கோவிலில் நிதமும் பஞ்சாங்கம் படிக்கும் சுப்ரமண்ய பட்டர் ஒரு சிறந்த சக்தி உபாசகர். எப்பொழுதும் அன்னை அபிராமியை தியானித்துக் கொண்டு கோவிலில் அமர்ந்திருப்பார். ஒரு நாள் சரபோஜி மன்னர் அன்னையின் தரிசனத்துக்காக கோவிலுக்கு வந்தார். தன்னை கவனிக்காமல் தியானத்தில் அமர்ந்திருந்த அவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப, “பட்டரே! இன்று என்ன திதி?” என்று கேட்டார் மன்னர். ஒளி வட்டத்தில் அம்பிகையின் திருமேனியைக் கண்டு பரவசமடைந்து கொண்டிருந்த பட்டர் “இன்று பௌர்ணமி” என்று பதில் கூறினார். ஆனால் அன்றோ முழு அமாவாசை. பட்டர் தன்னை ஏளனம் செய்வதாகக் கருதிய மன்னர் “அப்படியானால் இன்று இரவு நான் முழு நிலவைக் காண வேண்டும்.இல்லையேல் உமக்கு மரண தண்டனை. ” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தியானம் கலைந்து எழுந்த பட்டர் நடந்ததை உணர்ந்து, தான் செய்த காரியத்தை எண்ணி ஒருகணம் மலைத்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராய் தான் சொல்லியதை நிரூபிக்க அந்த அம்பிகையால் தான் முடியும் என்று எண்ணி “உதிக்கின்ற செங்கதிர்..” என்று தொடங்கும் பாடல்களைப் பாடினார். அந்த பாடல்களின் தொகுப்பே “அபிராமி அந்தாதி” ஆகும். அவர் செயலில் மகிழ்ந்த அன்னை அபிராமி தன் காதிலிருந்து ஒரு தோடை எடுத்து வானில் வீச, நிலவை விட பல மடங்கு ஒளி வானெங்கும் பரவியது. தன் பக்தன் அறியாமல் கூறிய சொல்லை மெய்யாக்கி காட்டினாள் அன்னை அபிராமி. சுப்ரமண்ய பட்டர் அபிராமி பட்டர் ஆன கதை இதுவே.
இந்த தொகுப்பில் மிக பிரபலமான பாடல் கீழே:
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
இந்த பாடலை தினந்தோறும் அம்பிகையை மனதால் நினைத்து பாடிவந்தால் தீராத வியாதிகள் நீங்கி மேலும் பல அபூர்வ பலன்கள் கிடைக்கும் என்பது சான்றோர்கள் வாக்கு. எனவே உங்கள் குழந்தைகளுக்கு அபிராமி அந்தாதியை அர்த்தத்துடன் சொல்லிக்கொடுங்கள். அப்படிச் செய்தால் அடுத்த வருட ஆடி மாதத்தில் அவர்களால் அபிராமி அந்தாதியை முழுதுமாகப் பாட முடியும்!
அபிராமி அந்தாதியையும் அதன் பலனையும் மிக அழகாக வர்ணிக்கும் பாடல் தான் “சின்னஞ்சிறு பெண் போலே…”. சில பாடல்கள் காலத்தால் அழியாதது. அப்படிப்பட்ட இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் எப்போது கேட்டாலும் குழந்தை உருவத்தில் அன்னை துர்க்கையின் தரிசனத்தைக் கண்ட ஒரு மனத்திருப்தி உண்டாகிறது.
இந்தப் பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள். இசை அமைத்துள்ளவர் டி ஆர். பாப்பா என்கிற சிவசங்கரன் அவர்கள். எட்டே வரிகள் கொண்ட இந்த சிறிய பாடல் குழந்தைகள் மனதில் சுலபமாக பதியும் என்பதால் இன்றே அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பாடச்செய்யுங்கள்!
இந்த ஆடி மாதத்தில் அன்னை அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.
சின்னஞ்சிறு பெண் போலே பாடலின் வரிகள்
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்