ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சுக்ல பக்ஷ த்ரிதியை நாள் (அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை மூன்றாம் நாள்) அக்ஷய த்ரிதியை திருநாளாகக் கொண்டப்படுகிறது. சமஸ்கிருத வார்த்தையான ‘அக்ஷய’ என்பதன் பொருள் ‘அழிவில்லாதது’ என்பதாகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் ஒரு பெயர் உண்டு. உலக சுழற்சிக்கு முடிவில்லை என்பதையும் அடுத்த 60 வருடங்களின் சுழற்சி மீண்டும் தொடங்கப் போகிறது என்பதையும் குறிக்கும் விதமாக அறுபதாவது தமிழ் வருடத்தின் பெயர் அக்ஷய என்று உள்ளது. இந்த புனித நாளில் நாம் செய்யும் செயல்களின் பலன்கள் பல மடங்கு பெருகும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த நாளில் பல ஆண்டுகளுக்கு முன்னாள் வெவ்வேறு காலங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்:
• பகவான் பரசுராமர் அவதரித்தார்
• த்ரேதா யுகத்தின் முதல் நாள் (ராமரின் காலம்)
• வேத வியாசர் மகாபாரதத்தின் கதையை விநாயகர் உதவியுடன் எழுத ஆரம்பித்தார்
• பாண்டவர்களுக்கு அக்ஷய பாத்ரம் கிடைத்தது
• தன் மறைந்த புகழையும் பதவியையும் இந்திரன் தர்ம காரியங்களால் திரும்பப் பெற்றான்
• சுதாமா கிருஷ்ணரை சந்தித்தார்
• கங்கை நதி, பகீரத மன்னனின் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு பூமிக்கு கொண்டுவரப்பட்டது
மேற்கண்ட நிகழ்வுகளில் சுதாமா கிருஷ்ணரை சந்தித்தபின் செல்வந்தர் ஆனதையும், பகவான் இந்திரன் இழந்த புகழ் பதவியை திரும்பப் பெற்றதையும் மேலும் விரிவாகப் பார்போம்.
அக்ஷய த்ரிதியை நாளில், சுதாமா கிருஷ்ணரை சந்தித்து வறுமையிலிருந்து விடுபட அவரது உதவியை நாடினார். ஆனால் கிருஷ்ணரை சந்தித்தபோது, தான் கொண்டுவந்த அவலை மட்டும் வழங்கிவிட்டு “கிருஷ்ணா, உன்னை பார்த்த ஆனந்தத்தில் இருக்கிறேன். இப்படி உன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்”, என்று கூறி தான் வந்த விஷயத்தைப் பற்றி பேசாமலே கிருஷ்ணரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டார். வீட்டிற்கு வந்ததும், அவரது வீட்டில் ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் புதிய ஆடைகள் நிறைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இந்த கதை குறிப்பாக குழந்தைகளுக்கு உண்மையான நட்பின் அர்த்தத்தையும், கடவுளிடம் சரணடைவதுப் பற்றியும் எடுத்து உரைக்கிறது.
இரண்டாவது நிகழ்வு ஸ்கந்த புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. கடந்த கால பாவங்களால், இந்திரன் தனது வீரியம், நற்பெயர், வலிமை அனைத்தையும் இழந்து மேரு மலையில் ஒளிந்து கொண்டிருந்தான். அக்ஷய த்ரிதியை நாளில் அதிகாலையில் குளித்து பூஜைகளைச் செய்த பின் தான தர்ம பணிகளில் ஈடுபட வேண்டும் என்று இந்திரனின் குரு புருஹஸ்பதி அறிவுறுத்தினார். இதன் மூலம் அவரின் அனைத்து பாவங்களும் அழிந்து அவர் இழந்த புகழ் மற்றும் பதவியை மீண்டும் பெறுவார் என்று கூறினார். குருவின் ஆலோசனையைப் பின்பற்றி இந்திரன் தனது பலத்தையும் பதவியையும் மீட்டெடுத்தார்.
இந்நாளின் இன்றய நிலை என்ன?
சமீபத்திய ஆண்டுகளில், இந்த நாளின் உண்மையான முக்கியத்துவத்தை பெரும்லானோர் மறந்துவிட்டனர். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் தங்கம் வாங்குவதே முக்கிய நிகழ்வாக உள்ளது. உலக தங்க வர்த்தக சங்கம் 2005ஆம் ஆண்டு முதல் தங்கம் வாங்குவதற்கு சுப நாளாக அக்ஷய த்ரிதியை நாளை பிரபலப்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். .
இந்த நாளில் மகாலட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது மிகவும் பிரபலம். இந்த ஸ்லோகத்தின் பின்னணி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தன் வீட்டு வாசலில் பிச்சை கேட்டு வந்த ஸ்ரீ ஆதிசங்கரரை ஒன்றும் கொடுக்காமல் திருப்பி அனுப்ப அந்த ஏழைப் பெண்ணுக்கு மனம் வரவில்லை. ஆதலால் அவள் தனக்காக சேமித்த ஒரு உலர்ந்த நெல்லிக்கனியை அவருக்குக் கொடுத்தாள். இந்த செயலால் பூரிப்படைந்த ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றி மகாலட்சுமி தேவியிடம் அந்தப் பெண்ணுக்கு அருளுமாறு பிரார்த்தனை செய்தார்.
மகாலட்சுமி தேவி அவருக்கு முன்னால் தோன்றி, அந்தப் பெண்மணி தனது முந்தைய பிறப்பில் செய்த பாவங்களின் விளைவாகவே துன்பப் படுகிறாள் என்று கூறினார். அதற்கு ஸ்ரீ ஆதி சங்கரர் அவ்வாறே இருந்தாலும், இந்த பிறப்பில் செய்த இந்த ஒரு நல்ல செயல் மட்டுமே அவரது வறுமையை போக்க போதுமானது என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவி மகாலட்சுமி பெண்ணின் குடிசையில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்தார். கனகதாரா ஸ்தோத்திரத்தில் 21 ஸ்லோகங்கள் உள்ளன. இதை தினந்தோறும் படிப்பதன் மூலம் ஒருவர் வறுமை மற்றும் துன்பத்திலிருந்து விடுபடுவார். தங்கம் வாங்க மக்களின் ஆர்வத்தை தூண்டுவது ஒருவேளை இந்த நிகழ்வு தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
செல்வம் பெற அக்ஷய த்ரிதியை நாளன்று என்ன செய்யலாம்?
சுதாமா போல செல்வத்தையும் செழிப்பையும் பெற, நாம் இறைவனிடம் முற்றிலும் சரணடைய வேண்டும். இது ஸ்லோகங்கள் / மந்திரங்கள் பாராயணம் உச்சரிப்பதன் மூலமாகவோ அல்லது வீட்டில் செய்யும் ஒரு பூஜையாகவும் இருக்கலாம். இந்திரனைப் போல் இந்த புனித நாளில் தொண்டு மற்றும் தான தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும். எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே சிறந்த தர்மமாகும். மற்றவர்களுக்கு பணம், உணவு, உடை கொடுத்து உதவ இந்த ஊரடங்கு காலத்தை விட சிறந்த காலம் எதுவுமில்லை.
அப்படியென்றால் கனகதாரா ஸ்தோத்திரம்? ஆம், அதையும் கண்டிப்பாக பாராயணம் செய்யவேண்டும். ஆனால் அது நமக்காக இல்லாமல் நம் துன்ப காலங்களில் நமக்கு உதவி செய்தவர்களின் நலனுக்காக இருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், அந்த ஏழைப் பெண்ணைப் போல நாமும் தன்னலமற்று தர்ம காரியங்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இதுபோன்ற நல்ல நாட்களில் முழு நம்பிக்கையுடன் தர்மம் காரியத்தில் ஈடுபட வேண்டும். அப்படி பிறர் நலனுக்காக பிரார்த்தனை செய்தோமானால் நமக்கு அருள ஆதிசங்கரரை போன்ற ஒரு மகான் வரமாட்டாரா என்ன?
சக எழுத்தாளர் ரங்கராஜனின் பரிந்துரைகளுடன் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
Very nice sir 👍
Thanks Gowtham
Very well articulated Rama
Thanks Prasanna