள் குடியிருக்கும் கோவில்
- கர்ணனும் கூடாநட்பும்
- கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?
- குழந்தைகளுக்கான கர்ணன் கதை