நன்மை தரும் நமஸ்காரம்

To read in English, click here. 

நமஸ்கரித்தல் அல்லது தலை வணங்குதல் என்கிற வழக்கம் பல மதங்களில் உள்ளது. தலை வணங்குவதன் மூலம் நாம் பரம்பொருளின் மீதுள்ள நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்தில், கடவுளைத் தவிர பெரியவர்கள், அறிஞர்கள், மதத்தலைவர்கள் ஆகியவர்களை வணங்கும் பழக்கமும் உள்ளது.

https://www.ishtadevata.com/blog/five-types-of-namaskar.html

நமஸ்கரிப்பதில் பல வகைகள் உண்டு. அவை கீழே:

  • அஷ்டாங்க நமஸ்காரம் – எட்டு உடல் பாகங்கள் பூமியில் படுமாறு சேவிப்பது – பாதங்கள், மூட்டுக்கள் , கைகள், நெஞ்சு மற்றும் தலை
  • சாஷ்டாங்கம் – ஆறு பாகங்கள் – பாதங்கள், கைகள் மற்றும் தலை
  • பஞ்சாங்கம் – ஐந்து பாகங்கள் – மூட்டுகள், கைகள் மற்றும் நெற்றி
  • தண்டம் சமர்ப்பித்தல் – தண்டம் (குச்சி போல) – நெற்றி தரையைத் தொடுவது
  • ப்ரணாமம் – கை கூப்பி தலை வணங்குதல்

இவற்றில் ப்ரணாமம் என்பது அஞ்சலி முத்திரை (கையால் செய்யும் ஒரு சைகை) ஆகும். இதனை கடவுள், அறிஞர், குரு, நண்பர், பொதுமக்கள் என யாருக்கும் செய்யலாம். மற்ற வகை நமஸ்காரங்கள் பெரியவர்கள், அறிஞர்கள், ஆசிரியர், ஆச்சாரியர், மதத் தலைவர்கள் போன்றவர்களுக்கு உகந்ததாகும்.

நாம் பெரியவர்களை வணங்குவதின் மூலம் அவர்களின் அன்பையும் ஆசிகளையும் பெறுகிறோம். மஹாபாரதத்தில் யக்ஷ ப்ரஷ்னம் என்கிற பகுதியில், தர்மராஜன் தன மகனான யுதிஷ்டிரனிடம்,” எவ்வாறு ஒரு மனிதன் புகழையும் வலிமையயையும் அடைகிறான்?” என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர், ‘எவனொருவன் தன் பெற்றோரையும், ஆசிரியர்களையும், பெரியவர்களையும் வணங்கி அவர்கள் நன்மதிப்பைப் பெருகிறானோ அவனே வாழ்வில் பெருமை மற்றும் வலிமை ஆகியவற்றை அடைகிறான்” என்று பதில் அளித்தார்.

நாம் ஒருவரை நமஸ்காரம் செய்யும் போது நமது மரியாதை மற்றும் அடக்கம் வெளிப்படுகிறது. நமஸ்காரத்தை ஏற்பவரின் அன்பையும் தியாகத்தையும் நாம் புரிந்து கொண்டதையே அது விளக்குகிறது. அதனால் நமக்கு அவரின் ஆசியும் வாழ்த்தும் கிடைக்கிறது. பண்டிகை, பிறந்த நாள் போன்ற நல்ல நாட்களின் நாம் பெரியவர்களின் ஆசியைப் பெறலாம். நம் நாட்டின் கூட்டு குடும்ப முறையின் பலம் இது போன்ற பழக்கங்களின் மூலம் வெளிப்படுகிறது.

வழக்கமாக வயது குறைந்தவர் வயதில் முதிர்ந்தவரை நமஸ்காரம் செய்வர். சில சூழ்நிலைகளில் இந்த விதி மாறக்கூடும். உதாரணமாக நாட்டை ஆளும் அரசன் ஒரு ஆன்மிக குருவின் கால்களில் விழலாம்.அதே போல வயதில் முதிர்ந்த சிஷ்யர்கள் தங்கள் இளமையான குருவின் பாதங்களில் விழ விரும்புவார்கள். ஒரு சன்யாசி தன் குரு மற்றும் தாயைத் தவிர வேறு யாரையும் நமஸ்காரம் செய்யத் தேவை இல்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.

நமஸ்காரத்தால் விளையும் நன்மைகள்

நாம் ஒருவரை வணங்கும் போது அவருடைய நல்ல குணாதியசங்களைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறோம். இதன்மூலம் அவருடைய நற்குணங்கள் நம்மை மெதுவாக வந்தடைகின்றன. ஒருவரை வணங்குவதன் மூலம் நம்முடைய பணிவு அதிகமாவதோடு நம் ஆணவ எண்ணங்களும் அழிகின்றன. ஏனெனில் ஒருவரை நம்மை விட பெரியவர் என்று ஒப்புக்கொண்டு அவரை வழிநடத்துபவராக ஏற்றல் அவ்வளவு எளிதான காரியமல்ல!

அதே போல, யார் நம் வணக்கத்தை ஏற்கிறாரோ அவர் தானாகவே நம்முடைய நலன்விரும்பி ஆகி விடுகிறார். மஹாபாரத யுத்தத்தின் தொடக்கத்தில், யுதிஷ்டிரன் தன் தேரிலிருந்து இறங்கி எதிர் தரப்பில் இருந்த பிதாமகர் பீஷ்மர் , ஆசிரியர்களாகிய துரோணர், கிருபர் முதலியவர்களிடம் ஆசி கோரினான். அவர்களும் அவன் செய்கையில் மகிழ்ந்து அவனுக்கு வெற்றி அடைய வாழ்த்துக்களை வழங்கினர். பாண்டவர்கள் யுத்தத்தில் வெற்றி பெற இதுவும் ஒரு காரணம் எனக் கூறலாம். கடைசியாக, ஒருவர் அடிக்கடி கீழே விழுந்து வணங்குவதால் அவர் உடலுக்கும் பயிற்சி கிடைத்து அவர் புத்துணர்வு பெறுகிறார்.

நமஸ்காரம் செய்வதில் உள்ள பல நன்மைகளை மனதில் கொண்டு, நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பழக்கத்தை தவறாமல் உண்டாக்க வேண்டும். இதன் மூலம் நம் குழந்தைகள் பயன் பெறுவதோடு நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் இந்த செய்கை மதிப்பையும் மரியாதையையும் கூட்டும் அல்லவா?

Thedal Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *