சரஸ்வதி பூஜையின் சிறப்பு

நவராத்திரி பண்டிகை

நம் பாரத நாட்டில் பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. நம் பண்டிகைகளில் கடவுள் வழிபாட்டுடன் பல பண்பாட்டு விஷயங்களும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இந்த பண்டிகைகளுள் நவராத்திரி ஒரு முக்கியமான பண்டிகையாகும். நவராத்திரியை விட சக்தியின் (பெண்) சிறப்பைக் கூறும் பண்டிகை வேறொன்றும் இல்லை எனலாம். முப்பெரும் தேவியர்கள் அனைவரும் துர்க்கை என்னும் ரூபத்தில் வந்து மகிஷாசுரனை வதம் செய்த காலமே நவராத்திரி. நவ என்பதற்கு ‘ஒன்பது’ என்றும் ‘புத்துணர்ச்சி’ என்றும் இரு அர்த்தங்கள் உண்டு. இந்த ஒன்பது நாட்கள் பூஜை செய்து சக்தியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பொங்கி நம் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

நமது பாரம்பரிய கலைகளான பாட்டு, இசை நடனம் போன்றவற்றை வெளிப்படுத்த நவராத்திரி ஒரு நல்ல தருணமாகும். நவராத்திரியில் கொலு வைத்து நம் உறவினர் மற்றும் அண்டை வீட்டாரை வீட்டிற்கு அழைத்து மங்கல தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்வது வழக்கம். நம் வீட்டிற்கு வருபவர்களும் கொலுவைக் கண்டு களித்து பாட்டு, நடனம் போன்ற தங்களின் திறமையை வெளிகாட்டிச் செல்வர். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் சுண்டல் செய்து கடவுளுக்கு நெய்வேத்யம் செய்து அதைப் பகிர்ந்து கொள்வதின் மகிழ்ச்சியே தனி.

கல்வியின் நாயகி சரஸ்வதி

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகின்றன. இவ்வுலகில் ஒருவனுக்கு கல்வியே மிக முக்கியமான அணிகலனாகும். கல்வியைப் போற்றும் பல உதாரணங்களை நாம் நமது நூல்களில் காணலாம். மகாபாரதத்தில் யக்ஷனாக வரும் தர்மராஜன் தன் மகனைச் சோதிக்கும் பொருட்டு கேட்ட கேள்விகளில் ஒன்று, “ எது ஒருவனுடைய விலை மதிப்பில்லாத உடமை?“. இதற்கு தர்மபுத்திரர் அளித்த பதில், ” ஒருவன் கற்ற கல்வியே அவனுடைய விலைமதிப்பில்லாத சொத்தாகும்”. இதையே திருவள்ளுவர் , “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை அவை” என்று திருக்குறளில் (கல்வி அதிகாரம்) தெளிவாக விளக்குகிறார். அப்படிப்பட்ட கல்வியின் தலைவியான கலைமகளைப் பூஜிக்கும் திருநாளே நவராத்திரியின் ஒன்பதாவது நாளான சரஸ்வதி பூஜை நாளாகும்.

Saraswati

சரஸ்வதி தேவி கல்வி கேள்விகள், கலைகள், கலாச்சாரம், விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்திற்கும் மூல தேவதையாக விளங்குகிறாள். முப்பெரும் தேவியருள் ஒருவராக இருக்கும் சரஸ்வதி வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறாள். வாக்தேவி, ஜ்யோதிஸ்வரூபா, வாஜினீவதி, ருதாவரி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். வெண் பட்டுடுத்தி வெள்ளைக் கமலத்தில் வெள்ளை அன்னப் பறவையுடன் தன் நாதனான ப்ரம்ம தேவனுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.

வழிபடும் முறை

சரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் படிப்பிற்குத் தேவையான சாதனங்களையும் சரஸ்வதியின் படத்தின் அருகில் வைத்து வழிபடுவது வழக்கம். அன்று முழுதும் புத்தகங்களை படிக்காமல் சரஸ்வதி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுக்கு ஞானத்தையும் கல்வியறிவையும் அவள் வாரி வழங்குவாள் என்பது நம்பிக்கை. கற்றல் என்பது எந்த வயதுக்கும் பொருந்தும் என்பதால் மாணவர்கள் மட்டும் அன்றி பெரியவர்களும் இந்தச் செயலில் ஈடுபடுவது ஏற்றதாக இருக்கும். இன்று முதியவர்கள் கூட கைபேசியில் பல செயலிகளைக் கற்க முயல்கிறார்கள் அல்லவா! இன்னும் சொல்லப் போனால் இந்த காலகட்டத்தில் கல்வி கற்றலே கைபேசியின் மூலம் நடப்பதால் அதையும் பூஜையில் வைக்கலாம். அப்படிச் செய்தால் கைபேசியை உபயோகப் படுத்துவதில் இருந்து ஒரு இடைவேளை கிடைப்பதுடன் குடும்ப உறவுகளும் மேம்படும். முயற்சிக்கலாமே?

ஆயுத பூஜை

கல்வியோடு கூட, நாம் செய்யும் தொழிலும் போற்றத்தக்கது என்பதால், இதே நாள் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. நம் கலாச்சாரத்தின் முக்கிய பெருமையே இறைவனை எதிலும் கண்டு உணரக் கூடிய தன்மை ஆகும். உயிருள்ள பிராணிகள் மட்டும் அல்லாமல் உயிரற்ற ஜடப்பொருள்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்பது நம் நம்பிக்கை. மாட்டுப் பொங்கல், நாக பஞ்சமி, கருட பஞ்சமி போன்ற தினங்களில் பிராணிகளை பூஜிக்கும் நாம் ஆயுத பூஜை தினத்தன்று நாம் உபயோகிக்கும் கருவிகளையும் இறைவனுக்கு இணையாகக் கொண்டாடுகிறோம். நம் தொழில் சிறப்பாக நடந்ததற்கு நன்றி கூறி இனி அது மேலும் சிறப்பாக நடக்க இறைவனிடம் வேண்டும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் நம் தொழிலில் உபயோகப்படுத்தும் பொருட்களையும் கருவிகளையும் தூய்மைப் படுத்தி மலர்களாலும் சந்தனம், குங்குமம் போன்ற பொருட்களாலும் அலங்கரித்து பூஜை செய்கிறோம். அலுவலகங்களில் இயந்திரங்களுக்கும் அவற்றை இயக்கும் தொழிலாளர்களுக்கும் மரியாதை செய்யப் படுகிறது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளிகள், கலைக்கூடங்கள் நூலகங்கள் என அனைத்து இடங்களும் இந்நாளில் விழாக்கோலம் பூணுவதைக் காணலாம். சிறுவர்களும் இந்த கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டு பொரி கடலை பிரசாதங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச்செல்வர். இவ்வாறாக சரஸ்வதி பூஜை சிறியவர் முதல் முதியவர் வரை, தொழிலாளர் முதல் தொழிலதிபர் வரை ஆண்கள் மற்றும் பெண்கள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் ஒன்றாகப் பங்கு பெரும் திருவிழாவாக இருக்கிறது.

பண்டிகையின் உட்கருத்துக்கள்

சரஸ்வதி பூஜையில் மேலும் பல உட்கருத்துக்கள் இருக்கின்றன. பொதுவாக மாணவர்கள் தங்கள் புத்தகங்களை பூஜைக்கு வைப்பதால் அன்று எந்த பாடத்தையும் படிக்காமல் இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஆண்டின் மற்ற நாட்களில் நாம் கல்வி கற்கும் பலன் நமக்கு முழுதும் கிட்ட நாம் சரஸ்வதி பூஜையன்று முயற்சி எடுக்க வேண்டும். எவ்வாறு அந்த நாளில் எதையும் கற்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதே போல் மற்ற அனைத்து நாட்களிலும் ஏதாவது ஒன்றைக் கற்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் பலன் நமக்கு முழுதும் கிட்டும்.

அதே போல தொழில் முனைவோர் தங்கள் கருவிகளை அடிக்கடி பராமரித்தல் மிக்க அவசியம். இக்காலத்தில் ஆண்டுதோறும் மின் சாதனங்களை பாதுகாக்க நிறுவங்களுடன் ஒப்பந்தம் (AMC) போடுகிறோம் அல்லவா? அவ்வாறு ஒப்பந்தமே இல்லாமல் ஆண்டு தோறும் ஒருமுறையாவது கருவிகளையும் சாதனங்களையும் பழுது பார்த்து தூய்மை படுத்தி அவைகளைத் தொழ ஏற்பட்டதே இந்த ஆயுத பூஜை தினமாகும். நம் முன்னோர்களின் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது அல்லவா! அவ்வாறு தொழுத பிறகு திருஷ்டி சுற்றிப் போடும் பூசணிக் காயை சாலையில் உடைக்காமல் ஒரு மூலையில் பாதுகாப்பாக உடைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் அனைவரும் அன்னை வாணியின் அருளைப் பெற்று படிப்பிலும் தொழிலிலும் மேன்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டிக் கொள்வோமாக.

https://thedal.info/

இந்த பதிவு இன்றைய (25/10/2020) தினமலர் மதுரை பதிப்பில் வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

4 thoughts on “சரஸ்வதி பூஜையின் சிறப்பு”

  1. பெண்மையைப் போற்றும் இந்துக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு நவராத்திரி. சக்தி செல்வம் கல்வி மூன்றுமே தேவை என்பதை உணர்த்தும் அழகிய க ட்டுரை. வாழ்த்துக்கள்

  2. There is only one temple exists for Saraswati Devi in Koothanur established by Shri Adi Shankara as per Saraswati Devi wish. Saraswati Devi did avatar in Kali yoga and become wife of Mandana Misrear (Who is the great Vedic scholar). If any Vedic scholar want to do Vedic vivadam with Manadana Misrear first they need to visit his parrot and do Vedic vivadam. The parrot is so knowledgeable that nobody can win over the parrot. Shri Adi Shankara came and done Vedic vivadam with the parrot and Mandana Misrear and Win. Then Saraswati Devi (wife of Mandana Misrear) told that you need to answer my question and asked gragastha related question to him. Shri Adi Shankara unable to answer the question and requested Saraswati devi for 1 week time. After a week he answered Saraswati questions (my moving his soul to dead Kings body for a week) and bowed to Saraswati. Saraswati Devi told you can continue his yatra till he listen his salangai sound and where the salsngai stops Saraswati Devi asked Shri Adi Shankara to build the temple. The temple is Koothanur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *