ஆண்டுதோறும் நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி பண்டிகை நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் விஜயதசமி என்று வழங்கும் இவ்விழா வட இந்தியாவில் தசரா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் பல சிறப்பான வெற்றிகளுக்கு உரிய நாளாகும். எருமை வடிவிலான மகிஷன் என்ற அசுரனை முப்பெரும் தேவியரின் அம்சமான அம்பிகை வதம் செய்த நாள் விஜயதசமி. அன்னை துர்கை ஒன்பது நாட்களில் அரக்க சைன்யத்தை வீழ்த்தி, இறுதி நாளில் மகிஷனையும் இந்நாளில் வதம் செய்தாள். இந்நாளிலேயே ராமாயணத்தின் நாயகனான ராமபிரான் அரக்கன் ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அனைவருக்கும் அருள்பாலித்தார்.
இதே நாளில் தான் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தனி ஆளாக விராட தேசத்தின் மீது படை எடுத்து வந்த கௌரவர்களை தோற்கடித்து வெற்றியைக் குவித்தான். மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு வருடம் கானக வாழ்வை முடித்த பிறகு ஒரு வருடம் மறைந்து வாழ விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு வருடம் முடியும் தருவாயில், பாண்டவர்களின் இருப்பு பற்றிய சந்தேகத்தின் பேரில் கௌரவ சேனை மத்ஸ்ய தேசத்தை இருபுறங்களில் தாக்கியது. ஒரு புறம் விராடனுக்கு உதவியாக பாண்டவர்கள் நால்வர் செல்ல, ப்ருஹன்னளை என்னும் பெண் தன்மையுடன் இருந்த அர்ச்சுனன் பயந்த சுபாவம் உள்ள ராஜகுமாரன் உத்தரனுக்குத் தேரோட்டியாக சென்றான். ஒரு வருட காலம் முடிந்தது என்பதை உறுதி செய்து கொண்டு, தன் உண்மை உருவத்துடன் யுத்தகளத்தில் நின்றான். திவ்யாஸ்திரங்களை உபயோகித்து பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன் முதலிய அனைத்து வீரர்களையும் தனி தனி ஒருவனாய் வெற்றி பெற்றான். விஜயன் என்ற பெயர் கொண்ட அர்ஜுனன் பெயராலேயே இந்நாள் விஜய தசமி என்று வழங்குகிறது.
இத்தகைய சிறப்புகளை உடைய இந்நாளில், முந்தைய நாளான சரஸ்வதி பூஜையன்று வைக்கப்பட்ட புத்தகங்களையும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளையும் தகுந்த பூஜைகளைச் செய்து (நெய்வேத்தியம், தீப ஆராதனை முதலியன) பயபக்தியுடன் எடுத்து உபயோகிக்க வேண்டும். அதன் மூலம் அன்னை சரஸ்வதியின் அருளால் மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் நல்வழி பிறக்கும். மேலும் கல்வி, கலைகள், புதிய முயற்சிகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் அது ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. இந்நாளில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தட்டில் நெல்பரப்பி சிறு குழந்தைகளின் கைபிடித்து தமிழ் எழுத்துக்களை எழுதப் பழக்குவர். இது குழந்தைகளின் கற்றலுக்கு ஒரு நல்ல தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதே போல பாட்டு, இசைப்பயிற்சி, நடனம், புதிய மொழி கற்றல், புதிய தொழில் தொடக்கம் என பல முயற்சிகளை இந்நாளில் கடவுள் அருளோடு தொடங்கலாம்.
இவற்றோடு கூட, நாம் நம் வாழ்க்கையில் இன்று இந்நிலைக்கு வர உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக இந்நாளைக் கருதலாம். அத்தகையவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு நம் நன்றியைத் தெரிவிக்கலாம். இன்றைய சூழ்நிலையில் தனிமையில் நேரத்தைச் செலவிடும் அவர்களுக்கு இந்தச் செயல் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் அல்லவா?
வெற்றியைக் கொடுக்கும் நாளான இந்த விஜயதசமி தினத்தில் நாம் நம்முடைய எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல்பாடுகளை ஒருமைப்படுத்தி நல்வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தோமானால் இறைவன் அருளால் நம்மைப் பீடித்திருக்கும் நோய்கள் மற்றும் துன்பங்கள் மறைந்து ஒரு இனிய எதிர்காலம் மலரும்.
இந்த பதிவு 26/10/2020 அன்று வெளிவந்த தினமலர் மதுரை பதிப்பில் பிரசுரிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரு தினங்களில் இரு பதிவுகளை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
Very superb article. Very informative. Must for this age children as they are always smart phone addicted..
Thanks Bharani for your valuable comments.