நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நல்லவர்களுடைய ஆசியைப் பெறுவது மிகவும் முக்கியம். இதை நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். ஒரு முறை நாரத முனிவருக்கு இந்த கருத்தைப் பற்றி ஒரு சந்தேகம் எழுந்தது. அதை பகவான் எப்படி தீர்த்து வைத்தார் என்பதை பார்ப்போம்.
ஒரு நாள் நாரதர் வைகுண்டத்தில் பகவான் விஷ்ணுவிடம் உரையாடும் போது, ‘ஸ்ரீமன் நாராயணா, நல்லவர்களைப் பார்ப்பதும் , அவர்களுடன் பழகுவதும் புண்ணியத்தை தரும் என்று சொல்கிறார்களே. இது உண்மையா?’ என்று கேட்டார். அதற்கு பகவான் பூலோகத்தில் ஒரு காட்சியைக் காண்பித்து ‘நாரதரே! அங்கே ஒரு குப்பைகூளம் தெரிகிறதல்லவா? அதிலுள்ள உள்ள புழுவிடம் இதைப் பற்றி கேளும்’ என்று சொன்னார். சற்று தயங்கியபடி நாரதரும் அந்த புழுவிடம் சென்று தன் கேள்வியை கேட்டார். மறு வினாடியே அந்த புழு இறந்து விடுகிறது. இதை எதிர்பார்க்காத நாரதர் பகவானை பார்த்தார்.
இப்பொழுது ஒரு கன்றை சுட்டிக்காட்டி இதே கேள்வியை அதனிடம் கேட்கச் சொன்னார் பகவான். நாரதரின் கேள்வியை கேட்ட நிமிடமே கன்றும் இறந்து விடுகிறது. நாரதர் பதைபதைப்புடன் ‘பகவானே இது என்ன? என் கேள்வி அத்தனை பயங்கரமாக உள்ளதா? ஏன் இந்த சோதனை?’ என்று முறையிட்டார்.
பகவான் சிரித்துக்கொண்டே ‘ஒரு அரசனுக்கு ராஜகுமாரன் பிறந்திருக்கிறான். அந்த குழந்தையிடம் உன் கேள்வியை கேளும்’ என்று சொல்லி நாரதரை பூலோகத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தார். சற்று தயங்கினாலும் பகவான் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அந்த குழந்தையிடம் சென்றார் நாரதர். தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து பயந்தபடி ‘ராஜகுமாரா! நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் உன் உயிரை மட்டும் விட்டு விடாதே’ என்று மன்றாடியபடி தன் கேள்வியை கேட்டார்.
‘ராஜகுமாரா, நல்லவர்களை காண்பதும் நல்லது, அவர்களின் பேச்ச்சைக் கேட்பதும் நல்லது என்கிறார்களே, இதைப் பற்றிய உன் கருத்து என்ன?’ என்றார். இதை கேட்ட அந்த குழந்தை சிரித்துக்கொண்டே ‘என்னை தெரியவில்லையா நாரதரே? முந்தைய பிறவிகளில் புழுவாகவும், கன்றாகவும் பிறந்தேன். பூமியில் பிறந்தவுடனே ஹரி நாமம் சொல்கிற நல்லவர்களாகிய உங்களை பார்த்ததால் புழுவின் பிறப்பிலிருந்து மீண்டு கன்றாக பிறந்தேன். கன்றாக பிறந்த முதல் நாளில் எந்நேரமும் ‘ஹரி ஹரி ஹரி’ என்று நாராயணனின் நாமம் சொல்லும் உங்களை தரிசித்ததால் அந்தப் பிறவியும் நீங்கி இந்த பிறவியில் ராஜகுமாரனாக பிறந்துள்ளேன். இந்த பிறவியிலும் உங்களை பார்த்ததால் உங்கள் ஆசியின் பலனால் நன்றாக வாழ்ந்து மறுபிறப்பு இல்லாமல் முக்தி அடைவேன். இதைவிட உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்’ என்று கேட்டது.
மகான்கள், ஞானிகள் ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டும் அழகிய கதை இது. இதன் மூலம் நல்லவர்களுடன் பழகுவதாலும், அவர்களின் ஆசி பெறுவதாலும் ஒருவருக்கு எப்பேர்ப்பட்ட முன்னேற்றம் கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நெறி தவறாமல், தர்ம காரியங்களில் ஈடுபவர்களின் நட்பும், ஆசியும் நமக்கு புண்ணியத்தை தரும் என்பதை ‘அகஸ்தியர்’ என்ற திரைப்படத்தில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் காட்சி அமைத்திருப்பார்கள்.
‘நல்லோர் தரிசனம் பாவ விமோசனம். அவர்களின் நிழல் பட்டாலே பாவம் போய், புண்ணியம் ஓடி வந்துவிடும். அன்னை தந்தையருக்கு சேவை செய்பவரின் தரிசனம் ஆண்டவனின் தரிசனம்’ என்று அகஸ்தியர் கூறுவார்.
1972ல் வெளிவந்த அகஸ்தியர் திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளை இங்கு இணைத்துள்ளோம். இக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய காட்சிகளைப் பார்த்து மகிழுங்கள்.
முழு திரைப்படத்தின் இணைப்பு https://youtu.be/IFNtPQCgii0
ஆன்மீகமும் சினிமாவும் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்
கடவுள் யாருக்கு தரிசனம் கொடுப்பார்?