
மகர சங்கராந்தி தினமான இன்று ஹரிஹர புத்திரனான ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரி மலையில் கூடுவார்கள். அவர் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியதைப் பற்றி அழகாக விளக்கியுள்ள ஒரு திரைப்பட பாடலைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். “பொய் இன்றி மெய்யோடு..” என்று தொடங்கும் இப்பாடல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்பொழுது நம் மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை எளிமையான வரிகளால் விளக்குகிறது. இந்த பாடல் 1980ல் வெளி வந்த “சரணம் ஐயப்பா” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதியவர் படத்தின் இயக்குனர் தசரதன் அவர்கள். இதற்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்.
கடவுளின் தரிசனம் கிடைக்கத் தேவை பண்பாடு. தூய அன்போடு கடவுளை பூஜித்து வந்தால் நம் எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பதைத் சொல்லும் இப்பாடலைக் கேட்காத ஐயப்ப பக்தர்களே இருக்க முடியாது எனலாம்.
மேலும் சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோவிலைப் பற்றி ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்களையும் நாம் இங்கு பார்ப்போம்:
1. இங்கு இருக்கும் ஐயப்பன் விக்ரகம் பெருமாள் அவதாரமான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு தீ விபத்தில் இது சேதம் அடைந்ததால் மற்றொரு பஞ்சலோக சிலை 1950ல் பிரதிஷ்டை செய்யப் பட்டது.
2. ஒரு காலத்தில் இந்தக் கோவிலின் பாதை முற்றிலுமாக அடைபட்டுப் போயிற்று. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு 12ஆம் நூற்றாண்டில் பந்தள அரச வம்சத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அரசகுமாரன் மீண்டும் கோவிலுக்குச் செல்லும் வழியை கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
3. “ஹரிவராசனம்” என்ற சமஸ்க்ரித பக்திப் பாடலை சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவும் நடை சாத்தப்படும்போது பாடுகிறார்கள்.
4. “எவரெல்லாம் எந்த வித ஆசைகளுமின்றி 41 நாள் விரதமிருந்து (ஒரு மண்டலம்) என்னைக் காண சபரிமலைக்கு வருகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் என் தரிசனமும் அருளும் கிடைக்கும்” என்று அய்யப்பன் தன் தந்தையிடம் கூறி விட்டு பூலோகத்திலிருந்து விடைபெற்றார். அது முதல் அவர் பக்தர்கள் மனக் கட்டுப்பாடோடு விரதமிருந்து, தினமும் இருவேளை ஐயப்பனை மனதில் பூஜித்து பின் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்கச் செல்கின்றனர்.
5. சபரி மலையில் வாவர் என்னும் வேற்று மதத்தவரின் நினைவிடமும் இருக்கிறது. இதைப் பற்றி பல கதைகள் உலா வருகின்றன. அவர் ஐயப்பனின் நண்பராக இருந்து பல போர்களில் ஐயப்பனின் உதவியதால் அவரின் நினைவிடம் அங்கு அமைந்து விட்டதாக சிலர் நம்புகிறார்கள். பல பக்தர்கள் அங்கு சென்று தொழுவதையும் பார்க்கிறோம். ஆனால் க்ருத யுகத்தில் விஷ்ணுவின் அவதாரமான மோஹினிக்கு பிறந்த ஐயப்பனும் கிட்டத்தட்ட 1500 வருடங்கள் முன் தோன்றிய மதத்தில் பிறந்த வாவரும் நட்பு பாராட்டியத்திற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் நாம் உணர வேண்டிய உண்மை இதுதான் – சனாதன தர்மம் எப்படி வேறு மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடியது. இதற்கு சபரி மலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பொய் இன்றி மெய்யோடு… பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். யேசுதாஸ் அவர்கள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். ஸ்வாமியே சரணமய்யப்பா!
பொய் இன்றி மெய்யோடு
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா ஸ்வாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு
அய்யப்பா ஸ்வாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
நல்ல பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்
அய்யப்பா ஸ்வாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை