தமிழில் அர்ச்சனை

கேள்வி: கோவில்களில் மற்றும் பிற இடங்களில் தமிழ் முதலான அவரவர் விரும்பும் மொழிகளில் அர்ச்சனை மற்றும் பூஜை செய்வதில் ஏதும் தவறு இருக்கிறதா?

பதில்: இன்று மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் தமிழில் அர்ச்சனை என்னும் இந்த விஷயத்தைப் பற்றி என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் விடை அளிக்க முயற்சிக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

தமிழில் அர்ச்சனை






கோவில்களில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆகம சாஸ்திரங்களின் அடிப்படியில் பூஜைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு இருக்க இந்த கேள்வி இன்று ஏன் எழுகிறது என்று யோசிக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. உதாரணமாக அர்ச்சனையின் போது கூறப்படும் வார்த்தைகள் புரிவதில்லை என்றும், தமிழைத் தாய்மொழியாக உடைய நாம் வேறு மொழியில் எதற்கு பூஜை நடத்த வேண்டும் என்றும் அர்ச்சனை செய்பவர் தான் வடமொழியைப் பயின்றதன் மூலம் தான் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் ஏற்படச் செய்கிறார் என்பன போல பல காரணங்கள் கூறப்படுகின்றன. இத்தகைய காரணங்கள் ஏன் சரியானவை அல்ல என்பதைப் பார்ப்போம்.

கோவில்களில் ஆகமங்கள் (சைவ ஆகமங்கள், பாஞ்சராத்ரம், வைகானஸம் முதலிய வைணவ ஆகமங்கள்) பல நூற்றாண்டுகள் பழமையானவை. கோவில் கட்டுமானம் முதல் விழாக்கள், சிற்பங்கள், மண்டபங்கள், வழிபாட்டு முறைகள் வரை அனைத்தும் முன்னமேயே ஆகமங்களில் வரையிடப்பட்டுள்ளன. வழிவழியாக மன்னர்கள் முதல் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் வரை இவற்றில் தலையிட்டதில்லை. அவற்றை நம் போக்கில் மாற்றுதல் என்பது நன்மையைத் தராது.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஞ்சராத்ர ஆகமத்தில் தமிழ் பிரபந்தங்களுக்கு ஒரு பெரும் பங்கு ஏற்கனவே உள்ளது. பெருமாள் வீதி உலா வரும் நேரத்தில் தமிழ் பிரபந்த விற்பன்னர்கள் பெருமாள் முன் ஓதி செல்வார்கள். வேத பாராயணம் செய்பவர்கள் பெருமாள் பின் வருவார்கள். மேலும் ஆண்டு தோறும் திரு அத்யயன உத்ஸவ காலங்களில் நாலாயிர திவ்யப்ரபந்தங்கள் என்னும் தமிழ் பாசுரங்கள் இருபத்தியொரு நாட்களுக்கு மிக விமரிசையாக ஓதப்படும். சைவ கோவில்களிலும் திருமுறைகளுக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது.

மேலும் தமிழை ஆழ்வார்கள் பலவகைகளில் புகழ்கிறார்கள். சில உதாரணங்கள் கீழே:

  • குலசேகராழ்வார் – குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை (பெருமாள் திருமொழி)
  • மதுரகவியாழ்வார் – அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணிநுண் சிறுத்தாம்பு)
  • திருமங்கையாழ்வார் – சீர்மன்னு செந்தமிழ் மாலை வல்லார் (பெரிய திருமொழி)
  • திருவரங்கத்து அமுதனார் – தனியானையைத் தண்தமிழ் செய்த நீலன் (இராமானுச நூற்றந்தாதி)

இதன் மூலம் தமிழ் மொழிக்குக் கோயில்களில் உள்ள ஏற்றத்தை நாம் நன்கு உணரலாம். ஆகமங்கள் குறிப்பிடப்பட்ட படி சம்ஸ்க்ரித மொழியும் தமிழ் மொழியும் தங்கள் தங்கள் இடங்களில் இருந்து கொண்டு கடவுளுக்கு சேவை செய்து கொண்டு வருகின்றன.

அடுத்து, சம்ஸ்க்ருத மொழி புரிவதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இருக்கலாம், ஆனால் அதற்கு உண்மையான தீர்வு அதனை அறிவது அல்லவா? உண்மையை ஒப்புக்கொள்வதானால் தமிழ் மொழியிலேயே பல வார்த்தைகள் நமக்கு தெரிவதில்லை. கீழே உள்ள சில தொடர்களை பார்ப்போம்.

  • அகலகில்லேன் இறையும்மென்று அலர்மேல்மங்கை உறைமார்பா (திருவாய்மொழி)
  • ஐந்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத்தாவி
    ஐந்திலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலாரூரில்
    ஐந்திலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான் (கம்பராமாயணம்)
  • கிலியுஞ் சௌவும் கிளரொளியையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் (கந்த ஷஷ்டி கவசம்)

தமிழிலேயே இருந்தாலும் இவற்றுக்கு நாம் எளிதாக பொருள் கண்டு விட முடியுமா? முயற்சி தேவை படுகிறது அல்லவா? அதே முயற்சியை சம்ஸ்க்ரித ஸ்லோகத்தை அறியச் செலவிடலாமே! சனாதன தர்மத்திற்கு சம்ஸ்க்ருதமும் தமிழும் இரு கண்களாக இருக்கின்றன. ஒரு பிள்ளையை வளர்க்க மறு பிள்ளையை பலி கொடுக்க முயற்சிப்பது எப்படி சரியாகும்? தவிர தமிழில் சம்ஸ்க்ரிதமும் சம்ஸ்க்ருதத்தில் தமிழும் கலந்தே இருக்கின்றன. நாம் உபயோகிக்கும் பல தமிழ் வார்த்தைகள் சம்ஸ்க்ரித அடிப்படைச் சொற்களைக் கொண்டுள்ளன. உதாரணம் – சுத்தம், குரு, அகதி, அஞ்சலி, அர்த்தம், கிராமம், தத்ரூபம், கோபம், தாவரம், பக்தி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தமிழில் அர்ச்சனை (அர்ச்சனை என்பதே வடமொழி சொல் தான்!) செய்ய முற்பட்டாலும் சமஸ்க்ரித மொழி கலப்பு இன்றியமையாததே.

மந்திரங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவை நமக்கு நன்மையைத் தரும் என்ற நம்பிக்கை வேண்டும். ஒரு மருத்துவர் கொடுக்கும் மருந்தை உட்கொள்ளும் முன் அதில் என்ன கலந்து இருக்கிறது என்று நாம் பார்ப்பதில்லை. அவரின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம். இறைவழிபாட்டில் அதை விட அதிக நம்பிக்கை தேவை அல்லவா?






தாய்மொழியை வளர்ப்பது என்பது நம் அனைவருக்கும் இன்றியமையாத கடமை என்பது உண்மை. ஆனால் அதற்கு கோயில் இடமல்ல. இன்று நாம் பேசும் வார்த்தைகளில் ஆங்கில கலப்பு இல்லாமல் பேச ஆரம்பித்தாலே தமிழை வாழ வைக்க முடியும். நம்மில் எத்தனை பேர் கீழ்கண்ட சொற்களை உபயோகிக்கிறோம் – ஹலோ, ஆபிஸ், ட்ராபிக் ஜாம், டயர்ட், லிப்ட், ரோடு, ஹோட்டல், பிரட், கேக், பிரிட்ஜ் முதலியன. இவற்றிற்கு மாற்றுச் சொற்களை உபயோகிக்க ஆரம்பித்தாலே தமிழ் வளரத் தொடங்காதா?

சரி, சிலர் சமஸ்க்ரிதம் கற்க நினைக்கிறார்கள் ஆனால் உயர் சாதியினர் எனக் கருதப்படும் சிலர் தடுத்தால் என்ன செய்வது? முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது சமஸ்க்ரிதம் என்பது ஒரு பொதுவான மொழி (மேலும் உயர் சாதி தாழ்ந்த சாதி என்று பிறப்பளவில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. இது குணத்தாலும் செய்யும் தொழிலாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது). இது அனைவரும் பயில வேண்டிய மொழி. இன்று பலரும் ஆர்வமாக (ஜெர்மானியர் உட்பட) இம்மொழியைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகவே படிக்க எந்தத் தடையும் இல்லை என்பதே உண்மை.

ஆண்டாண்டு காலங்களாக சமஸ்க்ரிதம் கடவுள்களின் மொழியாகக் கருதப்படுகிறது (இதற்கு கைர்வாணி என்ற பெயர் உண்டு. பொருள்: தேவர்கள் பேசும் மொழி). பொதுவாகவே வேறொரு நாட்டவரைத் தொடர்பு கொள்ளும் போது அவர்களின் மொழியில் பேசும் போது அவர்கள் மகிழ்ந்து நமக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அது போல நாம் சமஸ்க்ரிதத்தில் அர்ச்சனை செய்யும் போது கடவுள்கள் மேலும் மகிழ்ந்து நாம் வேண்டுவதை விட அதிகமாகவே நமக்கு அருள்வார்கள். இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

நாம் இப்போது இருப்பது மிகவும் சோதனை மிகுந்த காலம் ஆகும். தர்மத்திற்குப் பல ஆபத்துக்கள் வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்நேரத்தில் நம் முன்னோர்கள் வகுத்த பாதையில் பக்தியை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும். புரட்சி என்னும் பெயரில் வகுக்கப்பட்டிருக்கும் வழியிலிருந்து பிறழ்ந்தோமானால் மேலும் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்திடும். சங்கரர் மற்றும் இராமானுஜரை விடவா நாம் புரட்சி செய்திட முடியும்?






Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

5 thoughts on “தமிழில் அர்ச்சனை”

  1. Excellent article Ranga. We have to realise that what we don’t know is more than what we know. I completely agree with your thoughts.

  2. அருமையான புத்தியை தெளிய வைக்கும் அளவில் எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
    புத்தியுள்ளவர்களுக்கு புரியும்

  3. Dear Rangarajan, had I learnt to type in Tamizh on my I pad I would have loved to. Your explanation for the foolish questions asked by aethists should be a slap on their faces. You don’t believe in Sanatanam, and you would like to blast all temples. Then why should you interfere in our beliefs?
    Would the same blokes talk ill of Arabic/Urdu which is the medium of worship in mosques? How many of your Christian followers know Latin or English?
    For these fellows Sanatanis are sitting ducks.
    Thank you Rangarajan, as a ‘super’ senior citizen my blessings. I shall try to read more from you
    Jana Iyengar

    1. Thank you sir. I think it is our responsibility to clarify doubts of those whose queries could either be genuine or sarcastic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *