மார்கழி மாதம் நமக்கு ஒரு மிக முக்கியமான மாதமாகும். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். ஆருத்ரா தரிசனம், ஹனுமத் ஜெயந்தி போன்ற முக்கிய விசேஷங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். மேலும் இந்த மாதத்தில் தான் அர்ஜுனனுக்கு பகவான் கீதையை உபதேசித்தார். பல சிறப்புகள் வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை படித்தும், தினந்தோறும் கோவிலுக்குச் சென்றும் நாம் நம் பக்தியை வெளிப்படுத்துகிறோம்.
பக்திமார்க்கத்தை தமிழில் உள்ள அருமையான பக்தி பாடல்கள் மூலமாகவும் நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த மார்கழி மாத நாட்களில் அழகான பக்தி பாடல்களைப் பதிவிட உள்ளோம்.
பகவான் கிருஷ்ணன் குழந்தை பருவத்தில் செய்த சில லீலைகளை தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “ஆயர்பாடி மாளிகையில்…” என்ற தெய்வீகமான பாடலே இன்றைய பதிவு.
M.S. விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டால் ஒரு தெய்வீக அனுபவத்தை கொடுக்கும். பாடலின் வரிகளையும், காணொளியும் கீழே இணைத்துள்ளோம்.
ஆயர்பாடி மாளிகையில்…
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்து கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
Sir,
It’s a Posting of Lord Krishna Divinity
Thank you 🙏🏻 for posting.
Regards
PSRadhakrishnan
Radhe Krishna! Thank you
Thanks sir!