Click here for English
கேள்வி :சென்னையில் இருந்து திரு. ஆனந்த் குமார் கேட்கிறார், “ சுப காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள் நடக்க இருக்கும் சில தினங்களுக்கு முன்பே வெளியில் சாப்பிடுவது மற்றும் வெங்காயம் பூண்டு முதலான சில உணவுப் பொருட்களைத் தவிர்க்கும் பழக்கம் நம் பண்பாட்டில் இருக்கிறதே, இது எதற்காக? “
பதில்:நமது முன்னோர் வகுத்த படி,மனிதனின் மனது மூன்று குணங்களை உள்ளடக்கியது . அவை சத்வம் (அமைதி, தெளிவு,புதிய சிந்தனைகளைக் கொடுக்கக் கூடியது), ரஜஸ் (குழப்பம், ஆசாபாசங்கள் , கோபம்) மற்றும் தமஸ் (மந்த நிலை, இருள், சோம்பேறித்தனம், பலஹீனம்). நாம் செயல் படுவதற்கு இந்த மூன்று குணங்களும் வேண்டுமென்றாலும், ரஜோ மற்றும் தமோ குணங்கள் குறைவாகவே தேவைப்படுகின்றன.
இதற்கேற்றார் போல நமது உணவுப் பழக்கங்களும் சாத்வீகம், ரஜோ மற்றும் தமோ உணவுகளாக ஆயுர்வேதத்தில் பிரிக்கப் பட்டிருக்கின்றன. சாத்வீக உணவுகளை உண்ணுவதால் மனத்தூய்மை, நேர்மை, புத்துணர்ச்சி முதலியன உண்டாகின்றன. பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள்,தானியங்கள் முதலியன இந்தப் பிரிவில் அடங்கும். ரஜோ உணவுகள் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடுபவை . போர் காலங்களிலோ அல்லது கடும் உழைப்போ தேவைப் படும் தருணங்களில் இத்தகைய உணவுகள் பலன் அளிக்கும். காபி, தேநீர் மற்றும் தெம்பைத் தரும் மற்ற பானங்கள், கார உணவுகள், உப்பு முதலியன ரஜோ உணவுகள் ஆகும். தமோ உணவுகள் நம் உடல் மற்றும் மனதிற்கு ஒரு மந்தமான ஒரு நிலையை ஏற்படுத்தும். இந்த வகை உணவுகள், ஒரு நோயிலிருந்தோ அல்லது காயமடைந்து மீளும்போதோ உடலைத் தளர்த்தி வலியை ஆறச் செய்வன. இறைச்சி, மீன், வெங்காயம், பூண்டு, காளான் , மது வகைகள் இந்தப் பிரிவில் அடங்கும்.
மேல் கூறிய விவரங்களுக்கு அறிவியல் ஆதாரங்கள் பல உள்ளன. ஒரு ஆய்வில் சாத்வீக உணவுகள் மூலம் அதிக ஆற்றல் குறைந்த கொழுப்புச் சத்து கிடைப்பதாகவும், தமோ உணவுகள் மூலம் குறைந்த ஆற்றல் மற்றும் அதிக கொழுப்புச் சத்து கிடைப்பதாகவும் கண்டு அறியப் பட்டுள்ளது. உணவுப் பழக்கத்துக்கும் மனதின் போக்கிற்கும் உள்ள தொடர்பும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அதே போல வெளியில் உணவருந்தும் போது நமக்கு உணவு அளிப்பவரின் மனநிலையை நம்மால் அறிய முடிவதில்லை. உணவு சமைப்பவர் மற்றும் பரிமாறுபர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் நம் உணவின் தன்மையை மாற்றும் சக்தியைப் பெற்றுள்ளன. இதற்கு மஹாபாரதம் ஒரு சிறந்த உதாரணமாகும். துரியோதனின் சபையில் இருந்த வரை பீஷ்ம பிதாமகர் அவன் செய்த தீமைகளை ஏதும் சொல்லாமல் பொறுத்துக் கொண்டார். யுத்தபூமியில் யுதிஷ்டிரனுக்கு தர்மத்தை உபதேசம் செய்யும் போது அவர் உடம்பில் தீயவன் தந்த உணவு ரத்தமாகி வெளியேறி இருந்தது. அதன் பிறகே அவர் தெளிவு பெற்றார். எனவே உணவின் தன்மை மட்டுமன்றி அதனை நமக்கு வழங்குபவர்களின் தன்மையும் தூயதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே ஒரு நற்காரியம் அல்லது மூதாதையர் சம்பந்தமான காரியம் செய்வதற்கு முன் மனதை ஒருநிலைப் படுத்துதல் மிகவும் அவசியமாகும். அதற்கு சாத்வீக உணவு மட்டுமே உதவும் என்பது தெளிவாகிறது.
முந்தைய கேள்விகள்
5. பரிச்சயமில்லாத உறவினரின் மரணத்திற்கும் சடங்குகளைப் பின்பற்ற வேண்டுமா?
4. ஹிந்துக்களின் புனித நூல் எது?
3. வீட்டில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம்?
2. கோயிலுக்கு செல்லும் போது பாரம்பரிய உடை தான் அணிய வேண்டுமா?
1. பொருள் தெரியாமல் ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்லலாமா?
குறிப்புகள்
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4479904/