கடந்த சில வாரங்களாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மற்றும் மஹாபாரத தொடர்களை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சில தனியார் தொலைக்காட்சிகளிலும் இது போல முன்னதாக ஒளிபரப்பான தொடர்களை மீண்டும் ஒளிபரப்புச் செய்கிறார்கள். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதையே இது காட்டுகிறது.
ஒரு நல்ல விஷயம் மக்களை வலுவாகச் சென்றடைய கலை வடிவம் அல்லது திரை வடிவம் உதவுகிறது. நம் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இதுவரை பல திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மிகம் சார்ந்த காட்சிகளை (கற்பனையாக இருந்தாலும்) மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பார்கள். அத்தகைய காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைத்திருக்கக் கூடும்.
இப்பொழுது உள்ள வேகமான வாழ்க்கைமுறையின் நடுவில் ஒரு முழு திரைப்படத்தைக் காண்பது மிகக் கடினம். ஆகையால் சில காட்சிகள் மற்றும் உரையாடல்களை மட்டும் சுட்டிக்காட்டி அவற்றில் இருந்து நான் புரிந்துக்கொண்ட சில விஷயங்களை “ஆன்மீகமும் சினிமாவும்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதலாம் என்று இருக்கிறேன். அந்த முயற்சியின் முதல் பகுதியாக இதைப் பதிவு செய்கிறேன்.
ஆன்மீகமும் சினிமாவும் – 1
கோவில்களுக்கு செல்லும் பொழுது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி நாம் அறிவோம். நெற்றியில் விபூதி / நாமம் இட்டுக்கொள்வது, பகவான் நாமத்தை உச்சரிப்பது, கைபேசி போன்றவற்றால் கவனத்தை சிதற விடாமல் இருப்பது போன்ற பல விதிகளை நாம் அறிந்து இருக்கிறோம். இவற்றைப் பற்றி பல பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.
இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலர் கோவிலுக்குச் சென்றாலும் கடவுளின் அனுக்கிரஹம் ஒரு சிலருக்கே கிடைக்கிறது. இதற்கு காரணம் ஒருவரின் தன்மையை பொறுத்தே அவருக்கு கடவுளின் அருள் கிடைக்குமே தவிர அவருடைய வெளிப்புற பக்தியினால் மட்டும் அல்ல. இதைப் பற்றி 1976ல் வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த காட்சி முற்றிலும் கற்பனையாகவே இருந்தாலும் நாரத முனிவர் வைகுண்டத்தின் வாயிற்காவலர்களுடன் உரையாடும் காட்சி மிகவும் சுவையானது . தொடர்ந்து நாரதர் நம்பிக்கையோடு “நாராயணா நாராயணா” என்று உச்சரித்துக்கொண்டே உள்ளே செல்வதும் பகவான் நாராயணமூர்த்தி அவருக்கு காட்சி அளிப்பதும் மிக அழகாக இருக்கும். பார்த்து ரசியுங்கள்!
இது போன்ற திரைப்படக் காட்சிகள் உங்களை நல்ல முறையில் பாதித்திருந்தால் அவற்றை கமெண்ட்ஸ் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.
முழு திரைப்படத்தின் இணைப்பு https://youtu.be/5awsacLaAns
என்னுடைய முந்தைய பதிவுகள்
அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
Well done rama