கேள்வி: ஹைதராபாத்தில் இருந்து திரு கோபாலகிருஷ்ணன் கேட்கிறார், “இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் நாமம் எது? ஏன்?“
பதில்: இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாமம், ‘ராம’ நாமம் ஆகும். ஸ்ரீமன் நாராயணன் இந்த பூவுலகில் ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழிகாட்டினான். ராம நாமமே தலைசிறந்த நாமம் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று உபதேசித்து அதனைச் தொடர்ந்து சொல்லுமாறு கட்டளை இட்டார். ராம நாமத்தைத் தவறாக உச்சரித்தும் கூட ரத்னாகரன் வால்மீகி முனிவராக மாற முடிந்தது.
அனைத்து உயிர்களின் நண்பன்
தன்னுடைய வாழ்நாளில் ராமன் அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டினான். குகன் (படகோட்டி), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (மூதாட்டி), விபீஷணன் (அசுரர் குலம்) போன்ற பலரைத் தன் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் ஏற்றுக்கொண்டான். இதில் ஒரு அணிலும் அடங்கும். ராமன் தன்னிடம் சரணம் என்று வருபவர் யாராக இருந்தாலும் அவருக்கு அபயம் அளிக்கும் சபதத்தை ஏற்றிருந்தான். இத்தகைய நன்னடத்தையால் தான் அவன் புருஷோத்தமன் என்று போற்றப்படுகிறான்.
ராம நாமம் ராமனை விடச் சிறந்தது
இலங்கை செல்ல வானர சேனை பாலம் அமைத்த போது, இராமன் என்று பெயர் எழுதிய பாறைகள் கடலில் மிதந்தன. அதைக் கண்ட ராமன் தானே ஒரு பாறையை கடலில் எறிய அது மூழ்கியது. எனவே ராமனை விட ராம நாமம் மிகச் சிறந்தது. இந்த காரணத்தால் தான் ராமபக்த ஹனுமான் ராமன் வைகுண்டம் சென்ற பிறகு அவனைப் பின்தொடர்ந்து செல்லாமல் இப்பூவுலகில் தங்கி அவன் நாமத்தைப் பாடிக் கொண்டு இங்கேயே வசிக்கிறார்.
ராம நாமம் எழுத எளிது
மற்ற நாமங்களை காட்டிலும் ராம நாமம் சொல்லவும் எழுதவும் மிக எளிது. பக்தர்களில் சிலர், ஜெபிப்பதை விட நாமத்தை எழுத விரும்புவார்கள். அவர்களுக்கு ராம நாமம் அனைத்து மொழிகளிலும் எழுத லகுவாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் நாமங்களை எழுதும் போது அவர்களின் கையெழுத்து மேம்பட்டு பிற குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான போட்டியும் உருவாகிறது.
ஹனுமார் கோவில்களிலும் ஜெபிக்கலாம்
ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், இந்த மந்திரத்தை மட்டுமே மற்றொரு கடவுளுக்கு முன்னிலையிலும் ஜெபிக்கலாம். ஹனுமார் முன் ராம நாமத்தை ஜெபித்தால் ராமரின் அருளோடு ஹநுமாரின் அருளும் கூடச் சேரும். எனவே தான் சுந்தரகாண்டம் போன்ற பாராயணங்களின் போது ஒரு வெற்று ஆசனம் அல்லது மணையை போட்டு வைப்பர். ஹனுமார் அங்கு வந்து ராம கதையை காது குளிரக் கேட்பதாக ஐதீகம்.
ராம நாமத்தால் பிறவிப் பயனை அடைந்தவர்களின் சிலர்: ஸ்ரீ ராமானந்தர் (ராமானந்தி சம்பிரதாயத்தை தோற்றுவித்தவர், கபீர்தாசர், சமர்த்த ராமதாசர், தியாகராஜர் (கர்நாடக சங்கீதம்) மற்றும் பத்ராச்சல ராமதாசர்.
நாமும் ராம நாமத்தை ஜெபித்து இன்பம் அடைவோமாக !
***
Join us in this Thedal journey & immerse yourself into Sanatana Dharma. Become Thedal subscriber today!
Dear Sir, I am from Kerala. I could not read Tamil letters.I want to read your blogs in English. In your blogs one extension of “Click here to read in English ” is there. But it is not working as there is no places for click. Kindly guide me in this regard.
Dear Sivaprakash, very glad to know about your interest in Thedal articles. I checked the links and they are working for me, not sure if you have any technical challenges.
You can try the below URL to read this post in English. Thanks.
https://thedal.info/qa-12-most-powerful-name-of-the-lord/