வர்ணாசிரமம் என்னும் சொல்லை தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி கேட்கிறோம். இன்று அந்தச் சொல் ஒரு தவறான சொல் போல உபயோகிக்கப்படுகிறது. வர்ணாசிரமம் என்பதின் உண்மைப் பொருளையும் அதன் மகத்துவம் பற்றியும் நாம் இப்பதிவில் பார்க்கலாம்.
வர்ணாசிரமம்
முதலில் வர்ணாசிரமம் என்பது ஒரு வார்த்தையே அன்று. வர்ணம் மற்றும் ஆஸ்ரமம் என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையே வர்ணாசிரமம் ஆகும். வர்ணம் என்பதற்கு பிரிவு என்றும், ஆஸ்ரமம் என்பதற்கு நிலைகள் என்றும் பொருள் காணலாம்.
முதலில் வர்ணத்தைப் பற்றி பார்ப்போம்.
வர்ணம்
பொதுவாக அனைத்து சமுதாய முறைகளிலுமே தொன்று தொட்டு பல உட்பிரிவுகள் இருந்து வருகின்றன. மக்களின் சக்தி, உழைக்கும் திறன் மற்றும் சிந்தனைகளை பொறுத்து அவர்கள் தங்கள் சமுதாயத்தின் பணிகளை ஏற்கிறார்கள். அறிவு சார்ந்த பணிகள், உடல் உழைப்பு சார்ந்தவை, பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்தவை என்று இவை பல வகைப்படுகின்றன. இதுவே ஒரு சமுதாயம் தழைக்க இயற்கை விதித்த நியதியாகும். இவற்றில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. பெரும்பாலான சமூகங்களில் இவை மனிதனால் வகுத்தவை. நம் பெருமை என்னவென்றால் நம் சமயத்தில் பகவானே இதை வகுத்துள்ளார்.
பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு இதைத் தெளிவாக உபதேசிக்கிறார்.
“சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ : ” பகவத் கீதை 4.13
இதன் பொருள்: இவ்வுலகில் உள்ள நான்கு வர்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டன. இந்த நான்கு பிரிவுகளும் ஒவ்வொருவரின் குணங்களாலும் அவர்களின் செயல்களாலும் கண்டறியப்படுகிறன.
கடவுளால் கூறப்பட்டிருக்கும் இந்த ஸ்லோகம் மூலம் நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்:
- நான்கு வர்ணங்களும் குணம் மற்றும் செயல்களால் வகுக்கப்படுகின்றன. பிறப்பால் அல்ல.
- நான்கு வர்ணங்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை
இப்போது அறியாமையால் மிகவும் தவறாக மேற்கோள் காட்டப்படும் புருஷ ஸுக்தத்துக்கு வருவோம். சிலரின் கேள்வி இது தான் – ‘புருஷ ஸூக்தத்தில் கடவுளின் தலையில் இருந்து ப்ராஹ்மணர்கள் வருவதாகவும் பாதங்களில் இருந்து சூத்திரர்கள் வருவதாகவும் குறிப்பிடப் படுகிறதே, ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?’ இதற்கு பல அறிஞர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். புருஷ ஸுக்தம் கூறுவது இதுவே – “அந்த மஹாபுருஷனாகிய பரம்பொருளின் முகத்தில் இருந்து பிராமணன் உண்டாகிறான். அவன் தோள்களிலிருந்து க்ஷத்ரியன் உண்டாகிறான். தொடைகளிலிருந்து வைசியனும் பாதங்களில் இருந்து சூத்திரனும் உருவாகிறான். “
- விளக்கம் 1 – பரம்பொருளை உருவமாக நாம் பார்த்தோமானால் அவன் அனைத்து அங்கங்களுமே புண்ணியமானவை அல்லவா? தலை முதல் பாதம் வரை திவ்யமானவனல்லவோ அவன்?
- விளக்கம் 2– கடவுளின் மிக முக்கியமான அங்கம் என்று ஒன்றைச் சொல்வதென்றால் அது அவன் திருவடியே ஆகும். ஏனெனில் அதைப் பற்றியே நாம் பெரும்பெறு பெறமுடியும். அவ்வாறு இருக்க திருவடியில் இருந்து உண்டானவர் எவ்வாறு தாழ்வானவர் ஆவர்?
- விளக்கம் 3 – ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை உள்ளது. ப்ராஹ்மணர்களுக்கு சொல்வலிமையும், க்ஷத்ரியர்களுக்கு எதிரிகளோடு போரிடத் தோள்வன்மையும், வியாபாரம் செய்யும் வைஸ்யர்களுக்கு அமர்ந்து வேலை செய்ய வலுவான தொடைகளும், சூத்திரர்களுக்கு கட்டுமான வேலை போன்றவற்றைச் செய்ய கால்களில் வலிமையையும் தேவைப் படுகிறது. இதை முன்னிட்டே இவர்கள் முறையே கடவுளின் முகம், தோள்கள், தொடை மற்றும் பாதத்தில் இருந்து வெளிவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பில் உயர்வு தாழ்வு ஏது?
வேதகாலம் தொட்டு சாஸ்திரங்கள் மற்றும் ஸ்ம்ருதி முதலான நூல்களில் எந்த ஏற்றத்தாழ்வும் காணப்படவில்லை. அவ்வாறு எவரேனும் பாராட்டுவாரேயானால் அவர் இறைவனின் கோபத்திற்கு உள்ளாவார் என்பது நியதி.
நம் இதிஹாஸ புராணங்கள் மற்றும் பிற சமயநூல்களில் அனைத்து வர்ணத்தாரும் எவ்வாறு போற்றப்படுகிறார்கள் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை இங்கே காணலாம்:
இதிஹாசங்கள்
- இராமாயணத்தில் க்ஷத்ரியரான ராமர் நான்காம் வர்ணத்தில் பிறந்த வேடுவ குல அரசனான குகனை தன சகோதரனாகவே பாவித்தார் (‘குகனோடு ஐவரானோம்’ – கம்பராமாயணம்). சபரி என்னும் வேடுவ குலப்பெண் தன் குருவாகிய மதங்க முனிவரின் கட்டளைக்கிணங்க (மதங்க முனிவர் அந்தணராயினும் ஒரு வேடுவப்பெண்ணைத் தன் சிஷ்யையாக ஏற்றார் என்பதை கவனிக்க) இராமபிரானின் வருகைக்காக காத்து, பின் அவரின் அருளால் மோக்ஷத்தைப் பெற்றாள்.
- மேலும் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ரத்னாகரன் என்னும் திருடனாகத் தன் முன்வாழ்வில் இருந்தவர். வேதவ்யாஸர் மச்சகந்தி (சத்யவதி) என்னும் மீனவப் பெண்ணின் மகனாகப் பிறந்தவர். இருவரும் தங்கள் குணம் மற்றும் செயல்களாலேயே முனிவர்கள் என்னும் பேற்றை அடைந்தவர்கள்.
- விஸ்வாமித்திரர் அரசனாக இருந்து பிறகு தன் கடுந்தவத்தின் பயனாக பிரம்மரிஷி என்னும் பட்டத்தைப் பெற்றார். அதே போல அந்தணர் குலத்தில் பிறந்த பரசுராமர் ஆயுதம் தரித்து போர் புரிந்ததால் அவரும் ஒரு க்ஷத்ரியராகவே கருதப்படுகிறார்.
- மஹாபாரதத்தில் கௌசிகன் என்னும் ஒரு அந்தணர் தன் கல்வி பற்றி கர்வத்தில் இருந்த போது தர்மவ்யாதர் என்பவரிடம் போய் உபதேசம் பெற ஆணை கிடைக்கிறது. தர்மவியாதர் என்பவர் ஒரு கசாப்புக்கடை வைத்திருப்பவர் என்பதை அறியும் கௌசிகருக்கு வியப்பு மேலிடுகிறது. இருந்தும் அவரை வணங்கி அவரை குருவாக ஏற்று அவரிடமிருந்து தர்ம உபதேசங்களை பெற்றுச் செல்கிறார் கௌசிகர்.
பிற புராணங்கள்
- சிவபெருமானின் மகனான முருகப் பெருமான் மணமுடிக்கும் வள்ளி, நம்பிராஜன் என்னும் குறவர் தலைவனின் மகள் ஆவாள். ஸ்கந்தபுராணத்தில் இந்த வ்ருத்தாந்தம் காட்டப்படுகிறது.
- அஹோபிலம் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் நரசிம்மமூர்த்தியின் நாயகியாக இருப்பவர் செஞ்சு லட்சுமி தாயார் ஆவார். இவர் இவ்வூரில் இருக்கும் பழங்குடி இன மக்களின் பெண்ணாவார். இன்றும் இந்த பழங்குடி மக்கள் பெருமாளைத் தங்கள் மாப்பிள்ளையாகக் கருதி விசேஷ நாட்களில் கோயிலில் பூஜை செய்கிறார்கள்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும்
- நாலாயிர திவ்யப்ரபந்தம் அருளிய ஆழ்வார்களில் அனைத்து வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். பன்னிருவரில் பிரதானமான ஆழ்வாரான நம்மாழ்வார் வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இது போல திருமங்கை ஆழ்வார் (கள்ளர்), திருமழிசை ஆழ்வார் (பறையர்), திருப்பாணாழ்வார் (பாணர்), குலசேகர ஆழ்வார் (அரச குலம்) என அந்தணர் அல்லாத பல வர்ணங்களில் பிறப்பு உடையவர்கள். அனைவருமே இறைவனுக்கு சமமாகப் போற்றப்படுகிறார்கள்.
- இது போல சைவ நாயன்மார்களில் பலரைக் குறிப்பிடலாம். அப்பர், கண்ணப்ப நாயனார், நந்தனார் (திருநாளைப்போவார்) போன்ற பலர் பிற குலங்களில் பிறந்து சிவபெருமானின் அருளை பெற்றனர்.
இது போன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களை நம் அற நூல்களில் காண முடிகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வர்ணங்கள் அனைத்து சமூகங்களிலும் இன்றியமையாதவை. ஆனால் அவை திணிக்கப்பட வேண்டியவை அல்ல. மேலும் அவற்றில் உயர்வு தாழ்வுகள் அறவே இல்லை. ஒருவரின் விருப்பம், குணாதிசயம் மற்றும் முயற்சியின் எல்லையே அவரின் வர்ணத்தை நிர்ணயிக்கிறது. நாம் இதனை சரி வர புரிந்து கொண்டோமானால் உயர்வு மனப்பான்மையோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ இன்றி நம் கடமையைச் செய்யத் தகவோம்.
ஆஸ்ரமம்
இப்போது ஆஸ்ரமம் என்றால் என்ன என்று காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன. இவையே ஆசிரமங்கள் ஆகும். அவை பிரம்மச்சர்யம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம் மற்றும் சன்யாசம். ஒவ்வொரு நிலையிலும் நமக்கு சில கடமைகள் உண்டு. அவையாவன:
- பிரம்மச்சாரி – பிறப்பு முதல் திருமண வயது வரை உள்ள பருவம். கல்வி கேள்விகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிற இன்பங்களில் மனம் செலுத்தாமல் இருக்கும் பருவமாகும். உடலையும் மனதையும் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் பிற்பகுதிக்கு தயார் செய்யும் பருவம் இதுவே.
- க்ருஹஸ்தன் – திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடும் பருவம். பணம் ஈட்டுதல், இல்லற அறத்தில் ஈடுபடுதல், பிள்ளைகளை பெற்று வளர்த்தல் ஆகியவற்றில் மனத்தைச் செலுத்தும் பருவம் இதுவாகும். அனேகமாக, நம்மில் பலர் இந்த நிலையிலேயே கடைசி வரை இருக்கிறோம். இந்த நிலை மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த நிலையில் உள்ளவர்களால் மட்டுமே மற்ற மூன்று நிலைகளில் உள்ளவர்களைப் பேண முடியும்.
- வானப்ரஸ்தன் – இல்லற வாழ்விலிருந்து படிப்படியாக விலகி தன் துணையுடன் வசிக்கும் நிலை. மற்ற சுற்றத்தாருடன் உறவுமுறை இருப்பினும் அவற்றை மெல்லக் குறைத்துக்கொள்ளும் பருவம் இதுவாகும். பண்டைய காலத்தில் நம் முன்னோர் தம் துணையுடன் நகரத்திலிருந்து சற்று தள்ளி ஒரு காட்டிலோ அல்லது கிராமப்புறத்திலோ வாழ்க்கையை மேற்கொண்டனர். காலத்தின் சுழற்சியில் இன்று மறுபடியும் இத்தகைய வாழ்க்கையை விரும்பும் வயதான தம்பதிகளைக் காண்கிறோம் அல்லவா?
- சன்னியாசி – வானப்ரஸ்தத்தின் இறுதியில் மீதம் இருக்கும் பற்றையும் விட்டு விட்டு செல்லும் நாளை எதிர்பார்த்து இருக்கும் நிலை இதுவாகும். வாழ்க்கையை முழுவதும் அனுபவித்து கடைசியில் நிறைவுடன் இறைவனின் அழைப்பை ஏற்கப் புன்னகையுடன் காத்திருப்பார்கள் சன்னியாசிகள்.
மேலே உள்ள அனைத்து ஆஸ்ரமங்களும் அனைத்து வர்ணத்தவர்க்கும் பொதுவானவை. ஒவ்வொரு நிலையையும் கடக்காமல் போனவர்களும் உண்டு. உதாரணம் – சங்கரர், மாத்வர் மற்றும் பல சித்தர்கள் ப்ரம்மச்சர்யத்தில் இருந்து நேரே சன்யாச ஆஸ்ரமத்தை அடைந்திருக்கிறார்கள்.
இவ்வாறு சில நிலைகளைக் கடக்காமல் போனாலும் அவற்றைப் பற்றிய அறிவு ஞானிகளுக்குத் தேவையாகும். ஒருமுறை ஆதிசங்கரர் மண்டனமிஸ்ரருடன் தர்க்கம் செய்யும் போது அவர் மனைவி உபயபாரதி குறுக்கிட்டார். இல்லறம் சம்பந்தப்பட்ட கேள்விகளை ஆதிசங்கரை நோக்கி எழுப்பினார். இதைப் பற்றி அறியாத அவர் விடை அளிக்கும் பொருட்டு ஒரு கிருஹஸ்தனான மன்னனின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார். அதன் மூலம் இல்லற தர்மங்களை அறிந்து மண்டமிஸ்ரரை வாதில் வென்றார். இதன் மூலம் இரு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, அனைத்து ஆஸ்ரமங்களும் முக்கியமானவையே என்பது, இரண்டு, அவரவரின் ஆஸ்ரம தர்மத்தைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதாகும்.
ஆஸ்ரம தர்மம் வர்ணத்தைப் பற்றியது அல்ல. இது அனைவருக்கும் பொதுவானதே. பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரைக்கும் எல்லோராலும் கடைபிடிக்கக் கூடியதாகவே இது இருக்கிறது அல்லவா ?
நம் சனாதன தர்மத்தில் மிகவும் தவறாக உபயோகிக்கப்படும் சொல் வர்ணாசிரமம் ஆகும். வர்ணங்கள் என்றும் இன்றியமையாதவை. அவை இல்லையெனில் இவ்வுலகின் சுழற்சி கேள்விக்குறியே. ஆனால் நீக்கப்படவேண்டியது எது என்றால், அது அவற்றில் உயர்வு தாழ்வு பார்ப்பது மற்றும் அதனை ஒருவரின் பிறப்பின் அடிப்படியில் நிர்ணயிப்பது. ஒருவரின் வர்ணத்தை அவரே தன் சுய ஆய்வில் முடிவு செய்து கொண்டு, அவரின் ஆஸ்ரமத்தின் தர்மத்தை பின்பற்றத் தொடங்கும் போது உலகம் சமநிலையை அடையும். நாம் அனைவரும் கூடி முயற்சிப்போமா?
சனாதன தர்மத்தைப் பற்றி இங்கு அறியலாம்.
Nice and interesting.
Thanks very much madam!
Fantastic explanation..!! Enlightening Ranga..
Thanks very much Navneetha!
Thanks for the encouragement Navneetha!