அறிந்த அறுபடை வீடுகளும் அறியாத உண்மைகளும்

கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுதல் மிக முக்கியம். அதை விட முக்கியமானது, அந்தக் கோவிலின்   ஐதீகத்தையும்  அந்த கோவிலின் வரலாற்றையும்  படித்து தெரிந்துக்கொள்ளுவது. கோவில் பிரகாரத்தில் பல வரலாற்று உண்மைகளை நாம் காணலாம். உதாரணத்துக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் சிலையை டச்சு  (Dutch ) நாட்டவர் கடத்த முயன்றனர் என்பது பற்றியும், “சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா…”  போன்ற ஒளவையார்-முருகன் உரையாடல் நடந்த இடத்தைப் பற்றியும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அதன் மூலம் நம் கலாச்சாரத்தின் மீது அவர்களின் ஈடுபாடு அதிகமாகும்.

இந்த பதிவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் பற்றி  பலரும் அறிந்திராத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

 

தமிழ் ஆண்டுகளை போற்றும் சுவாமிமலை


சுவாமிமலை கோவிலில் உள்ள அறுபது படிகள்  அறுபது தமிழ் ஆண்டுகளை குறிப்பதாக சொல்லபடுகிறது. முருகப்பெருமான் இந்த இடத்தில் தனது தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரம் “ஓம்” என்பதின் பொருளை விளக்கினார்.

புராண குறிப்புகளின்படி, சிவன் பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள் அனைவரும்  கைலாசத்தில் கூடியதால் பூமி ஒரு பக்கமாக சாய்ந்தது. பூமியை  சமப்படுத்த அகஸ்தியர் தெற்கு நோக்கி நகர்ந்தார். அவர் இரண்டு மலைகளை இடும்பன் உதவியோடு கொண்டு சென்றார். ஒரு மலை பழனியில் வைக்கப்பட்டது, மற்றொன்று சுவாமிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

பல வருடங்கள் கடலில் இருந்த திருச்செந்தூர் முருகன் சிலை

முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வணங்கினார். ஆகையால் தான் அந்த கோவிலில் முருகப்பெருமான் கையில் மலருடன் நமக்கு காட்சியளிக்கிறார்.

ஒரு காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் டச்சு (Dutch) கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் திருச்செந்தூரை விட்டு வெளியேறும்போது மக்களின் எதிர்ப்பை மீறி முருகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்றார்கள். புயலில் சிக்கிக்கொண்டதால் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு சிலையை நடுக்கடலில் போட்டுவிட்டு சென்றார்கள். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு முருக பக்தர் கனவில் தோன்றிய முருகப்பெருமான்  சிலை இருக்கும் இடத்தை காண்பித்துக்கொடுத்தார். அதன் பிறகு 1653ஆம் ஆண்டு கடலில் இருந்து சிலை  மீட்கப்பட்டது.

 

பழமுதிர்சோலையில் ஔவையாருக்குக் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவம்

“சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா…” – இந்த மிகவும் பிரசித்தி பெற்ற முருகன்-ஔவையார் உரையாடல் பழமுதிர்ச்சோலை கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு நாவல் மரத்தடியில் தான்  நடந்தது. நாவல் மரத்தில் பழங்கள்  வழக்கமாக ஆடி-ஆவணி மாதங்களில் மட்டுமே காய்க்கும். ஆனால்  இந்த இடத்தில் உள்ள மரத்தில் ஐப்பசி மாதத்தில் (அக்டோபர்-நவம்பர்) பழங்களைக் காணலாம்.

அறுபடை வீடு கோவில்களில் இங்கு மட்டும் தான் முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் காட்சியளிக்கிறார். இந்த மலையின் உச்சியில் ராக்காயி அம்மன்  கோவில் உள்ளது. அங்கு நூபுர கங்கா என்ற இயற்கை நீரூற்று அமைந்துள்ளது. இது விஷ்ணுவின் கணுக்காலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த நீரூற்று அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்துதான்  இளங்கோவேடிகள் சிலப்பதிகாரம் எழுதியதாகக் கூறப்படுகிறது .

 

ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் பழனிமலை முருகர்

முந்தைய  காலத்தில் பழனி திரு ஆவினன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டது.  திரு – லட்சுமி தேவி, ஆ – காமதேனு, மற்றும் இனன் – சூரியபகவான் ஆகியோர் தங்கள் செல்வங்களை முருகப்  பெருமானுக்கு வழங்கி வழிபட்ட இடம் என்பதால் திரு ஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது. இந்த கோவிலில் மட்டும் தான் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

பழனி மலை அடிவாரத்தில் குழந்தை வேலாயுதஸ்வாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி கோவிலை விட பழமையானது என்று கூறப்படுகிறது.

 

வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடக்கும் குகைக் கோவில்  – திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் தான் முருகர்-சூரபத்மன் இடையில் முதல் போர் நடந்தது என்றும், சூரபத்மனின் மகன்கள் இங்குதான் கொல்லப்பட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது.  முருகப்பெருமானின் நவவீரர்கள் என்று அழைக்க படும் வீரபாகு, வீரகேசரி, வீரமஹேந்திரன், வீரமஹேஸ்வரன், வீரரக்ஷன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன் மற்றும் வீரசுரன் ஆகியவர்களுக்கு இங்கு தனி சந்நிதிகள் உள்ளது. குகைக் கோவில் என்பதால் வேலுக்கு மட்டும் இங்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…” என்று சிவபெருமானுடன் வாதிட்ட பாவத்திலிருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள  நக்கீரர் தவம் செய்த இடம் திருப்பரங்குன்றம். தவம் செய்யும் போது நக்கீரர் ஒரு பிசாசால் குகை சிறைக்குள் அடைக்கப்பட்டார். அவர் திருமுருகாற்றுப்படை பாடியதன் மூலம் முருகன் அருளை பெற்றார்.  முருகப்பெருமான் பிசாசைக் கொன்று நக்கீரரை விடுவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் தான் தேவயானி முருகப்பெருமானை மணந்தார். முருகப்பெருமான் மற்ற அறுபடை வீடுகளில் நிற்கும் வடிவத்தில் அருளும்போது, அவர் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த நிலையில் தேவயானியுடன் காட்சியளிக்கிறார்.

 

கந்த சஷ்டி திருவிழா நடைபெறாத கோவில்  – திருத்தணி

Thiruthani Thedal

திருத்தணி முன்னதாக திருத்தணிகை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்த பின்னர் முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த இடமானதால், கந்த சஷ்டி திருவிழா இங்கு நடத்தப்படுவதில்லை. இந்த இடத்தில் தான் வள்ளி முருகப்பெருமானை மணந்தார்.

முருகப்பெருமானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுதலைப்பெற்ற பிரம்மதேவன் தன் சக்தியை திரும்ப பெற தவம் இருந்த இடம் இது. துவாபர யுகத்தில் அர்ஜுனன், தனது தீர்த்த யாத்திரையின் போது, முருகப்பெருமானிடம் ஆசிப்பெற்றது இங்குதான்.

இந்தத் திருத்தலங்களுக்கு செல்லும் முன் நீங்கள் மேலே உள்ள விஷயங்களை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். அவர்களும் ஆர்வத்துடன் உங்கள் ஆன்மீகப் பயணத்தில் பங்கு கொள்வார்கள்! 

 

கந்த ஷஷ்டி கவசத்தின் சரியான அர்த்தத்தை புரிந்துக்கொண்டு, அதை அதிகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காக்க காக்க கனகவேல் காக்க

3 thoughts on “அறிந்த அறுபடை வீடுகளும் அறியாத உண்மைகளும்”

  1. பழனியாண்டவர் கோயில் பழனி மலையின் மேலே இருக்கிறது. திரு ஆவினன்குடி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *