Click here to read this post in English.
கேள்வி: வீடு கோயில் போன்ற இடங்களில் கோலம் போடுவதின் மகத்துவம் என்ன?
பதில்: கோலம் என்பது நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு விஷயமாகும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டும் போடப்படுவது அன்று. கோலத்திற்கு ஆன்மீகத்திலும் அறிவியலிலும் ஒரு தனி இடம் உள்ளது.
கோலம் போடுவதின் மகத்துவம் என்ன என்பதை நாம் இங்கு காணலாம்.
செல்வத்தை வரவேற்கும் கோலம்
கோலம் போடுவதன் மூலம் நாம் செல்வத்திற்கு அதிபதியான மகாலக்ஷ்மி தாயாரை வீட்டிற்கு வரவேற்கிறோம். கோலமிட்ட வீட்டைத் தீய சக்திகள் அண்டுவதில்லை. கோலத்தை சமச்சீராக இடுவதின் மூலம் பிரபஞ்சத்தின் சமநிலை உணர்த்தப்படுகிறது.
சமூக ஒற்றுமையை உணர்த்தும் கோலம்
கோலம் என்பது நம் வீட்டிற்கு அனைவரையும் வரவேற்கப் போடப்படுகிறது. கோலத்திற்குப் பயன்படுத்தப் படும் பொருட்கள் (அரிசி மாவு, வண்ணங்கள் முதலியன) அனைவரின் வீட்டிலும் எளிதாகக் கிடைக்கக் கூடியன. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் செய்யக் கூடிய காரியமாக இருப்பதால், இது சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.
தவிர, ஒருவரின் வீட்டின் முன் போடப்பட்ட கோலத்தை வைத்தே அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் அறிய முடியும்.
- உதாரணமாக, திருமணம் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது சிறப்பு கோலங்கள் போடப்படுகின்றன.
- பண்டிகை நாட்களில் வேறு விதமான வண்ணக் கோலங்கள் போடப்படுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் மகளிர் போட்டி போட்டுக்கொண்டு போடும் கோலங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
- கோலத்தின் நடுவில் பசு சாணத்தின் நடுவில் பூவை வைத்து கோலம் போடும் பழக்கமும் உள்ளது. இதன் மூலம் அவ்வீட்டில் மணவயதில் மக்கள் உள்ளனர் என்பதை அறியலாம்
- நாள்தோறும் சாதாரணமான அனால் அழகான கோலங்கள் போடப்படுகின்றன
- பொதுவாக கோலம் இல்லாமல் ஒரு வீடு இருந்தால், அவ்வீட்டில் ஒரு அசுப காரியம் நடந்திருக்கலாம் என்று அறியலாம்.
ஜீவகாருண்யத்தை வளர்க்கும் கோலம்
கோலத்தில் உள்ள அரிசி மாவை உள்ள எறும்பு மற்றும் இதர பூச்சிகள் வருகின்றன. சில சமயங்களில் காகம் மற்றும் பிற பறவைகளும் மாவை உள்ள வருகின்றன. தினந்தோறும் இப்படி உணவளிப்பதால் மற்ற ஜீவராசிகளைக் காத்து சனாதன தர்மத்தை வளர்க்க நமக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.
உடம்பைப் பேண உதவும் கோலம்
கோலம் போடும் போது நம் கை, கால் மற்றும் உடம்பு பல கோணங்களில் வளைகிறது. பலமுறை எழுந்து உட்கார நேர்கிறது. விடியற்காலையில் இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. தவிர நமது கவனிப்பு திறனும் இதனால் மேம்படுகிறது.
கணக்கை புரியவைக்கும் கோலம்
ஒரு கோலம் அழகாக இருக்கக் காரணம் அதன் சமச்சீர் தன்மை மற்றும் துல்லியமான அமைப்பாகும். நேர்கோடுகளும் புள்ளிகளை சுற்றி வரும் வளைந்த கொடுக்கலாம் ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாதவையாக இருக்கின்றன. இவ்வாறு கோலம் போடுவதற்கு கவனம், திட்டமிடுதல், பொறுமை, ஆய்வுத்திறன் போன்ற பல திறமைகள் தேவைப்படுகின்றன. ஆகவே கோலம் போடுபவர்கள் இயற்கையாகவே சிக்கல்களைத் தீர்ப்பவர்களாக இருப்பர்.
சிகிச்சையில் உதவும் கோலம்
சிறு குழந்தைகளுக்கு கோலங்களைப் பற்றி சொல்லித் தருவதில் மூலம் அவர்களின் அறிவுத் திறனை பெருமளவு வளர்க்கலாம். சமீபத்திய ஆய்வுகளில், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் கோலங்களை பார்ப்பதின் மூலம் அவர்களின் மனநிலையில் ஒரு நல்ல மாற்றம் உண்டாவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மட்டும் என்றில்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் கோலங்கள் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு, இன்றளவும் போடப்பட்டு வருகின்றன. நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியான கோலமிடுதலை நன்கு பயின்று நம் சந்ததியினருக்கும் கற்பித்து பயனடைவோமாக!
இது போன்ற கேள்வி பதில்களை மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.