தானம் என்ற சொல்லுக்கு கொடுத்தல் என்று பொருள். தானம் என்பது இருப்பவர்கள் இல்லாதவருக்கு கொடுப்பது மட்டும் அல்ல. நமது சாஸ்திரங்களில் தானத்தின் மேன்மை பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையான தானம் என்பது பிரதிபலன் எதிர்பார்க்காமல் தேவைப்படும் ஒருவருக்கு செய்யும் உதவியே ஆகும்.
தாதவ்யம் இதி யத் தானம் தீயதே அனுபகாரிணே |
தேசே காலே ச பாத்ரே ச தத் தானம் சாத்வீகம் ஸ்ம்ருதம் ||
“எப்பொழுது ஒருவன் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான ஒருவருக்கு எந்த பதில் உதவியும் கருதாமல் உதவுகிறானோ அவனே சாத்வீக தானத்தின் பயனைப் பெறுகிறான்” – பகவத் கீதை 17.20
தானம் செய்வதின் மூலம் செல்வம் வளர்கிறது. எவன் ஒருவன் தானம் செய்கிறானோ அவனுடைய சந்ததியினர் அனைவரும் அந்த தானத்தின் பலனை அடைவதாக தர்மசாஸ்திரம் சொல்கிறது. எனவே தான் நாம் தொடங்கும் எந்த காரியத்திலும் தானம் ஒரு அங்கமாகப் பார்க்கப் படுகிறது. உதாரணமாக நெடும் பயணத்தின் முன் யாத்ரா தானம், கோயிலில் அன்னதானம், திருமணம் முதலிய சடங்குகளில் அன்னதானம், திரவிய தானம், ஈமக்கிரியைகளின் போது கோ தானம், வஸ்திர தானம் ஆகியன செய்யப் படுகின்றன. இவை தவிர வித்யா தானம் (கல்வி அளித்தல்), ஆரோக்கிய தானம் (இலவச சிகிச்சை) போன்றனவும் சிறந்த தானச் செயல்களாகப் பார்க்கப்படுகின்றன.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தானம் செய்பவரின் செயலை விட, தானம் பெற்றுக் கொள்பவரின் செயலே மேன்மையாகப் பார்க்கப் படுகிறது. ஏனெனில் தானம் பெற்றுக் கொள்பவர் இருக்கும் வரையில் மட்டுமே தானம் கொடுப்பவர் புண்ணியத்தைப் பெற முடியும் அல்லவா ! ஆகவே தானம் பெறுபவரின் நன்மதிப்பையும் மகிழ்ச்சியையும் பெற முயற்சிப்பதே தானம் செய்பவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
தைத்திரீய உபநிஷத்தில் தானம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதாவது,
“ஷ்ரத்தயா தேயம் “ – மரியாதையுடன் கொடுக்க வேண்டும்
“அஷ்ரத்தயா அதேயம் “ – மரியாதை இல்லையேல் கொடுக்கலாகாது
“ஷ்ரியா தேயம் “ – மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும்
“ஹ்ரியா தேயம்” – அடக்கத்துடன் (முழு மனதோடு)கொடுக்க வேண்டும்
“பியா தேயம்” – பயத்துடன் (‘இது போதுமானதாக இருக்க வேண்டுமே’ என்று) கொடுக்க வேண்டும்
“சம்விதா தேயம்” – நன்கு ஆராய்ந்து விவேகத்துடன் கொடுக்க வேண்டும்
தானம் கொடுப்பவருக்கு எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதை நாம் இதன் மூலமே அறியலாம். தானம் கேட்டு வருபவர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு பகவானின் அவதாரங்களில் இருந்தே சான்றுகளைக் காணலாம்.
- வறுமையில் வாடி வந்த குசேலரை பகவான் கிருஷ்ணன் பாத பூஜை செய்து ராஜ மரியாதைகளோடு நடத்தி, அவர் கேட்காமலே செல்வத்தை வாரி வழங்கினார்.
- வாமன உருவில் தானம் கேட்டு வந்த மஹாவிஷ்ணுவை மஹாபலி சக்கரவர்த்தி தகுந்த மரியாதையோடு நடத்தினான். அவர் யாசித்த மூன்றடி மண்ணை அவருக்கு அளித்து அவர் மூலம் நற்கதி அடைந்தான்.
எனக்கு தெரிந்த வரை இன்றும் தானம் செய்பவர் சாஸ்திரத்தில் கூறியபடி தானம் வாங்குபவரிடம் பணிவாக நடந்து பாத பூஜை செய்கிறார் என்றால் அது ஒரே ஒரு தானத்தில் மட்டுமே – அது கன்னிகாதானம்! அதையும் எள்ளி நகையாடும் வழக்கம் வந்து விட்டது என்பது தான் இன்றுள்ள நிலை.
இனியாவது நாம் தானம் பெறுபவர்களை இறைவனின் அம்சமாகவே கருதி அவர்கள் விருப்பத்தை (எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல்) பூர்த்தி செய்ய உறுதி பூணுவோம்.
Super Sir
Thank you very much sir !
Thanks. Great detailing and unknown perspectives.
Thanks Bala for your kind words.