பிறப்பால் உயர்வு தாழ்வு ஏற்ப டுவதில்லை, நாம் செய்யும் செயல்கள் மட்டுமே உயர்வு தாழ்வை தீர்மானிக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
(குறள்: 972 அதிகாரம்: பெருமை)
இக்கருத்தை உணர்த்தும் ஒரு கதை மகாபாரதத்தில் உள்ளது. அதிகம் சொல்லப்படாத அக்கதையைப் பார்க்கலாம்.
அது அவனை சுற்றி வளைத்தது. பலசாலியான அவன் முயற்சி வீணானது. அதன் இறுக்கத்தில் தன்னுடல் மெலிந்து போவது போல் உணர்ந்தான். மெலிந்தது அவன் ஆணவம்.
அதன் கண்கள் தீப்பிழம்பு போல இருந்தது, சுவாசம் சிறு புயலைக் கிளப்பியது. பிளந்த அந்த மலைப்பாம்பின் வாய் குகை வாயில் போலிருந்தது.
குடிலில் கெட்ட சகுனம் தென்பட குழப்பத்திலிருந்த யுதிஷ்டிரனிடம் பீமன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை என்றாள் திரௌபதி. ரிஷி தௌம்யருடன்
யுதிஷ்டிரன் பீமனைத் தேடிச்சென்றான்.
வலிமை கைவிட அறிவைத் தேர்ந்தெடுத்தான் பீமசேனன். அதுவும் கைவிட செய்வதறியாது தவித்தான்.
அப்போது அங்கு வந்த யுதிஷ்டிரன் அந்த மலைப்பாம்பிடம் “தாங்கள் யார்? பீமனை விடுவிக்க தங்களுக்கு என்ன உணவு வேண்டும்? தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“தர்மராஜன் யுதிஷ்டிரனே! நான் நகுஷன். ஆயுவின் மகன். சந்திர வம்சத்தவன். மகரிஷி அகத்தியர் சாபத்தால் பாம்பாக மாறினேன். என் கேள்விகளுக்கு தக்க பதிலளித்தால் பீமனை விடுவிப்பதுமல்லாமல் சாபத்திலிருந்தும் விடுபடுவேன்.” யுதிஷ்டிரன் பதிலளிக்கத்தயாரானான்.
நகுஷன்: யார் பிராமணன்?
யுதிஷ்டிரன்: பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன். உண்மை, சுயகட்டுப்பாடு, இரக்கம், மன்னிக்கும் தன்மை, நன்னடத்தை, தயாள குணம் ஆகியவை அவசியம். பிரம்மம் சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டது. பிரம்ம ஞானமும் அவ்வாறே.
நகுஷன்: ஞானம் சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்கிறாய், அப்படியிருக்க சாத்தியமில்லை.
யுதிஷ்டிரன்: அது தங்கள் கருத்து. மேற்கூறிய குணங்களை உடையவனே பிராமணன்.
நகுஷன்: குணங்கள் நிர்ணயம் செய்யுமென்றால் பிறப்பு?
யுதிஷ்டிரன்: பிறப்பால் அனைவரும் சமமே. குலமோ, வர்ணமோ நிர்ணயிப்பது இல்லை. கலப்பு வர்ணத்தில பிறந்தவர்களும் மேன்மை அடைந்துள்ளனர். ரிஷிகக்ள் யாகம் செய்யும் தகுதியை குணத்தையும் நன்னடத்தையையும் வைத்தே தீர்மானித்தார்கள். சுயம்புவ மனுவும் (14 மனுக்களில் முதன்மையானவர்) அவ்வாறே கூறியுள்ளார்.
யுதிஷ்டிரனின் பதில்கள் மன நிறைவைத்தர பீமனை விடுவிக்க தயாரானான்.