கடவுள் பல சமயங்களில் மனிதனாக அவதரித்து தன் பக்தர்களின் துயர் துடைத்தார் என்று புராண கதைகள் மூலம் கேள்வி பட்டிருக்கிறோம். அப்படி ஒருவேளை அவர் இக்காலத்தில் அவதரித்தால் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். இந்தச் சூழ்நிலையை 2011’ல் வெளியான ஒரு தமிழ் திரைப்படம் மிக எதார்த்தமாக காட்டியுள்ளது.
ஆன்மீகமும் சினிமாவும் – 5
இந்தத் திரைப்படம் ஒரு முருக பக்தையின் காதல் கதையை விவரிக்கிறது.. ஒரு வீட்டில் சமையல் வேலை பார்க்கும் மஹாலக்ஷ்மி என்ற பெண் அந்த வீட்டு உரிமையாளர் மகனைப் பல இன்னல்களுக்குப் பின் எப்படி காதல் திருமணம் செய்துகொள்கிறாள் என்பதே கதை. கசப்பான சம்பவங்களால் அவள் மனம் நொந்து இருக்கும் நேரத்தில் அந்த வீட்டில் மற்றொரு சமையல்காரனாகத் தோன்றும் சரவணன் என்ற கதாபாத்திரம் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை உற்சாகப் படுத்துவான். திருமணம் அவள் விருப்பம் போல் நடக்கும் என்று நம்பிக்கையும் கொடுப்பான்.
இறுதியில் அவள் விரும்பியபடியே திருமணம் நடக்கும். அந்த நேரத்தில் முருகப் பெருமானே சமையல்காரன் சரவணன் வடிவில் வந்தார் என்பதை அவள் உணர்ந்து மெய் சிலிர்த்து போவாள். தன் பக்தர்களுக்கு உதவ கடவுள் மனித வடிவில் பூமிக்கு இன்றும் வருகிறார் என்ற செய்தியுடன் திரைப்படம் முடிகிறது.
இந்த திரைப்படத்தில் நான் கவனித்த வித்யாசமான விஷயம் என்னவென்றால் கடவுள் ஒரு சாதாரமான மனிதனாக இருந்து நம்பிக்கையும் உற்சாகமும் கொடுப்பாரே தவிர தன் சக்தியைப் பயன்படுத்தி வாழ்க்கையின் போக்கை மாற்றமாட்டார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் கடவுளிடம் மஹாலக்ஷ்மிக்கு வெறுப்பு ஏற்படும். இருப்பினும் அவர் சரவணன் வடிவில் வந்து அவளுக்கு உதவ முன்வருவார். அவள் சரவணனை கடவுள் என்று அறியாமல் உதாசீனப் படுத்தினாலும் அவள் கூடவே இருந்து நம்பிக்கை கொடுப்பார். மேலும் சரவணன் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ஒரு மனிதன் கஷ்டப்படும் நேரங்களில் அவனுக்கு மிகவும் ஆறுதல் தரக் கூடியனவாக இருக்கின்றன.
இந்த கதையில் உற்சாகம் மற்றும் நேர்மறை எண்ணம் (positive mind) கொண்ட சரவணனைப் போல் பல நபர்களை நாம் நம் வாழ்நாளில் சந்தித்திருப்போம். “கவலையை விடு, நீ கண்டிப்பாக வெற்றி அடைவாய் , மீண்டும் முயற்சி செய்” என்று நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பலர் சொல்லி கேட்டு இருப்போம். பல கடினமான நேரங்களில் இவர்கள் பேசிய உற்சாக வார்த்தைகள் நம்மை ஊக்கப்படுத்தி நம் முயற்சியைத் தொடர உதவியிருக்கும். ஆனந்தத்துடனும் நம்பிக்கையுடனும் கடமையை செய். நல்லதே நடக்கும் என்று பகவான் கிருஷ்ணர் கூறிய விஷயத்தை எடுத்து கூறும் விதமாக யாரெல்லாம் நம்மை ஊக்குவிக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே இக்காலத்தின் கடவுள்கள் என்பதை இந்தத் திரைப்படத்தின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
என்னை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேற உதவி செய்து கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சக பணியாளர்களுக்கும் இந்த பதிவின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணத்தை இந்த பதிவு கொடுக்கும் என்று நம்புகிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே ‘comments’ பகுதியில் நீங்கள் பதிவிடலாம். நன்றி!
முழு திரைப்படத்தின் இணைப்பு https://www.youtube.com/watch?v=eZIIU8mvHWw
குறிப்பு: இந்த திரைப்படம் நந்தனம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்.
ஆன்மீகமும் சினிமாவும் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய பதிவுகள்
கடவுள் யாருக்கு தரிசனம் கொடுப்பார்?
இன்று போய் நாளை வா
இதுவும் கடந்து போகும்
ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி