To read this post in English, click here.
கேள்வி: சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா?
பதில்: பல நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது ‘நான் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்கிறேன்’ என்று கூறுகிறோம். இதன் மூலம் அதுவே நமது மேலான விருப்பம் என்பது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. பல நேரங்களில் ஒருவர் உயிர் துறக்கும் போது ‘அவர் சொர்க்கலோகப் பதவி அடைந்தார்’ என்றும் ‘வைகுண்ட பதவி/கைலாச பதவி அடைந்தார்‘ என்றும் மாறி மாறி கூறுறோம். அதனால் இவ்விரண்டும் ஒன்றோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கையே. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுவேறானவை.
நம் சம்பிரதாயத்தில் ஒரு பிறவியில் செய்யும் பாவ-புண்ணியங்களின் அடிப்படையில் ஒருவரின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அரசனாக இருப்பதும் ஏழையாக, கோழையாக, நோயாளியாக இருப்பதும் துன்பங்களை அனுபவிப்பதும் அவரவரின் கர்ம வினைகளாலேயே ஆகும். நற்காரியங்கள் செய்பவர் மனிதன் முதலான உயர்பிறவியில் பிறந்து நல்வாழ்க்கையை அனுபவிக்கிறார். தீய காரியங்களில் ஈடுபடுபவர் விலங்குகள் அல்லது கீழான நிலையில் பிறந்து அல்லல் படுகிறார்.
மனிதப் பிறவி ஒரு உயர்ந்தப் பிறவியாகக் கருதப் படுகிறது – அதற்கு காரணம், தன் செயல்களால் ஏற்படும் விளைவுகளை அறியும் மனநிலையில் மனிதன் இருக்கிறான். அத்தகைய மனிதன் மேலான புண்ணிய காரியங்களை செய்யும் போது அவன் புண்ணிய கணக்கு உயர்ந்து அனைத்து மகிழ்ச்சிகளையும் தரக் கூடிய சொர்க்க லோகத்தை மறுபிறவியில் அடைகிறான். ஆனால் இது நிரந்தரமானது அல்ல. அந்தப் பலன்கள் தீரும் போது அவன் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான். அதே போல பாவம் செய்து நரகத்தில் உழல்கின்றவனும் அந்தப் பலன் தீர்ந்து மறுபடி இங்கேயே பிறக்கிறான். பாவ-புண்ணியங்கள் சேர்வதன் மூலம் முடிவில்லாத பிறப்பு-இறப்பு என்னும் சூழலில் சிக்கித் தவிக்கிறான்.
இந்த முடிவில்லாத வட்டத்தில் இருந்து விடுபடுவதே மோட்சமாகும். ஒருவருக்கு மோட்சம் கிட்டும் போது இந்த உலக வாழ்க்கை என்னும் சங்கிலி அறுபடுகிறது. அவர் இறைவனின் அடியில் இடைவிடாது தொழும் பெரும் பேற்றைப் பெறுகிறார். நாம் அனைவரும் இந்த நிலையை அடையவே ஆசைப் படவேண்டும். இந்நிலையை அடைய முக்கியமான விதி – பாவ புண்ணியங்கள் இரண்டுமே பூஜ்யமாக இருக்க வேண்டும். பாவம் செய்யாமல் இருக்க முயலலாம், ஆனால் புண்ணியம் செய்யாமல் இருப்பது சரியா? என்ற கேள்வி எழுகிறது. நம் பெரியவர்கள் இதற்கு கூறும் விளக்கம், ஒரு நற்செயலை அதன் பயனை எதிர்பார்க்காமல் செய்யும் போது அந்த செயலுக்கான புண்ணியம் நம்மை அடைவதில்லை. அத்தகைய எண்ணத்தோடு சுகதுக்கங்களை ஒன்றாக பாவித்து இறைவனை தியானித்தோமானால் மோட்சத்தை அடையலாம்.
இதை விளக்கும் பகவத் கீதை ஸ்லோகங்களின் பொருள் கீழே:
அத்யாயம் 9 – ஸ்லோகம் 20:
எவரொருவர் வேதத்தில் கூறியபடி யாகங்கள் முதலியவற்றால் என்னை வணங்கி தங்கள் பாபங்களை ஒழிக்கிறார்களோ அவர்கள் தங்கள் செயல்களின் பலனால் இந்திர லோகத்தை அடைந்து அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
அத்யாயம் 9 – ஸ்லோகம் 21:
அவ்வாறு அந்த பலனை அனுபவிப்பவர்கள், தங்கள் கணக்கைத் தீர்த்த பின் மீண்டும் இப்பூமியில் பிறந்து இங்கு தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். இந்த பிறப்பு-இறப்பு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
அத்யாயம் 9 – ஸ்லோகம் 28:
எப்பொழுது நீ உன் காரியங்களின் பலன்களை என்னிடம் முழுமையாக அர்ப்பணிக்கிறாயோ அப்போது பாப-புண்ணியங்களின் இருந்து நீ விடுபடுகிறாய். அவ்வாறு விடுபட்டு நீ என்னிடம் நிரந்தரமாக வந்தடைகிறாய்!
நாமும் ஆழ்வார் பாடலில் கூறியதான ‘இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,அரங்கமா நகருளானே!’ என்பதுவாய் கீழான பலன்களில் ஆசை வைக்காமல் பெரு வீடு பெரும் முயற்சிகளில் ஈடுபடுவோமாக!
இது போன்ற கேள்வி பதில்களை மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
This question and answer is enlightening Ranga!
Thanks Navneetha!
That is why we include this in our daily prayers…
காயேன வாசா மனஸேன்த்³ரியைர்வா
பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபா⁴வாத் ।
கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி