ஜனனம் மரணம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது” என்றான் சிறுவன் நசிகேதஸ். தன் தந்தை விஜஷ்ரவஸ் வாக்கிற்கு இணங்கி எமனிடம் செல்லத் தயாரானான்.
சர்வதக்ஷிணா (सर्वदक्षिणा) என்ற வேள்வியை மேற்கொண்டார் விஜஷ்ரவஸ். அவ்வேள்வியின் பொருளே தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் தானமாக வழங்குவது.
பக்குவமில்லாத விஜஷ்ரவஸ் தனக்கு தேவையில்லாத பொருட்கள் என தேர்ந்தெடுத்து அவைகளை மட்டுமே தானமாக வழங்கினார்.
அதைக்கண்டு வருத்தமடைந்த அவரது மகன் நசிகேதஸ், தந்தையிடம் “என்னை யாருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்?”எனக் கேட்டான். பதில் வராதால் மேலும் இரு முறை கேட்டான்.
“எமனுக்கு” என்றார் விஜஷ்ரவஸ் கடுங்கோபத்துடன். மூன்றாவது முறை தன் மகன் கேட்க அவருக்கு கோபம் பீறிட்டது. உதிர்த்த வார்த்தையின் வேகத்தை உணர்ந்த விஜஷ்ரவஸ் செய்வதறியாது தவித்தார்.
நசிகேதஸ் அமைதியாக “ஜனனம் மரணம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது, விருக்ஷத்திலிருந்து விழும் விதை புதிய விருக்ஷமாய் வளரும். அந்த விதையைத்தந்த விருக்ஷமோ ஒரு நாள் மண்ணில் விழும். தங்கள் வாக்கு நிறைவேறட்டும், வருந்த வேண்டாம்,” எனக்கூறி எமனிடம் செல்லத் தயாரானான்.
இக்கதை கடோபனிஷத் (कठोपनिषद्) என்ற உபனிடதத்தில் வருகிறது. ஆன்மா மற்றும் மோக்ஷம் பற்றி எமனுக்கும் நசிகேதசுக்கும் நடந்த உரையாடலே கடோபனிஷத். சுவாரசியமான அந்த உரையாடலை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். இப்பொழுது மேற்கூறிய கதையின் உட்பொருளை பார்ப்போம்.
நசிகேதஸ் கேட்ட கேள்வியின் பொருள் – தன் தந்தை பொருட்களை மட்டுமல்லாமல் “தான்” என்ற அகங்காரத்தையும் அந்த வேள்வியில் அளிக்க வேண்டும். ஆன்மா இந்த உடலில் குடிகொண்டுள்ளது, அது உடலுக்கு சொந்தமில்லை. அனைத்தையும் விட்டுவிட்டு அந்த பரப்பிரம்மத்திடம் சரணடைவதே சிறந்தது.
ஏன் மூன்று முறை கேட்டான்?
ஆன்மா குடிகொண்டுள்ள உடல் ஒரு பிரபஞ்சத்தை போன்றது. அது ஸ்தூல (स्थूल), சூக்ஷ்ம (सूक्ष्म), காரண (कारण) என்ற மூன்று பரிமாணங்களை உடையது. (ஸ்தூல – உடல், சூக்ஷ்ம – மனம், காரண – கர்மா)
பரப்பிரம்மத்தை உணர நாம் “கர்மா, காமம், அறியாமை” ஆகிய மூன்று முடிச்சிக்களையும் அவிழ்க்க வேண்டும். அந்த மூன்று முடிச்சிக்களை “திரிபுர” (त्रिपुर) என்பார்கள்.
மேலும் விஜஷ்ரவஸ் மற்றும் நசிகேதஸ் முறையே புறம், அகம் ஆகியவற்றின் உருவகமே.
புறம் எனபது சடங்கு, சம்பிரதாயம், பிரார்தனை முதலியவைகளுக்கு பதில் வேறொன்றை எதிர்பார்க்கும். அது தவறு என்று சொல்வதர்க்கில்லை. ஆனால் அது முழுமை தராது.
சடங்கு, சம்பிரதாயம், பிரார்த்தனை முதலியவைகளின் உட்பொருளை புரிந்து செயல்பட வேண்டும். இதையே நசிகேதஸ் தன் தந்தைக்கு உணர்த்தினான்.
Good one Krishnan. It will be nice to know about the conversation between Nachikethas and Yamadharman also.
Thanks Ranga, will definitely post that too
Nice